சிங்கத்தின் வாயில் கங்கை நீர்: ராஜேந்திர சோழனின் வரலாற்றுச் சின்னம்!

Ganga water in the lion's mouth
Ganga water in the lion's mouth
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சிங்கமுகக் கிணறு (சிம்மகேணி) அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கிணறாகும். இது ராஜேந்திர சோழன் காலத்தில் உடையார்பாளையம் நிலக்கிழாரால் கட்டப்பட்டது. இக்கிணறு கோவிலின் வடக்கு மூலையில் சிங்கத்தின் வாயைப் போன்ற அமைப்பில் அமைந்துள்ளது. இது இந்திய தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்படுகிறது.

கங்கைகொண்ட சோழபுரம், ராஜராஜ சோழனின் மகனான முதலாம் ராஜேந்திரனால் கி.பி.1025 ஆம் ஆண்டில் சோழ வம்சத்தின் தலைநகராக ஆக்கப்பட்டது. கோட்டைகள், அரண்மனைகள், மண்டபங்கள், குளங்கள், பூங்காக்கள் போன்றவற்றுடன் கூடிய முழு நகரமும் கங்கை நீரைக்கொண்டு வருவதற்காக வடக்கில் உள்ள கங்கை சமவெளிகளுக்கு அவர் வெற்றிகரமாக அணிவகுத்து சென்றதை நினைவுகூரும் வகையிலும் அமைக்கப்பட்டது. இது தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அமைந்துள்ளது.

சிங்கமுக கிணற்றின் சிறப்புகள்:

ராஜேந்திர சோழன் தனது கங்கை பெரு வெற்றியின் நினைவாக தான் கங்கைகொண்ட சோழபுரத்தை கட்டி இக்கோவிலில் உள்ள பிரம்மாண்டமான லிங்கத்திற்கு கங்கை நதியில் உள்ள நீரை ஆயிரம் போர் குடங்களில் யானையின் மீது கொண்டு வந்து அபிஷேகம் செய்ததாக கூறப்படுகிறது‌. கங்கைகொண்ட சோழபுரக் கோயிலின் லிங்கத்திற்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்பட்ட கங்கை நீரை இந்த கிணற்றில் சேமித்து வைத்ததாக கூறப்படுகிறது. 1000 ஆண்டுகளுக்கும் மேலாக வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இந்த சிங்கமுகக் கிணறு இன்றும் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கத்தின் வாய் வடிவில் நுழைவாயில் உள்ள, குகை வடிவில் அமைந்துள்ள இந்த கிணற்றில் படிகள் வழியாக கீழே இறங்கிச் சென்று தண்ணீர் எடுக்கும் வகையில் நுணுக்கமாக அமைக்கப் பட்டுள்ளது. பிரம்மாண்டமான சிங்க வடிவத்தில், அதன் வாயிலிருந்து தண்ணீர் கிணற்றுக்குள் வரும்படியும், படிக்கட்டுகளுடன் கூடிய குடைவரை போன்றும் வடிவமைக்கப் பட்டுள்ளது. சோழர் காலத்தில் இக்கோவிலில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்யவும், ராணிகள் குளிக்கவும் இந்தப் புனித நீர் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தேசியக் கொடிகளும், தீர்க்கப்படாத ஊதா நிற மர்மமும்!
Ganga water in the lion's mouth

இந்தக் கிணறை வெளியிலிருந்து பார்க்கும்போது கண்ணுக்குத் தெரியாத வகையில் மறைவாக, ஆனால் அழகிய வேலைபாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது. இது சோழர்களின் நீர் மேலாண்மை மற்றும் கலைத்திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இக்கிணற்றின் அருகே 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உடையார்குளம் ஜமீன் வெட்டிய தெலுங்கு மற்றும் தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

சோழர்கள் கட்டிய பல பெரிய கோவில்களில் இது போன்ற அமைப்பு உள்ளது. படிகளில் இறங்கி பாதை செல்லும். அக்காலத்தில் இந்த வாயில் வழியாக அரசியர்கள் சென்று குளிப்பார்கள். மேலிருந்து பார்த்தால் அவர்கள் குளிப்பதோ, உடை மாற்றுவதோ தெரியாது என்றும், காவலாளிகள் மற்றும் தீவட்டி ஏந்தியவர்களுடன் அரச குடும்பத்தினர் கோவிலுக்கு வந்து வழிபடுவதற்காக அமைத்த சுரங்கப்பாதை என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் இன்று மக்கள் அவற்றில் பழைய பூக்களைப் போடுவதும், காசு போடுவதும் என்று அந்தக் கிணற்றை அசுத்தம் செய்து விடுகிறார்கள். எனவேதான் அவற்றை கோவில்களில் பூட்டு போட்டு பூட்டி வைத்திருக்கிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com