
அன்றாட வாழ்க்கையில் நாம் அனைவருமே அவ்வப்போது ஒரு மாற்றத்திற்காக ஓட்டலுக்குச் செல்வது வழக்கம். சில சமயங்களில் நமக்கு ஒரு ஆடம்பரமான உணவகத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். இல்லையென்றால் யாராவது நம்மை ஒரு இரவு உணவிற்காகவோ, ஒரு get togetherகாகவோ அல்லது மகிழ்ச்சியாக இருப்பதற்காகவோ அல்லது reception partyகாகவோ திடீரென்று நட்சத்திர உணவகத்துக்கு அழைத்திருக்கலாம்.
அப்படிப் பழக்கமே இல்லாத அத்தகைய உணவகங்களுக்கு நடுத்தர வர்க்க மக்கள் செல்லும்போது ஒருசில சங்கடங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. ஏராளமான கட்லரிகள், உச்சரிக்க முடியாத மெனு மற்றும் அதிகப்படியான விலை இவை எல்லாம் நடுத்தர மக்களை ஒரு இக்கட்டான சங்கடத்திற்குத் தள்ளுகின்றன.
சில பேருக்கு கையால் சாப்பிட்டால்தான் திருப்தியாக இருக்கும். ஆனால், இத்தகைய நட்சத்திர உணவகத்தில் சுற்றி இருப்பவர்களில் முக்கால்வாசி பேர்கள் கையால் சாப்பிடமால் ஸ்பூனாலும் போர்க்காலும் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். மீதி இருக்கும் கால்வாசி நபர்கள் கையால் சாப்பிடலாமா, யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள், ஸ்பூனால் முயற்சி செய்யலாமா என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். சில சமயங்களில் சிலர் உணவின் பெயர் கூட தெரியாமல் இரண்டு முறை வாங்கி சாப்பிடவும் நேரிடும். சில சமயங்களில் நம் சுயமதிப்பைக் கூட கேள்விக்குள்ளாக்கும் இத்தகைய சூழ்நிலைகள்.
இக்கட்டான இதுபோன்ற தர்மசங்கடத்தை சந்திக்கும் சிலரின் மனநிலை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. புரிந்துகொள்ள முடியாத மெனுவைப் பார்த்துக் கொண்டிருப்பது: பெரிய நட்சத்திர உணவகத்தில், முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு மெனு கார்டை திறந்து பார்த்தால் பாதிக்கு மேல் ஒன்றுமே புரியாது. எதை முதலில் சாப்பிட வேண்டும், உணவின் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும், chinese உணவா? இது என்ன உணவு என்று புரியாமல் சிறிது நேரத்திற்கு குழப்பத்தோடு பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.
2. சரியான கட்லரி பற்றி தெரியாமல் இருப்பது: ஏன் இதற்கு முட்கரண்டிகள்? எதற்கு எதை உபயோகப்படுத்த வேண்டும், எப்படி உபயோகப் படுத்த வேண்டும். மீனை எப்படி கட் செய்வது என்று தெரியாமல் இங்கேயும் அங்கேயுமாக பார்த்துக் கொண்டிருப்பார்கள். இதை மிகவும் இக்கட்டான சூழ்நிலை என்று கூடச் சொல்லலாம்.
3. ஆடைகளை பற்றி அதிகமாகச் சிந்திப்பது: பெரிய நட்சத்திர உணவகங்களுக்கு வருபவர்கள் அணிந்து வரும் ஆடை வித விதமாக இருக்கும். அவர்களின் மத்தியில் சாதாரண எளிமையான ஆடை அணிந்து கொண்டு போகும்போது நமக்கு தயக்கமாக இருக்கும். அவர்கள் சாதாரணமாக பார்த்தாலும் நமக்கு, அவர்கள் நம்மையே உற்று பார்ப்பது போல் இருக்கும்.
4. விலை தெரியாமல் வாங்கி விட்டு தவிப்பது: மெனு கார்டை சரியாகப் படித்து புரிந்து கொள்ள முடியாமல் ஆர்டர் செய்து சாப்பிட்ட பிறகு பில்லை பார்த்து ஷாக்காகி, பேய் பிடித்தாற் போல் நிறைய பேர் உணருவார்கள். உதாரணத்திற்கு, ஒரு உணவின் விலை சாதாரணமாக 50 ரூபாய் என்றால் இதுபோன்ற நட்சத்திர ஓட்டல்களின் பில்லில் 200 ரூபாய் என்று போடப்பட்டிருக்கும். சில நபர்கள் அதையும் ஓட்டல் நிர்வாகிகளிடம் கேட்டு கடைசியில் அவமானப்பட்டுச் செல்வார்கள்.
5. சாப்பிடும் முறை தெரியாமல் தவிப்பது: பெரிய நட்சத்திர உணவகத்துக்குச் சென்றால் கையால் பிசைந்து வாய் நிறைய போட்டு சாப்பிட்டால், நம்மை கேவலமாக சில பேர் பார்ப்பார்கள். வாயில் போடுவதும் தெரியாமல், சாப்பிடுவதும் தெரியாமல் ஸ்டைலாக ஸ்பூனால் எடுத்து சாப்பிட்டால்தான் மதிப்பு.
இப்படிப்பட்ட சங்கடங்களிலிருந்து வெளியே வருவதற்கான தீர்வு:
ஒரு உயர் ரக சூழலில் அனுபவம் இல்லாமல் இருப்பது வெட்கப்பட வேண்டிய ஒரு விஷயம் இல்லை. மிகவும் ஆடம்பரமான சூழல்களில் பழக்கமில்லாதபோது, இதுபோன்ற சங்கடமான தருணங்களை அனுபவிப்பது முற்றிலும் இயல்பானது.
அனுபவம் இல்லாத பட்சத்தில் நீங்கள் அனுபவம் உள்ள ஒரு நண்பரோடு இணைந்து செல்லுங்கள். அவரிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் இருக்கவே இருக்கிறார்கள் நம்முடைய இளைய தலைமுறைகள். அவர்களை கூட்டிக் கொண்டு செல்லுங்கள். எல்லாவற்றையும் அழகாக கற்றுக் கொடுப்பார்கள்.
அப்படி யாருமே வரவில்லை என்றாலும் பரவாயில்லை, வெட்கப்படாமல், தயங்காமல் வெயிட்டரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அதில் ஒரு தவறுமில்லை. விலையைக் கூட நீங்கள் அவர்களிடம் மெதுவாக கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் கேட்டால், அவர்கள் எந்த முட்கரண்டி எதற்கு என்று கூட சொல்லித் தருவார்கள். இக்காலத்தில் எல்லாவற்றையும் கற்றுக் கொள்வது மிக மிக அவசியம். இரண்டு முறை சென்று வந்தால் மூன்றாவது முறை நமக்கே பழகி விடும். முக்கியமாக, ஆடையைப் பற்றி அதிகமாக சிந்திக்காதீர்கள், உங்களுக்கு எது பிடிக்குமோ, உகந்ததோ அதையே அணிந்து செல்லுங்கள். நினைவில் வைத்து கொள்ளுங்கள், நீங்கள் சாப்பிடும் உணவிற்கு நீங்கள்தான் பணம் செலுத்தப் போகிறீர்கள், ஆகவே அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் யோசிக்காதீர்கள். ஒருவேளை பார்டிக்கு உங்களை அழைத்து இருந்தால் அதற்கு ஏற்றவாறு உடை அணிந்து செல்லுங்கள்.
இன்னொரு முக்கியமான விஷயத்தை மறந்து விடாதீர்கள், யாருமே எல்லாவற்றையும் முன்னதாகவே கற்றுக்கொண்டு வரவில்லை. அவர்களும் உங்களைப் போலத்தான் முதலில் தடுமாறி, பிறகுதான் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, பெரிய நட்சத்திர உணவகத்திற்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால் வெட்கப்பட்டுக் கொண்டு போகாமல் இருக்காதீர்கள், தைரியமாகச் செல்லுங்கள்.