
நம்மூரில் இருக்கும் ரெஸ்டாரண்டுகளுக்கு சாப்பிட சென்றால் பொருளின் விலையை கூறி 'பிளஸ் டேக்ஸ்' என்பார்கள். அதிலும் சென்னை, மும்பை, டெல்லி போன்ற மெட்ரோ-பாலிட்டன் நகர ஏர்போர்ட்களில் இருக்கும் ரெஸ்டாரண்டுகளில் "தோசை எவ்வளவு?" என்று கேட்டால் ஒரு விலையை சொல்வார்கள். பணத்தை கொடுக்கும் போது பிளஸ் டேக்ஸ் 18% என்பார்கள். அந்த வகையில் நம்ம ஊரில் வரி தனியாக வசூலிக்கப்படுகிறது.
ஆனால், ஜெர்மெனியின் ரெஸ்டாரண்ட்களைப் பொறுத்தவரையில் இந்த வரி விகிதம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஜெர்மனியின் பிராங்க்ஃபர்ட் நகரம் 'கமர்சியல் கேப்பிட்டல்' என்பதால் பல நாட்டு மக்கள் இங்கு வசிக்கிறார்கள். ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற பல கண்டங்களிலிருந்தும் இங்கு வந்து நிறைய பேர் வேலை செய்வதால் அவர்களுக்குமான ரெஸ்டாரண்டுகளும் நிறைவே இங்கு இருக்கின்றன. அதுபோல நம்முடைய சரவணபவன், அஞ்சப்பர் இப்படி தமிழ்நாட்டு பிரபல ரெஸ்டாரண்டுகளும் இங்கு உள்ளன.
அது மட்டுமல்லாமல் ஸ்ரீலங்கா தமிழர்களின் ரெஸ்டாரண்டுகளையும் நிறைய பார்க்க முடியும். வட இந்திய மக்களும் நம்ம ஊர் சாப்பாடு, பிரியாணி என மெனு தயார் செய்து அவர்களும் இங்கு கொடி கட்டி பறக்கத்தான் செய்கிறார்கள்.
பொதுவாக வார இறுதி நாட்களில் விடுமுறை கொண்டாட்டங்கள் ஆரம்பித்து விடுவதால் ஜெர்மானியர்கள், பிற நாட்டு ரெஸ்டாரண்டுகளின் உணவுகளை சுவைப்பதற்காக இந்த விடுமுறை நாட்களில் நம்மூர் ரெஸ்டாரண்டுகளைத் தேடி வருகிறார்கள். அதிலும் நம்ம ஊர் தோசை இவர்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.
ஜெர்மானியர்கள் காரம் மிகவும் குறைவாக சாப்பிடுவதால் இங்கிருக்கும் ரெஸ்டாரண்ட்களில் எப்பொழுதுமே சட்னி, சாம்பார் அல்லது இதர அசைவ உணவுகளில் காரம் கம்மியாகத் தான் இருக்கும். கூடுதலாக தேவை என்றால் நாம் ஆர்டர் செய்யும் போதே சொல்லிவிட வேண்டும்.
வெள்ளிக்கிழமை மாலை பிராங்க்ஃபர்ட்-ல் உள்ள சரவணபவனுக்கு சென்றால் கண்டிப்பாக உங்களுக்கு இடம் கிடைக்காது. காத்திருப்போரின் வரிசை நீண்டு கொண்டே போய் வெளியே பிளாட்பார்ம் வரை செல்லும். இப்போதாவது வெயில் காலம் பரவாயில்லை, சமாளித்துக் கொள்ளலாம். இப்போது சராசரியாக 23 டிகிரி வெயில் தான்.
ஆனால் நவம்பர், டிசம்பர் போன்ற குளிர் காலங்களில் மிகவும் சிரமம். மைனஸ் டிகிரியில் காலநிலை இருக்கும். ஆனாலும் அந்த குளிரையும் பொருட்படுத்தாது ஜெர்மானியர்களும் நம்மவர்களும் நீண்ட வரிசையில் காத்திருக்கத்தான் செய்கிறார்கள்.
உள்ளே இருக்கைகள் காலியாக காலியாக அடுத்தடுத்து உடனே சென்று இடம் பிடித்துக் கொள்வார்கள். இங்கிருக்கும் சரவண பவனில் நம்ம ஊர் காபியை விட பியர் (beer) விலை குறைவு தான். பில்டர் காஃபியின் விலை மூன்று யூரோ.
ஜெர்மெனியில் உள்ள ரெஸ்டாரண்டுகளில் இரண்டு விதமாக வரி வசூலிக்கப்படுகிறது.
ஒன்று, அங்கு உட்கார்ந்து சாப்பிடுவது - அதற்குண்டான வரி 19%. அதுவே நாம் பார்சல் வாங்கினால் ஏழு சதவீதம் மட்டுமே. ஆனால் உணவின் விலை அதே விலையாக தான் இருக்கும். அதில் மாற்றம் ஏதும் இராது.
உதாரணமாக பிராங்க்ஃபர்ட் நகரில் இருக்கும் சரவண பவனில் தென்னிந்திய சாப்பாடு 20 யூரோ. அங்கு உட்கார்ந்து சாப்பிட்டாலும் இதே விலை தான், பார்சல் வாங்கி சென்றாலும் இதே விலை தான். ஆனால் அங்கு உட்கார்ந்து சாப்பிட்டவருக்கான 19% வரியை சரவணபவன் ஜெர்மானிய அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும். இதுவே பார்சல் கொடுத்தால் அந்த 20 யூரோவிலிருந்து ஏழு சதவீதம் மட்டுமே வரியாக கொடுக்க வேண்டும்.
ஆக மொத்தத்தில் பொருளின் விலை அதேதான். 'பிளஸ் டேக்ஸ்' என்ற அதிகப்படியான விஷயம் எதுவும் இங்கு ஜெர்மெனியில் கிடையாது.