சங்கீத கலாநிதி விருது பெறும் டாக்டர் ஜெயந்தி குமரேஷ்: 'சரஸ்வதி வீணை' வாசிபில் பாரம்பரியமும் புதுமையும் இணையும் இவரிடம்!

Jayanthi Kumaresh
Jayanthi KumareshImg Credit: Wikipedia
Published on
Kalki Strip
Kalki Strip

சர்வதேச அளவில் புகழ்பெற்ற மறைந்த உஸ்தாத் ஜாகிர் உசேன் உட்பட பல இசை மேதைகளுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை நடத்திய பெருமை கொண்டவர் கர்நாடக இசைக் கலைஞர் டாக்டர் ஜெயந்தி குமரேஷ் (Dr Jayanthi Kumaresh).

வீணை வாசிப்பின் மூலம் புதுமையான முறைகளில் கர்நாடக இசையை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் வித்தியாசமான சிந்தனைகளுக்கு பெயர் பெற்ற டாக்டர் ஜெயந்தி குமரேஷ் சென்னை மியூசிக் அகாடமியால் வழங்கப்படும் மதிப்புமிக்க சங்கீத கலாநிதி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

"ஜெயந்தி கர்நாடக இசையில் ஒரு முன்னணி கலைஞராக இருப்பதுடன், குறிப்பாக இளைஞர்களிடையே கர்நாடக இசையைப் பரப்புவதற்கான தனது ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளுக்காகவும் அறியப்படுகிறார்,” என்று மியூசிக் அகாடமி (The Music Academy) யின் தலைவர் என். முரளி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உலகப்புகழ் பெற்ற வீணை (Veena) கலைஞராக அறியப்படும் ஜெயந்தி வீணை வாசிப்பில் தனித்துவமான பாணி மற்றும் புதுமையான முயற்சிகளால் இந்திய கர்நாடக இசை உலகில் முக்கிய இடம் பெற்றவர்.

பாரம்பரிய இசைக் குடும்ப மரபில் வந்த ஜெயந்தியின் சுவாசம் முழுவதும் இசை மூச்சால் நிறைந்தது. அதனால் தான் இசை சாம்ராஜ்யத்தில் இணைய சரஸ்வதி கையில் வீற்றிருக்கும் வீணையைத் தனது விருப்பமான இசைக்கருவியாகத் தேர்ந்தெடுத்தார். இசைக்கலைஞர்கள் குடும்பத்தின் ஆறாவது தலைமுறையைச் சேர்ந்தவரான அவர் 3 வயதில் தனது தாயார் லால்குடி ராஜலட்சுமியிடம் முறைப்படி பயிற்சியைத் தொடங்கினார் . 13 வயதில் அவர் தனது அத்தை விதுஷி பத்மாவதி அனந்தகோபாலனின் குருகுலத்தில் 22 ஆண்டுகள் பயிற்சி பெற்ற பின்னர் வீணை இசை மேதை எஸ். பாலச்சந்தரிடம் படித்தார் . மேலும் தனது தாய்வழி மாமாவான, வயலின் கலைஞர் லால்குடி ஜெயராமன் , மற்றும் டி. பிருந்தா , டி.ஆர். சுப்ரமணியம் , மற்றும் தஞ்சாவூர் சங்கர ஐயர் ஆகியோரிடமிருந்தும் மேலும் வழிகாட்டுதலைப் பெற்றதாக குறிப்புகள் கூறுகிறது. இவர் வயலின் கலைஞர்களில் இரட்டையர்களான கணேஷ்-குமரேஷ் ஆகியோரில் இளையவரான குமரேஷ் ராஜகோபாலனை மணந்துள்ளார்.

கர்நாடக சங்கீதத்துறையில் ஆராய்ச்சியாளரான ஜெயந்தி "சரஸ்வதி வீணையின் பாணிகள் மற்றும் வாசிப்பு நுட்பங்கள்" குறித்த படைப்புகளுக்காக (PhD) முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளில் அவர் நிகழ்த்திய தொடர் சொற்பொழிவுகள் மற்றும் செயல்பாடுகள் அவரை இளைய தலைமுறையினரிடையே இந்திய இசையின் விரும்பப்படும் தூதராக மாற்றியுள்ளன. மேலும் ஒரு இசையமைப்பாளராக பல இசை நாடகங்கள், நடன தயாரிப்புகள் மற்றும் ஆவணப்படங்களுக்க இசையமைத்துள்ளது இவரது சிறப்பு.

தற்போது 57 வயதான ஜெயந்தி பல சர்வதேச விருதுகளுடன் தமிழ்நாடு அரசின் 'சங்கீத சூடாமணி', 'கலைமாமணி', 'வீணைநாத மணி', 'கலா ரத்னா', 'சத்யஸ்ரீ', 'கான வாரிதி' போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். இந்திய கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த அங்கீகாரமான அகில இந்திய வானொலியிடமிருந்து ஏ-டாப் தரத்தைப் பெற்ற இளைய வீணை கலைஞர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
Interview: மெலட்டூர் பாகவத மேளா - கலைமாமணி எஸ்.குமார் அவர்களுடன் ஒரு பிரத்தியேக சந்திப்பு!
Jayanthi Kumaresh

இந்தியாவில் உள்ள பல மதிப்புமிக்க இடங்கள் மற்றும் விழாக்களைத் தவிர சான் பிரான்சிஸ்கோ ஜாஸ் விழா, தர்பார் விழா லண்டன், ஸ்காட்லாந்த் மற்றும் குயின்ஸ்லாந்து இசை விழா, டார்வின் இசை விழா மற்றும் அடிலெய்டு இசை விழா, பிபிசி பிராம்ஸ் லண்டன் மற்றும் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் கச்சேரி நடத்தியுள்ளார். வீணை தனி கருவியல்ல என்பதை நிரூபிக்க 24 கலைஞர்கள் – 240 நிமிடங்கள் (4 மணி நேர) மாபெரும் நிகழ்ச்சி ஜெயந்தி முன்னெடுத்த சிறப்பு இசை முயற்சியில் பல கர்நாடக மற்றும் பல்வேறு இசை வகை கலைஞர்கள் இணைந்து முதன்முதலில் நீண்ட நேர மேடைக்கச்சேரியாக நடத்தப்பட்டது பாராட்டுக்குரியது.

குறிப்பாக அவர் இந்திய தேசிய இசைக்குழுவின் நிறுவனர் ஆவார், இதில் இந்தியா முழுவதிலுமிருந்து 21 நட்சத்திர இசைக்கலைஞர்கள் உள்ளனர் . இது இந்திய பாரம்பரிய இசைக்கான முதல் இசைக்குழு ஆகும்.

இவரது பிரபலமான கச்சேரிகள் YouTube ல் காணொளிகளாக கிடைக்கின்றன.

இதையும் படியுங்கள்:
ஒரே ஸ்கிரீனில் கமல் - ரஜினி! இவர்கள் இணைந்த 17 படங்கள்... பிரிய இதுதான் காரணமா..?
Jayanthi Kumaresh

அவரது கர்நாடக இசையையும் குறிப்பாக வீணையையும் பிரபலப்படுத்தும் வலைத் தொடரான கப் ஓ' கர்நாடகம், (Cup O’ Carnatic) (2016–தற்போது வரை) 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. கர்நாடிக் இசை சாதாரணமாக கேட்பவர்களுக்கு மிகவும் சிக்கலானது என்ற எண்ணத்தை அகற்றுவதே கப் ஓ' கர்நாடிக்கின் ஒரு குறிக்கோள் என்று ஜெயந்தி குறிப்பிட்டுள்ளார்.

2021 இல் ஜெயந்தி குமரேஷ் அகாடமி நிறுவப்பட்டு, வீணை கற்பித்தலுக்கான எளிய தொடர்பை விரிவுபடுத்தும் நோக்கில் ஆன்லைன் கிளாஸ்களையும் வழங்கி வருகிறது.

வீணைக்கு புதிய இசை வடிவங்கள் உருவாக்கி பல இசை பட்டறைகள் (workshops) நடத்தி உலகெங்கும் தனது மாணவர்களை உருவாக்கியுள்ளார்.

மேலும் இந்தியாவின் தேசிய இசைக்கருவியான வீணைக்காக உலகளவில் இந்தியாவின் ஜோதியை ஏந்திச் செல்பவரான டாக்டர் ஜெயந்தி குமரேஷ்ன் 35 ஆண்டுகளுக்கும் மேலான வாழ்க்கை சாதனைகள், இந்தியாவின் வளமான இசை பாரம்பரியத்தை வளர்ச்சி பெற உண்மையிலேயே உதவியது எனலாம்.

இப்படி பலவிதங்களில் தனது வாழ்வை வீணைக்காகவே அர்ப்பணித்த அசாத்திய வீணை கலைஞரான ஜெயந்திக்கு இந்த விருது சாலப்பொருத்தம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com