உலகோரை இன்றளவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் கட்டடக்கலை எதுவென்று கேட்டால், அவசியம் தஞ்சை பெரியக்கோயிலை சொல்லியே ஆக வேண்டும். அத்தகைய அதிசய கோயிலை நிர்மாணித்த மன்னன் ராஜராஜ சோழன் அதை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்கவும் தக்க ஏற்பாடுகளை செய்து வைத்திருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
தஞ்சை பெரிய கோயிலில் எவ்வளவு பெரிய அளவில் மழை பெய்தாலும், நீர் தேங்கி நின்று பார்த்திருக்க மாட்டோம். ஒருசில நிமிடங்களிலேயே மழை நீர் வடிந்துவிடும். இதற்கான காரணம் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலின் கட்டுமான அற்புதங்களில் அதன் மழைநீர் வடிகால் அமைப்பும் ஒன்றாகும்.
கோயிலின் உள்ளே இருக்கும் வடிகால்கள் கோயிலில் இருக்கும் நீரை வெளிப்பிராகாரம் வழியாக அருகிலுள்ள சிவகங்கை குளத்திற்குக் கொண்டு செல்லும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றும் நாம் தஞ்சை பெரிய கோயிலுக்குச் செல்லும்போது இதை நேரில் காண முடியும்.
அதுபோல, சோழர்கள் காலத்தில் சாலைகளின் நடுவே மேடாகவே வடிவமைக்கப்பட்டன. இதனால் மழை பொழியும் சமயங்களில் சாலை பயணமும் தடைப்படவில்லை. நீர் நிலைகளை நோக்கிச் செல்லும் மழை நீரின் பயணமும் தடைப்படவில்லை. சோழர்கள் பொதுவெளியில் தங்கள் உட்கட்டமைப்புகளை வடிவமைக்கும்போது நீர் மேலாண்மையையும் சேர்த்தே மனதில் வைத்து திட்டமிட்டு செயல்பட்டனர்.
மன்னன் ராஜராஜ சோழனின் காலத்தில்தான் நீர்நிலைகளை உருவாக்கி பாதுகாக்கவும், நீரை சமமாகப் பங்கிட்டுக் கொடுக்கவும், ‘ஆயக்கட்டு’ என்ற கிராம சபை உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் வரலாற்றில் மிகவும் பிரம்மாண்டமான ஏரிகள் வெட்டப்பட்ட காலக்கட்டம் என்று சோழர்கள் காலத்தைக் கூற முடியும்.
அதிலும், ராஜராஜனின் காலத்தை சொல்லலாம். தொழில்நுட்பத்தை விவசாயம், கட்டடக்கலை, மழைநீர் சேமிப்பு என்று அனைத்திலும் புகுத்தி அதன் மூலமாக சிறப்பாக மக்களை ஆட்சி செய்த அரசன்தான் ராஜராஜ சோழன். அவரை ‘தொழில்நுட்பத்தின் முன்னோடி’ என்று சொன்னாலும் அது மிகையாகாது. அதுமட்டுமில்லாமல், 2000 ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் கரிகாலச்சோழன் கட்டிய கல்லணையும் சோழர்களின் தொழில்நுட்ப அறிவை உலகிற்கு இன்றைக்கும் பறைசாற்றிக் கொண்டுதான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.