
தமிழ்நாட்டிலுள்ள அரசு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி உ. சகாயம், இளைஞர்களிடம் வேட்டி அணியும் வழக்கத்தை ஏற்படுத்தும் எண்ணத்துடன் பொங்கலை ஒட்டி 'வேட்டி நாள்' (Dhoti Day) கொண்டாடுவோம் என்கிற ஆலோசனையை வெளியிட்டார். அவரது அரசுப் பணிகளின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் பலர், அவர் குறிப்பிட்ட ஜனவரி 6 ஆம் நாளில் வேட்டி அணிந்து கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜனவரி 6 ஆம் நாளில் வேட்டி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆண்கள் வேட்டி அணியும் வழக்கம் இருந்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் அனைவரும் அணியும் ஒரு சாதாரண உடையாக வேட்டி இருந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி இலங்கை, வங்காள தேசம் மற்றும் மாலத் தீவுகளிலும் வேட்டி பயன்பாட்டில் உள்ளது. முக்கிய விழாக்களின் போது, பாரம்பரிய உடையான வேட்டியை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
வேட்டிகளின் அளவை வைத்தும், அதனுடைய வகையை நிர்ணயம் செய்வது உண்டு. நான்கு முழ வேட்டி, எட்டு முழ வேட்டி அல்லது இரட்டை வேட்டி, கரை வேட்டி என்று வேட்டியை வகைப்படுத்துகின்றனர். எட்டு முழ வேட்டியை அந்தணர்கள் போன்ற சிலர் ஐந்து கச்சம் வைத்து உடுத்திக் கொள்கின்றனர். இதனை ‘பஞ்சக்கச்சம்’ என்கின்றனர். அரசியலாளர்கள் தாங்கள் சார்ந்த கட்சிக் கொடிகளில் இடம்பெற்றிருக்கும் வண்ணங்களைக் கரையாகக் கொண்ட வேட்டிகளை அணிகின்றனர். தற்போது இளைஞர்களிடம் வேட்டியின் கரைகளின் நிறத்தில் சட்டையை அணிந்து கொள்ளும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
தற்போதையக் காலத்தில் பருத்தி, பட்டு உள்ளிட்ட சில நூல்களால் தயாரிக்கப்படும் வேட்டிகள் பயன்பாட்டிலிருந்து வருகின்றன. பெரும்பாலும் தூய வெண்ணிறத்திலேயே வேட்டி இருக்கும், தற்போது வேட்டியானது நீலம், கருப்பு, சிவப்பு அல்லது காவி நிறங்களிலும் கிடைக்கிறது.
வெளுப்பான் கொண்டு வெளிறச் செய்யாது வெளிர் மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் வேட்டிகள் கோடி வேட்டி அல்லது புதிய வேட்டி என்கின்றனர். இந்த வேட்டியினைத் திருமணம் போன்ற விழாக்களில் உடுத்திக் கொள்கின்றனர்.
பட்டு நூலால் நெசவு செய்யப்பெற்ற வேட்டிகளும் கிடைக்கின்றன. பட்டு வேட்டிகளின் விலை அதிகமென்பதால், முக்கிய நிகழ்வுகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை வேட்டி தவிர்த்த நீலம், கருப்பு, சிவப்பு அல்லது காவி நிறங்களிலான வேட்டிகள் இந்து சமய விரதங்களின் போதும், கோயிலுக்குச் செல்லும் போது அணிந்து கொள்கின்றனர்.
பண்டையக் காலத்தில் வாழ்ந்த அரசர்களும் புலவர்களும் தங்களுடைய வேட்டிகளில் தங்கத்திலான சரிகைகள் வைத்து அணிந்திருக்கின்றனர். வேட்டி அணிந்து கொள்ளும் வழக்கம் தற்போது பெருமளவில் குறைந்து போய்விட்டது. கோயில் பணிகளில் ஈடுபடுபவர்கள், அரசியலாளர்கள் மற்றும் தமிழ்ப் பண்பாட்டு ஆர்வலர்கள் போன்றோர் நாள்தோறும் வேட்டி அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். மற்றவர்கள் தங்கள் வீட்டில் நடைபெறும் மரபு வழியிலான விழாவின் போது மட்டும் வேட்டி அணிகின்றனர்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, வேட்டி அணிவது இழிவானது போன்று கருதும் நிலை ஏற்பட்டது. தமிழரின் மரபுவழி உடையான வேட்டியை அணிந்து செல்பவர்கள், சில மன்றங்களில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பிறகு, தமிழ்நாடு அரசு ‘வேட்டி கட்டிக் கொண்டு வருபவர்களை அனுமதி மறுக்கும் மன்றங்களின் உரிமம் உடனடியாகப் பறிக்கப்படும்’ என்று சட்டம் கொண்டு வந்தது. அதனைத் தொடர்ந்து, வேட்டி அணியும் பண்பாடு இளைஞர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
இன்றைய வேட்டி நாளில் வேட்டியைக் கட்டி மகிழ்வதுடன், வேட்டி உற்பத்தி செய்யும் நெசவாளர்களின் பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்குவது அனைவரது கடமையாகும் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.