சிறுவர்களைக் கொண்டு நிகழ்த்தப்படும் 'கோட்டிபுவா' நடனம்!

Gotipua dance
Gotipua danceImg Credit: Pinterest
Published on

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நிகழ்த்தப் பெறும் ஒரு மரபு வழி நடனம் ‘கோட்டிபுவா’ (Gotipua) எனப்படுகிறது. இந்நடனம், ஒடிசி என்ற செவ்வியல் நடனத்தின் முன்னோடி நடனமாகும். இந்நடனம் பல நூற்றாண்டுகளாக ஒரிசாவில் இளம் சிறுவர்களால் நிகழ்த்தப்பட்டு வருகிறது. சிறுவர்கள், ஜெகந்நாதர் மற்றும் கிருஷ்ணனைப் புகழ்ந்து பாடுவதற்காக பெண்களின் ஆடை அணிந்து, இந்நடனங்களை நிகழ்த்துவர். ராதா மற்றும் கிருஷ்ணாவின் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்ட சிறுவர்கள் குழுவால் கழைக்கூத்து வடிவில் இந்த நடனம் நிகழ்த்தப்படுகிறது. 

சிறுவர்கள், அவர்களின் இரு பால் கூறுகளையும் ஒருங்கேப் பெற்றிருக்கிற தோற்றம் மாறும் முன்பே, அதாவது பதின்ம வயதிற்கு முன்பே, இளம் வயதிலேயே நடனத்தைக் கற்கத் தொடங்குகிறார்கள். ஒடியா மொழியில் கோட்டி புவா என்றால், 'ஒற்றைச் சிறுவன்' என்று பொருள். அதாவது, பெண்ணாக அலங்கரிக்கப்பட்ட ஒரு சிறுவன் என்பது பொருள். ஆயினும், இது பல சிறுவர்கள் கொண்ட குழுவாகவே நிகழ்த்தப்படுகிறது. ஒடிசாவில் பூரிக்கு அருகில் உள்ள ரகுராஜ்பூர் என்ற சிற்றூர் கோட்டிபுவா நடன குழுக்களுக்கு பெயர் பெற்ற ஒரு வரலாற்று கிராமமாகும்.

நீண்ட காலத்திற்கு முன்பு, ஒடிசாவில் உள்ள கோயில்களில் தேவதாசிகள் (அல்லது மஹாரி) என்று அழைக்கப்படும் பெண் நடனக் கலைஞர்கள் இருந்தனர், அவர்கள் ஜெகந்நாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள். அவர்கள் மகரி நடனத்தை ஆடி வழிபட்டு வந்தனர். ஒரிசாவில் உள்ள கோயில்களில் குறிப்பாக பூரியில் உள்ள கோனார்க் சூரியக் கோவில், மற்றும் பூரி ஜெகன்னாதர் கோயில் போன்றவற்றில் நடனக் கலைஞர்களின் சிற்பங்கள் இந்த பண்டைய மகரி நடனப் பாரம்பரியத்தை நிரூபிக்கின்றன. போய் வம்சத்தை நிறுவிய ராம சந்திர தேவ் ஆட்சியின் போது, 16 ஆம் நூற்றாண்டில் மஹரி நடனக் கலை வீழ்ச்சியடைந்தது. அதே சமயம், சிறுவர்களான நடனக் கலைஞர்கள் அந்த மரபு வழியைத் தொடர்ந்தனர்.

'கோட்டிபுவா' நடனக்கலைஞர்களாக தயாராகும் சிறுவர்கள் அழகான பெண் நடனக் கலைஞர்களாக மாற வேண்டி தங்களின் தலைமுடியை வெட்டுவதில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் அதை முடிச்சிட்டும், பின்னலிட்டு பூச்சரங்கள் சூடிக் கொள்ளவும் செய்கிறார்கள். வெள்ளையும் சிவப்புமான கலவைப் பொடியைக் கொண்டு அவர்கள் முகங்களை ஒப்பனை செய்து கொள்கிறார்கள். காஜல் எனப்படும் கருப்பு மையைக் கண்களைச் சுற்றிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுவதால் அவர்களின் கண்கள் நீளமான தோற்றத்தைப் பெறுகின்றன. பொதுவாக, வட்டமான பொட்டு நெற்றியில் இடப்படுகிறது. அந்தப் பொட்டினைச் சுற்றிச் சந்தன மரத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு கலவை அணியப்படுகிறது. மரபு வழி வண்ண ஓவியங்கள் முகத்தை அலங்கரிக்கின்றன. அவை ஒவ்வொரு நடனப் பள்ளிக்கும் தனித்துவமானவையாகும். எட்டு ஆண்டுகள் பயிற்சி பெற்ற ஒரு கோட்டிபுவா நடனக்கலஞர் தனியாக ஒரு பள்ளியைத் தொடங்கலாம். 

இந்நடனத்திற்கான ஆடை காலப்போக்கில் மாற்றம் பெற்று வந்துள்ளது. கோட்டிபுவாவிற்கென அணியப்படும் மரபு வழி உடை காஞ்சூலா எனப்படுகிறது. பளபளப்பான பிரகாசமான வண்ண அலங்காரங்களுடன் கூடிய இரவிக்கை, இடுப்பைச் சுற்றி கட்டப்படும் ஒரு காப்புடை, பூ வேலைப்பாடுகள் கொண்ட நிபி பந்தா என்றழைக்கப்படும் உடை, மேலும் கால்களைச் சுற்றி அணிவதற்காக குஞ்சங்கள் அல்லது சுருக்குகள் வைத்த உடை, நடனத்தின் பொழுது அணியப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
ஒரு தலை பூட்டு தையல் எந்திரம் தெரியுமா உங்களுக்கு?
Gotipua dance

நடனக் கலைஞர்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட, மணிகளால் ஆன நகைகளை அணிந்து கொள்கிறார்கள்: கழுத்தணிகள், வளையல்கள், கவசங்கள் மற்றும் காது ஆபரணங்கள். மூக்கணிகள். கால்களால் தட்டப்படும் தாளத் துடிப்புகளை அதிகரிக்கக் கொலுசுகள் போன்றவை அணியப்படுகின்றன. உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் ஆல்டா எனப்படும் சிவப்பு திரவத்தால் வண்ணங்கள் வரையப்படுகின்றன. இந்நடனத்தில் அணியப்படும் ஆடை, நகைகள் மற்றும் மணிகள் புனிதமாகக் கருதப்படுகின்றன.

கோட்டிபுவா நடனம் ஒடிஸி நடன பாணியில் உள்ளது. ஆனால், அவற்றின் நுட்பம், உடைகள் மற்றும் விளக்கக்காட்சி ஆகியவை மஹரிகளிடமிருந்து வேறுபடுகின்றன. இன்றைய ஒடிஸி நடனத்தில் கோட்டிபுவா நடனத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. ஏனெனில், கேளுச்சரண மகோபாத்திரா போன்ற ஒடிசி நடனக் கலைஞர்களில் பலர் தங்கள் இளம் வயதில் கோட்டிபுவா நடனக் கலைஞர்களாக இருந்தவர்களாவார்கள். ஒவ்வொரு ஆண்டும், குரு கேளுச்சரண மகோபாத்திரா ஒடிஸி ஆராய்ச்சி மையம் புவனேஸ்வரில் கோட்டிபுவா நடன விழாவை ஏற்பாடு செய்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com