
பழனிமலையில் முருகப்பெருமான் தண்டாயுதபாணியாக அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் எண்ணற்ற அதிசயங்கள் நிகழ்வதாக சொல்லப்படுகிறது. அதைப்பற்றி விரிவாக இந்தப்பதிவில் காண்போம்.
இங்குள்ள முருகப்பெருமானின் சிலை நவபாஷாணத்தில் உருவாக்கப்பட்டது. அதாவது ஒன்பது வகையான விஷங்களை சரியான விகிதத்தில் கலந்து அத்துடன் மூலிகைகள் சேர்த்து போகரால் செய்யப்பட்ட அற்புதமான சிலையாகும். இந்த சிலைக்கு ஒருநாளைக்கு ஆறுமுறை அபிஷேக ஆலங்காரங்கள் செய்யப்படுகிறது. விக்ரஹத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்களான நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி மட்டும்தான் பயன்படுத்தப்படுகிறது.
இரவில் முருகனின் மார்பில் மட்டுமே வட்ட வடிவில் சந்தனக்காப்பு சாத்தப்படுகிறது. விக்ரஹம் மிகவும் சூடாக இருக்கும். இரவு முழுவதும் அந்த விக்ரஹத்திலிருந்து நீர் வெளிப்படும் என்று கூறப்படுகிறது. தண்டாயுதப்பாணி சிலையில் மூக்கு, வாய், கை, தோல், விரல்கள், நெற்றி, ருத்ராக்ஷம் மிகவும் அற்புதமாக உளியால் செதுக்கப்பட்டதுபோல தெளிவாக இருக்கும். இது போகரின் கைவண்ணமாகும்.
இந்த சிலையை போகர் செய்து முடிக்க ஒன்பது வருடங்கள் ஆனதாக சொல்லப்படுகிறது. அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களின் உத்தரவிற்கு பிறகுதான் போகர் இத்தகைய சக்தி வாய்ந்த சிலையை செய்ய முடிவு செய்ததாக நம்பப்படுகிறது. இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களில் சென்று தேர்வு செய்து 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொல்படி தயார் செய்தனர்.
தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிக்ஷ்டை செய்தார். இதனால் மலைநாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குலதெய்வமானார். பழனியில் இரண்டு மரகதலிங்கம் உள்ளது. ஒன்று முருகன் சன்னதியிலும், இன்னொன்று போகர் சமாதியின் மீதும் உள்ளது.
இரவு நேரத்தில் பழனி முருகன் கோவிலில் நடக்கும் அதிசயம் பற்றி தெரியுமா? இரவில் பூஜைகள் முடிந்தவுடன் முருகனின் நவபாஷாண சிலைக்கு சந்தனங்களை பூசுவது வழக்கம். காலையில் அந்த சந்தனங்களை எடுக்கும்போது பச்சை நிறமாக சிலை காட்சியளிப்பதாக சொல்லப்படுகிறது.
நவபாஷாண சிலைகளில் இருந்து உருவாகிற வியர்வை துளிகள்தான் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இத்தகைய அதிசயத்தை நிகழ்த்துகின்ற நவபாஷாண சிலையை செய்த போகர் ஆதிகாலத்தில் எப்படிப்பட்ட சக்தி வாய்ந்த சித்தராக இருந்திருப்பார் என்பது ஆச்சர்யமாக உள்ளது.