உடல் மொழிகளால் உலகை ஆண்ட சார்லி சாப்ளினின் 'முதல் சினிமா' சுவாரசியங்கள்!

charlie chaplin
charlie chaplin
Published on

உலகம் ஒரு நாடக மேடை என மனிதர்கள் அடிக்கடி சொல்வதுண்டு. அந்த நாடக மேடையில் தனக்கான இடத்தை பிடித்து இன்னும் மக்கள் மனங்களில் நீங்காமல் இடம் பிடித்திருப்பவர் ஹாலிவுட் நடிகர்  சார்லி சாப்ளின். தன்னுடைய பலவீனம் எது? என்று மற்றவர்கள் கூறினார்களோ அவை அனைத்தையும் தன்னுடைய பலமாக மாற்றி இன்றுவரை மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருப்பவர் ஹாலிவுட் கலைவாணர் என்று அழைக்கப்படும் சார்லி சாப்ளின். அவர் நடித்த முதல் சினிமாவின் சுவாரசியங்களை இப்பதிவில்  தெரிந்து கொள்ளலாம். 

சார்லி சாப்ளின் முதன் முதலாக நடித்து வெளிவந்த படம் Making a Living. இதன் பொருள் வாழ்வதற்கான வழி அல்லது வாழ்க்கைக்கான வழி. இந்தப் படத்தின் தலைப்பு உண்மையிலேயே சார்லியின் நிஜ வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமானதாகவே இருந்தது. எப்படி என்று பார்ப்போம்.

சார்லி சாப்ளின் அப்பொழுதுதான் நடிப்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு சேர்ந்திருந்தாராம். படத்தின் தயாரிப்பாளருக்கும் என்ன படம் எடுக்க வேண்டும் என்று பெரிதாக திட்டமில்லையாம். அப்பொழுது ஒரு கார் பந்தயத்தை எடுக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தார்களாம். அந்த கார் பந்தயத்தில் சில குழந்தைகளும் பங்கெடுத்துக் கொள்வது போல முடிவு செய்யப்பட்டு இருந்ததாம். அதனால் படப்பிடிப்பு குழு சார்லினையும் உடன்  அழைத்துக் கொண்டு சென்றார்களாம். ஆனால் சார்லிக்கு என்ன வேடமென்றோ என்ன உடை என்றோ எந்த வித விளக்கமும் கொடுக்கப்படவில்லையாம். களத்தில் சென்று மளமளவென்று படப்பிடிப்பு வேலைகளை ஆரம்பித்து விட்டார்களாம். கார்பந்தயம் தொடங்கி கேமராவை சரியான கோணத்தில் வைத்ததும் சார்லி சாப்ளின்  ஓடி வந்து லென்ஸ்க்கு முன்னால் நின்று கொண்டாராம்.

அங்கு வந்த இயக்குனர் சார்லினை தள்ளி விடுகிறார். முதல் கார் சென்று விடுகிறது, ஆனால் அந்த காரை படம் பிடிக்கவில்லை. அடுத்த கார் வருகிறது, இப்பொழுதும் சார்லின் வந்து அந்தக் கார் முன்னால் நின்று கொள்கிறார். இப்பொழுது அந்த இயக்குனர் வந்து அவரை எட்டி உதைக்கிறார். சாப்ளின் கீழே விழுந்து விடுகிறார். இப்படியாக ஒவ்வொரு காரும் செல்லும்போது சாப்ளின் அந்த காரை மறித்துக்கொண்டு கடைசி வரை கார்களை படம் பிடிக்கவே விடவில்லை.

இயக்குனர் மிகவும் கோபப்பட்டு தலையை பிய்த்துக்கொண்டு தாம் தூம் என்று கத்திக் கொண்டிருந்தாராம். ஆனால் சாப்ளின் அப்பொழுதும் தன் முகத்தை அஷ்ட கோணலாக்கி காட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தாராம். படப்பிடிப்பு, இயக்குனர் எதிர்பார்த்த மாதிரி வரவில்லை. வேறு வழி இல்லாமல் அந்த படத்தை தயாரிப்பாளரிடம் போட்டுக் காட்டுகிறார். தயாரிப்பாளருக்கோ கோபம் தாங்கவில்லை. எல்லாம் என் நேரம் என நினைத்துக் கொண்டு வேறு வழி இன்றி திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டார்களாம். ஆனால் இவர்கள் எல்லோரும் எதிர்பார்த்ததுக்கு மாறாக அங்கே ஒரு பெரிய அதிசயம் நடந்ததாம்.

திரையரங்குக்கு வந்த மக்கள் அனைவரும் வயிறு குலுங்கி புண்ணாகும் அளவுக்கு சாப்ளினை பார்த்து சிரித்து சிரித்து அதனை கொண்டாடித் தீர்த்தார்களாம். விநியோகஸ்தர்களும்  திரையரங்கு உரிமையாளர்களும் சார்லியின் அடுத்த படம் எப்போது வரும்? என கேள்விகளால் துளைத்தெடுக்க ஆரம்பித்தார்களாம். அப்படி அந்த படத்தில் என்னதான் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

இதையும் படியுங்கள்:
மர்மங்கள் நிறைந்த கிளியோபாட்ராவின் வாழ்க்கை! 
charlie chaplin

சார்லியின் அந்தப் படம் வெற்றியடைவதற்கு காரணம் அப்படத்தில் அவர் அணிந்த உடையும் அவரின் உடல்  மொழியுமே! குள்ளமான உருவம், தொள தொள பேண்ட், சின்ன கோட், கழுத்தில் நீளமான டை, எப்பொழுது கழண்டு விழுமோ என நினைக்கத் தூண்டும் பெரிய பூட்ஸ்கள், கம்பளி பூச்சி போன்ற மீசை, கையில் ஒரு தடி என அவர் ஏற்றிருந்த அந்த கோமாளி வேஷம்தான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு போய் ஜனங்களின் மத்தியில் மிகப்பெரும் சாதனையாளராய் மாற்றியதாம்! 

சார்லியின் அந்த முதல் வெற்றிக்கு பின் தயாரிப்பாளர் அவருக்கு முழு சுதந்திரம் அளித்து விட்டாராம். அதன் பின் சாப்ளின் கதை, திரைக்கதை, நடிப்பு, இயக்கம்  என ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக மாறிவிட்டாராம். அதன் பின் அவருக்கு பணம், புகழ் என  அனைத்தும் வந்து குவிய தொடங்கியதாம். 25 வயதிலேயே புகழின் உச்சத்தில் நின்றாராம் சாப்ளின். ஆனாலும் அவரது நடத்தையில் எந்த ஒரு மாற்றமும் இல்லையாம்.

சார்லி தன் இளமைக் காலத்தில் ஏழை சிறார்களை பாதுகாக்கும் அரசு விடுதியில்  தான் வளர்ந்தாராம். தெருவில் தெரியும் ஆதரவற்ற சிறுவர்களை இந்த விடுதியில் கட்டாயமாக சேர்த்து உணவு, உடை அனைத்தும் அரசு கொடுக்குமாம். இப்படியாக தனது வாழ்க்கையை தொடங்கிய சார்லி சாப்ளின் தான் பின் நாட்களில் மக்கள் மனங்களில் அசைக்க முடியாத அரியணையில் வீற்றிருந்தார் என்பது  மாபெரும் ஆச்சரியத்தின் உச்சமே.

இதையும் படியுங்கள்:
பிரம்மிக்க வைக்கும் அஜந்தா குகை ஓவியங்கள்!
charlie chaplin

எத்தகைய மாற்றங்களையும் மக்களுக்கு கடத்துவதற்கு நகைச்சுவை ஒரு மிகப்பெரிய ஆயுதம் என்பதை தன் வாழ்நாளில் நிரூபித்துக் காட்டியவர் சார்லி சாப்ளின். இன்று வரை கூட வாழ்வின் எதார்த்தங்களை நகைச்சுவையால் கடத்தும் அளவுக்கு ஒரு நல்ல கலைஞன் இன்னும் உருவாகவில்லை என்றே சொல்லலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com