சோழர் வரலாற்றை மீட்டெடுத்த ஜெர்மன் அறிஞர் தமிழ் கல்வெட்டின் தந்தை ‘ஹல்ட்ஸ்ச்’ அறியப்படாத ரகசியங்கள்!

தமிழ் கல்வெட்டுகள் - Tamil Inscriptions
தமிழ் கல்வெட்டுகள் - Tamil Inscriptions
Updated on

ற்போது எகிப்து நாட்டில் உள்ள மன்னர்களின் பழமையான கல்வெட்டு பகுதியில் 2000 ம் ஆண்டு பழமையான தமிழ், பிராமி கல்வெட்டுகளை சுவிஸ் -பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இருந்தது என்று எடுத்துக் கூறும் கல்வெட்டுகள் இருப்பதை இந்திய தொல்லியல் துறையின் வாயிலாக தெரியவந்தது.

ஆனால் இதற்கெல்லாம் முன்னோடியாக இருந்தவர் ஒரு இந்தியர் அல்ல அவர் ஒரு வெளிநாட்டுக்காரர் என்பது தெரியுமா? அவர் தான் யூஜென் ஜூலியஸ் தியோடர் ஹல்ட்ஸ்ச் (Eugen Julius Theodor Hultzsch - 1857-1927) எனும் புகழ்பெற்ற ஜெர்மன் கல்வெட்டு ஆய்வாளர்.

ஜெர்மன் நாட்டின் ட்ரெஸ்டன் நகரில் பிறந்த இவர், லிப்சியா பல்கலைக்கழகத்தில் ஓரியண்டல் மொழிகளைப் பயின்றார். ஹல்ட்ஸ்ச் அக்டோபர் 22, 1884 அன்று ட்ரைஸ்டேவிலிருந்து நீராவிப் படகில் பயணம் செய்து இந்தியாவில் உள்ள பம்பாய்க்கு வந்தார். 1884 ஆம் ஆண்டின் பிற்பகுதிக்கும் மே 1885 க்கும் இடையில், சமஸ்கிருதம் மற்றும் பாலி நூல்களைத்தேடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார், ஆய்வின் மாதிரிகளாக இரண்டு அறிக்கைகளை அரசாங்கத்திற்கு வழங்கினார்.

1886 நவம்பர் 21, அன்று, 29 வயதில் சென்னை மாகாணத்தின் முதல் தலைமை கல்வெட்டு ஆய்வாளராக (Epigraphist) நியமிக்கப்பட்ட இவர், தென்னிந்தியக் கல்வெட்டுகள், குறிப்பாக அசோகரின் கல்வெட்டுகள் மற்றும் சோழர் கால கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆய்வு செய்ததில் மிக முக்கிய பங்காற்றியுள்ளார். 1886-ஆம் ஆண்டு முதல், தென்னிந்தியக் கல்வெட்டு ஆய்வுகள் (South Indian Inscriptions) என்ற வரிசையில், ஆயிரக் கணக்கான தமிழ்க் கல்வெட்டுகளை முறையாகப் படியெடுத்து வெளியிட்டார். இந்தியாவில் முன்னோடி கல்வெட்டு மற்றும் கையெழுத்துப் பிரதி ஆராய்ச்சியாளர் இவர்தான்.

தமிழ் கல்வெட்டுகள் - Tamil Inscriptions
தமிழ் கல்வெட்டுகள் - Tamil Inscriptions

தமிழ் கல்வெட்டுகள் காட்டும் சோழர் காலத்து உண்மை வரலாறு:

ஹல்ட்ஸ்ச், தெற்கு வட்டத்தின் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கல்வெட்டுஆய்வாளராக இருந்தபோது. அவரது உதவியாளர் வி. வெங்கய்யாவின் உதவியுடன், இப்பகுதியில் உள்ள பரந்த கோயில் கல்வெட்டுகளை ஆவணப்படுத்துவதே அவரது பணியாக இருந்தது. மாமல்லபுரத்தில் உள்ள கல்வெட்டுகளைப் பற்றியவைகளை வெளியிடுவதே அவரது முதல் முக்கிய பணியாக இருந்தது. அவைகளை தென்னிந்திய கல்வெட்டுகளின் முதல் தொகுதியில் வெளியிட்டார், அது இன்றுவரை தொடர்கிறது, இப்போது 37 தொகுதிகள் உள்ளது.

இந்திய வரலாற்றில், கடந்த காலத்தின் பிரதிபலிப்புகள் பெரும் காவியங்களால் வடிவமைக்கப்பட்டன, மேலும் அவை பெரும்பாலும் கவிஞர்கள், மரபியலாளர்கள் மற்றும் புலவர்களால் திரித்து வழங்கப்பட்டன. ஆனால் ஹல்ட்ஸ்ச் என்ற ஒரு மனிதர் கல்வெட்டு மற்றும் பழங்காலவியல் ஆராய்ச்சி மூலம் இந்த விஷயத்தின் முடிவையே மாற்றினார். அசோகரின் கல்வெட்டுகளை ஆழமாக ஆய்வு செய்து, அவற்றைப் புத்தகமாக ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் மூலம் வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட நூல்கள் இன்னும் மௌரிய ஆட்சி குறித்த அறிய உதவுகிறது. பல்லவ மன்னர் நரசிம்மவர்மனை அடையாளம் காட்டியது மற்றும் மேற்பரப்பில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகளின் அடிப்படையில் நினைவுச் சின்னங்களை டேட்டிங் செய்யும் முறையை அறிமுகம் செய்தது எல்லாம் ஹல்ட்ஸ்ச்தான்.

முதலாம் ராஜராஜன் (985–1014) கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் 56 சோழ கல்வெட்டுகள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை மன்னர் மற்றும் அவரது உடனடி குடும்பத்தினரால் வெளியிடப்பட்டவை. ஹல்ட்ஸ்ச் அனைத்தையும் ஆவணப்படுத்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ராஜராஜ சோழனின் கல்வெட்டுகளை ஆய்வு செய்து, மறைந்து கிடந்த சோழர் கால வரலாற்றை வெளிக்கொண்டு வந்ததில் ஹல்ட்ஸ்ச் குறிப்பிடத்தக்கவர் அதோடு நாணயவியலில், மதுரை சுல்தான்களின் நாணயங்களை காலவரிசைப்படி வரிசைப்படுத்தினார்.

ஹல்ட்ஸ் ஐரோப்பாவுக்குத் திரும்பியபோது, அவர் தன்னுடன் 483 சமஸ்கிருத கையெழுத்துப் பிரதிகளை எடுத்துச் சென்றார், பின்னர் அவை ஆக்ஸ்போர்டில் உள்ள போட்லியன் நூலகத்திற்கு விற்கப்பட்டன. அவர் ஹாலே பல்கலைக்கழகத்தில் இந்தியவியலில் பேராசிரியர் பதவியைப் பெற்றார், அங்கு அவர் தனது இறுதி ஆண்டுகளை வாழ்ந்து நவம்பர் 16, 1927 அன்று காலமானார்.

தஞ்சை பெரிய கோயில் மற்றும் தமிழ் கல்வெட்டுகள் குறித்த ஹல்ட்ஸ்சின் ஆய்வு:

தென்னிந்திய கல்வெட்டுகளை, குறிப்பாக சோழர் கால கல்வெட்டுகளைப் படியெடுத்து, தமிழ் மற்றும் இந்திய வரலாற்றை உலகிற்கு வெளிப்படுத்தியதில் முக்கிய பங்காற்றிவர் ஹல்ட்ஸ்ச். இதனால் அவர் தென்னிந்திய கல்வெட்டியலின் "தந்தை" என்று பரவலாகக் கருதப்படுகிறார், மேலும் அவருடைய பணி தமிழ்நாட்டின் வரலாற்றை முறையாகப் புரிந்துகொள்ள உதவியது.

இந்தியா முழுவதும் உள்ள கல்வெட்டுகளைப் (Estampages) படியெடுத்து ஆவணப்படுத்தினார் , இவரின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இவருக்கு என ஒரு நினைவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com