
தமிழர் பாரம்பரியத்தை வலியுறுத்தும் வகையில் நேற்று 'சர்வதேச வேட்டி தினம்' அனுசரிக்கப்பட்டது.
இதற்கு மூல காரணமானவர், ஏகாம்பரநாதன் என்ற தமிழர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பாப்பான்குளம் என்ற ஊரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் 1920, ஜனவரி 6 அன்று பிறந்தவர். அம்பர் ராட்டை (Amber Chakra) என்ற மரத்தாலான நூற்புக் கருவியைக் கண்டுபிடித்து நெசவுத் தொழிலுக்கே மேன்மையை உருவாக்கித் தந்தவர் இவர்.
பிரிட்டிஷாரை எதிர்க்கும் வகையில் சுதேசி துணிகளையே பயன்படுத்துவது, அந்நிய துணிகளைப் புறக்கணிப்பது என்ற போராட்டம் வலுப்பெற்றபோது கை ராட்டையால் குறைந்த அளவே நூல் நூற்கப்பட்டதால், தேவையை ஈடு செய்ய முடியவில்லை. அப்போது, மேம்படுத்தப்பட்ட நுற்புத் திறன் கொண்ட ராட்டையைக் கண்டுபிடிப்பவருக்கு ஒரு லட்ச ரூபய் பரிசளிப்பதாக காந்திஜி அறிவித்தார்.
அதைக் கேட்ட ஏகாம்பரநாதன் ஆர்வம் கொண்டார். பரிசுத் தொகைக்காக என்றில்லாவிட்டாலும், காந்திஜியின் எண்ணம் ஈடேற வேண்டும், அதாவது சுதேசி துணிகளே நம் நாட்டில் விற்கப்பட்டு, பயன்படுத்தப்படவும் வேண்டும் என்று தீவிரமாகக் கருதினார். உடனே மர ராட்டை பற்றிய தகவல்களைத் திரட்டினார். இதை மாற்றி அது, அதை மாற்றி இன்னொன்று என்று பல ராட்டைகளைப் பல்லாயிரம் ரூபாய் செலவில் தயாரித்து, புதுப்புது அம்சங்களைச் சேர்த்து நிறைவான ராட்டையை உருவாக்கப் பெரிதும் முயன்றார். இவ்வாறு ஒன்று, இரண்டல்ல, ஏழு வருட முயற்சிக்குப் பிறகு மிகச் சிறந்ததான மர ராட்டையைத் தயாரித்தார்.
காந்திஜி எதிர்பார்த்ததைவிட, கூடுதல் வசதிகள் கொண்டதாக அது இருந்தது. பல கை ராட்டைகளுக்கு ஈடான, மாற்றாக இருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த ராட்டையைக் காண காந்திஜி உயிருடன் இல்லை. தன் படைப்பு வீணாகிவிடக் கூடாதே என்பதற்காக தமிழ்நாட்டில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அதைக் காட்சிப் பொருளாக வைத்தார் ஏகாம்பரநாதன். அதைப் பார்த்த ஜவஹர்லால் நேரு ‘இதைத்தான் காந்திஜி எதிர்பார்த்தார்,‘ என்று சொல்லி ஏகாம்பரநாதனைக் கட்டிப் பிடித்து வெகுவாகப் பாராட்டினார். அதனால் பெரிதும் மகிழ்ந்த ஏகாம்பர்நாதன், அந்தக் கண்டுபிடிப்பை நாட்டிற்கே அர்ப்பணித்தார். இவருடைய தேசிய உணர்வைப் பாராட்டும் வகையில் பத்மஸ்ரீ விருதினை மத்திய அரசு அறிவிக்க, அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அதனை வழங்கினார்.
காமராஜர் எடுத்துக் கொண்ட பெரு முயற்சியால் அந்த ஆம்பர் ராட்டை, காதி நிறுவனத்தில் பிரதான அங்கம் வகித்து உடைத் தேவைக்குப் பெரிதும் உதவியது.
இதற்கிடையில் ‘காந்திஜி அறிவித்த ஒரு லட்ச ரூபாய் பரிசு என்னவாயிற்று?’ என்று ஒருவர் பத்திரிகையில் தன் கட்டுரையில் கேட்க, அதை அறிந்த வடமாநில காந்தி அறக்கட்டளை, ஏகாம்பரநாதனுக்கு இரண்டு லட்சம் ரூபாயாக பரிசளித்து அவரைப் பெருமைப் படுத்தியது. இதைக் கேள்விப்பட்ட அப்போதைய பிரதமர் வாஜ்பாய், பின்னாளில் அரசு சார்பில் ஒரு லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டார். ஆனால் இந்தத் தொகையை வாங்க ஏகாம்பரநாதன் உயிருடன் இல்லை. 1997 ஏப்ரல் 5ம் நாள் அவர் இவ்வுலகை நீத்தார்.
கோ-ஆப்டெக்ஸ் என்ற அரசு ஜவுளி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிய சகாயம் ஐஏஎஸ், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு, ‘ரோமானியர்களுக்கே ஆடை தயாரித்துக் கொடுத்த பெருமை தமிழர்களுக்கு உண்டு. அந்த வகையில் நம் ஏகாம்பரநாதனும் மதிக்கப்படத் தக்கவர். ஆகவே அவருடைய பிறந்த நாளான ஜனவரி 6 அன்று வேட்டி தினமாக அனுசரிக்கப்படலாம்‘ என்று தம் கருத்தைத் தெரிவித்தார். அதனை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.
யுனெஸ்கோ அமைப்பின் கவனத்துக்கு இந்தச் செய்தி போகவே, அவர்களும் இந்த தினத்தை அகில உலக வேட்டி நாளாகவே முறைப்படி அங்கீகரித்தார்கள்.