Folk arts - dance
Folk arts - dance

வானத்தில் நடக்கும் மனிதர்கள்: கொக்கலிக்கட்டை ஆட்டத்தின் பின்னணியும் சிறப்புகளும்!

Published on

லை இலக்கியம் மக்களை மகிழ்விப்பதற்காகப் பிறந்தவை. நாட்டுப்புறக் கலைகள் மக்களின் ரசனைக்கேற்ப சுயமாகத் தோன்றியவை. அப்படித் தோன்றிய கலைகள் பின்னர் மக்களிடையே பிரபலமாகி நிலைத்து நின்றன. தற்போதுவரை நிலைத்து நிற்கின்றன. இத்தகைய கலைகளில் சில கலைகள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே பிரபலமாக விளங்குகின்றன. அப்படிப்பட்ட ஒரு கலைதான் கொக்கலிக்கட்டை ஆட்டம்.

தற்போதைய வேலூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு ஆட்டம் கொக்கலிக்கட்டை ஆட்டம் ஆகும். கால்களில் நீண்ட மரக்கட்டைகளைக் கட்டிக் கொண்டு ஆடும் பாரம்பரியமான இந்த கலையானது முந்தைய வடஆற்காடு மாவட்டத்தில் அமைந்த வேலூர் மற்றும் வாலாஜாப்பேட்டை முதலான பகுதிகளில் ஆடப்பட்டு வருகிறது.

பார்ப்பதற்கு கொக்கின் கால்களைப் போல நீண்டு காணப்படுவதால் இந்த ஆட்டமானது “கொக்குக் கால் கட்டை ஆட்டம்” என்று அழைக்கப்பட்டு நாளடைவில் மருவி “கொக்கலிக்கட்டை ஆட்டம்” என்று தற்போது அழைக்கப்படுகிறது. நீண்ட கால்களைக் கொண்ட பறவையான கொக்கைப் போல நீண்ட மரக்கட்டைகளை காலில் கட்டிக் கொண்டு ஆடும் இந்த ஆட்டத்தினைக் “கொக்கலிக்கட்டை ஆட்டம்” என்று அழைக்கின்றனர்.

மரக்கட்டைகளை தங்கள் கால்களில் பொருத்துவதற்கு முன்னதாக கோயில் வாசலில் மரக்கட்டைகளை வைத்து சூடம் ஏற்றி வழிபட்ட பின்னரே கால்களில் பொருத்தி ஆடுகின்றனர். அம்மன் தொடர்புடைய ஆட்டம் என்பதால் இதை ஆடும் கலைஞர்கள் மஞ்சள் அரைக்கால் சட்டையையும் தோள்களில் பொம்மைக்கிளிகளையும் தொங்கவிட்டு மார்பில் பெருக்கல் குறியைப் போல மலர்மாலையை அணிந்தவாறு ஆடுகின்றனர். கட்டைகளில் சலங்கையும் கட்டப்பட்டிருக்கும். மேலும் கைகளிலும் முதுகிலும் எலுமிச்சம் பழங்களையும் குத்திக் கொள்ளுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
இந்த நகரம்தான் இலக்கிய நகரமாக (Literature City) அழைக்கப்படுகிறது. 99% பேருக்கு இது தெரியாது!
Folk arts - dance

வைகாசி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை அன்று கெங்கையம்மன் கோவிலுக்குக் காப்புக்கட்டி எட்டாவது நாள் திருவிழா அன்று இந்த ஆட்டம் வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. இது ஒரு நேர்த்திக்கடனும் கூட. இம்மாவட்டத்தில் கெங்கையம்மனுக்கு நேர்ந்து கொண்ட ஆண்கள் மட்டுமே கொக்கலிக்கட்டை ஆட்டத்தில் பங்கேற்று ஆடுகின்றனர். பொதுவாக பெண்கள் இந்த ஆட்டத்தை ஆடுவதில்லை.

வீதிகளில் வரிசைக்கு இரண்டு பேர்கள் வீதம் அல்லது மூன்று பேர்கள் வீதம் ஆடிக்கொண்டே செல்லுவார்கள். கோயிலின் முன்னால் வட்டமாகச் சுற்றி நின்று ஆடுவதும் உண்டு.

கொக்கலிக்கட்டைகள் தேக்குமரம், ஆலமரம் மற்றும் நுணாமரங்களின் கட்டைகளைக் கொண்டு தயார் செய்யப்படுகின்றன. இவை பொதுவாக மூன்று அடி முதல் ஏழு அடி உயரம் வரை இருக்கும். எடையும் சற்று அதிகமாக இருக்கும். இத்தகைய கட்டைகளை கால்களில் கட்டிக் கொண்டு இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை ஆடுவர். உயரமான கட்டைகள் மீது நின்று தாளத்துக்கு ஏற்ப கைகளை அசைத்து ஆடுவார்கள். சிறிது கவனம் சிதறினாலும் கீழே விழுந்து விடும் அபாயம் உள்ளது. இது மிகவும் சிரமமான ஒரு ஆட்டமாகும்.

மூத்த கலைஞர்கள் இளையவர்களுக்கு இந்த கலையைக் கற்பிக்கின்றனர். ஆர்வம் இருந்தால் வெகுகுறுகிய காலத்திலேயே இக்கலையினை கற்றுக் கொள்ள முடியும். வாலாஜாப்பேட்டையில் கொக்கலிக்கட்டை ஆட்டக் கலைஞர்கள் அதிக அளவில் உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
கருப்பு நிற விமானங்களா? அதுவும் கலாச்சாரத்தின் சின்னமாம்! எந்த நாட்டில் தெரியுமா?
Folk arts - dance

முற்காலத்தில் வேலூர் மற்றும் வாலாஜாப்பேட்டைப் பகுதிகளில் கோயில்களில் மட்டுமே ஆடப்பட்டு வந்த இந்த ஆட்டத்தை தற்போது பல ஊர்களிலும் அழைப்பின் பேரில் சென்று ஆடுகிறார்கள். பொங்கல் விழா மற்றும் பொது விழாக்களிலும், பிறந்தநாள் விழாக்களிலும் இத்தகைய ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன.

logo
Kalki Online
kalkionline.com