

உலகில் எல்லோரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றுதான் நினைப்போம். அதற்கான விஷயங்களை செய்கிறோமோ இல்லையோ, ஆனால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைப்போம். ஆனால், சில வெளிநாடுகளில் உள்ள மக்கள் தங்கள் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்யவேண்டுமோ அதை தினமும் செய்கிறார்கள். அப்படி சில நாடுகளில் குறிப்பாக உலக டாப் 10 மகிழ்ச்சி நாடுகளின் பட்டியலில் தவறாமல் இடம் பெறும் நாடுகளில் சில மகிழ்ச்சியோடு இருக்க அவர்கள் செய்யும் சில விஷயங்களை பார்ப்போம்.
உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடு பின்லாந்து, அந்நாட்டு மக்களின் மகிழ்ச்சி ரகசியம் எது என்று ஆய்வில் கண்டறிந்துள்ளனர். அவர்களின் மகிழ்ச்சி ரகசியத்தை "SISU ' என்கிறார்கள். பின்லாந்து மொழியில் அதற்கு அர்த்தம். தைரியமான மனோநிலை, இக்கட்டுகளிலிருந்து விரைவில் வெளியே வரும் தன்மை, மன உறுதி, லட்சியங்களில் விடாப்பிடியான குணம், விடாமுயற்சி இந்த விசேஷமான ஆற்றல்களுடன் அவர்களின் இயற்கையை ரசிக்கும் குணம், அமைதியையும், சமாதானத்தையும் நாடும் குணம், அதோடு சின்னச் சின்ன விஷயங்களுக்காக அலட்டிக் கொள்ளாத குணமும்தான் என்கிறார் அந்நாட்டின் புகழ் பெற்ற எழுத்தாளர் ஜென்னா நைலூன்டு.
ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே பின்லாந்து மக்களின் முதல் விதி, இந்த நாட்டு மக்கள் தங்களை சுற்றியுள்ளவர்களை கவனித்துகொள்ள சிறு வயதில் இருந்தே கற்பிக்கப்படுகிறார்கள், இது அவர்களின் வளர்ச்சியின் முக்கியமான பகுதியாகவும், அனைவரிடமும் நட்புடன் பழக வேண்டும் என்றும் கற்பிக்கப்படுவதால், அவர்கள் சிரித்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். பின்லாந்தில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளில் ஒவ்வொரு குடும்பமும், தங்களது அண்டை வீட்டாருடன் நேரம் செலவிட்டு மகிழ்ச்சியாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர், அனைத்து பிரச்னைகளையும் வெளியில் சொல்வதன் மூலம் பாரம் குறையும், அப்படி தான் இந்த நாட்டில் அனைவரிடமும் அன்பாய் பழகுவதன் மூலம் மகிழ்ச்சியுடன் மக்கள் வாழ்வதாக கூறப்படுகிறது.
உலகில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் இடங்களில் ஐரோப்பாவில் உள்ள ஐஸ்லாந்து தீவும் ஒன்றாகும். இங்குள்ள மக்களின் மகிழ்ச்சி ரகசியம் இயற்கையை விரும்பும் மனம், பாலின சமத்துவம் மற்றும் ஆழமாக வேரூன்றிய மீள்தன்மை உணர்வு ஆகியவற்றில் இருப்பதாக கூறுகிறார்கள். உலகில் ஆரோக்கியமாக மக்கள் வாழும் நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் நாடுகளில் ஒன்று ஐஸ்லாந்து. அவர்களின் ஆரோக்கிய ரகசியம் அவர்கள் உணவில் அதிகளவில் ஒமோகா -3 அமிலம் அதிகமுள்ள மீன் உணவுகளை சேர்த்துக் கொள்வதுதான். இது அவர்களின் இதயத்தையும், மூளையையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது என்கிறார்கள். அதோடு தரமான பால் உணவுகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வதுதான் என்கிறார்கள்.
டென்மார்க் உலகின் மகிழ்ச்சியான நாடாகத் திகழ்வதற்கு, மிக உயர்ந்த சமூக நம்பிக்கை, சமத்துவமான வாழ்க்கை முறை, வலுவான சமூக நலத் திட்டங்கள் (இலவச கல்வி மற்றும் மருத்துவம்), மற்றும் பாதுகாப்பான சூழல் முக்கிய காரணங்களாகும். நேர்மையான அரசு மற்றும் குறைவான ஊழல் அந்நாட்டு மக்களின் மனநிறைவிற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. டென்மார்க் மக்கள் தங்களது மகிழ்ச்சிகரமான வாழ்வில் முறைக்கு ஒன்றை பின்பற்றுகிறார்கள்.
அதற்கு, ‘ஹைக்கீ வாழ்க்கை முறை’ (Hygge) எனப் பெயர். திருப்திகரமான, எளிமையான அதே சமயம் சௌகரியமான வாழ்க்கை முறையை இது குறிக்கிறது. சின்னச் சின்ன விஷயங்களைக் கூட ரசித்து வாழும் வாழ்க்கையை இது வலியுறுத்துகிறது. அன்றாட அவசரத்திலிருந்து விலகி, வாழ்க்கையின் நல்ல விஷயங்களை அனுபவிக்க நேரம் ஒதுக்குவதே இதன் பொருள். பெரும்பாலும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது. தனியாகவும், ஒரு நல்ல புத்தகத்துடனோ அல்லது அவர்களுக்கு பிடித்த சைக்கிள் சவாரி போன்றவற்றில் நேரம் செலவழிப்பதைக் குறிக்கிறது.
மத்திய அமெரிக்காவில் உள்ள கோஸ்டா ரிக்கர நாட்டின் மக்கள் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான மக்கள். அந்நாட்டின் நாட்டின் மகிழ்ச்சி ரகசியம், 'புரா விடா' (Pura Vida - தூய வாழ்க்கை) என்ற அவர்களின் தனித்துவமான வாழ்க்கை தத்துவத்தில் உள்ளது. இது எளிமை, மனநிறைவு, இயற்கையோடு இணைந்த வாழ்வு, வலுவான சமூக உறவுகள் மற்றும் ராணுவம் இல்லாத அமைதியான சூழல் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த மக்கள் ஓய்வு நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, நிதானமான வாழ்க்கையை வாழ்கின்றனர்.
ஒரு கோஸ்டா ரிகரிடம் அவருடைய வாழ்க்கையை ஒரே ஒரு சொற்றொடரில் விவரிக்கச் சொன்னால், அவர் பெரும்பாலும் “புரா விடா” என்றே பதிலளிப்பார். இதன் பொருள், உங்களிடம் உள்ளவற்றைப் போற்றும் திறன், எளிமையான விஷயங்களை ஏற்றுக்கொள்வது மற்றும் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பது என்பதாகும்.
சுவீடன் நாட்டில் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு விநோத பழக்கம் ஒன்றை காலை நேரத்தில் கடைபிடிக்கிறார்கள். அதுதான் 'பிகா' (Fika) என்பது.காலையில் குடும்பத்தோடு காபி குடிக்கும்போது அல்லது காலை உணவு சாப்பிட்டுக் கொண்டே அன்றைய நாளுக்கான திட்டங்களை, எந்த நேரத்தில் எதை செய்யவேண்டும் என்று திட்டமிட்டு அட்டவணைகள் தயாரிக்கிறார்கள். இது அவர்கள் தவறாமல் கடைபிடிக்கும் பழக்கம் அதுவே அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம் என்கிறார்கள்.