பீகார் மாநிலம், ராஜ்கிரில் 1,600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டு நாடுகளின் கூட்டு முயற்சியாக இந்தப் பல்கலைக்கழக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழாவில் 17 நாடுகளின் தூதரகங்களின் பிரதிநிதிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இன்று உலகின் பல பல்கலைக்கழகங்களைத் தேடி நம் இந்திய மாணவர்கள் போகிறார்கள். ஆனால் கி.மு. 5ம் நூற்றாண்டிலேயே உலகின் முதல் பல்கலைக்கழகம் என்ற நிலைத்த புகழ்பெற்ற இதை நாடி கல்வி கற்க உலகின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்திருப்பதாகக் கூறுகிறது வரலாறு. பெரும் வரலாற்று சிறப்பு மற்றும் பின்னணிகளைக் கொண்ட நாளந்தா பல்கலைக்கழகத்தின் பெருமைகள் சிலவற்றைக் காண்போம்.
நாளந்தா என்றால் ‘தாமரையின் உறைவிடம்’ என்று பொருள். தாமரை மலர் நமது மரபில் வேத காலம் முதல் கல்வியின், ஞானத்தின் அடையாளமாக உருவகப்படுத்தப்பட்டு மதிக்கப்படுகிறது. நாளந்தா பகுதி பல பெரிய கல்விக்கூடங்களின் இருப்பிடமாக இருந்திருக்கிறது. இசை, நடனம், நாடகம் போன்ற கலைகளும் முறையாக இங்கு கற்பிக்கப்பட்டிருப்பதற்கான சான்றுகள் உள்ளன.
புத்தர் காலத்தில் மட்டுமல்ல, புத்தருக்கு முன், புத்தருக்குப் பின் என்று பல காலகட்டங்களைக் கடந்து இன்றும் பல்கலைக்கழகம் என்றால் நாளந்தா எனும் பெருமையை பறைசாற்றுகிறது, அன்று முகமதியர்களின் படையெடுப்பால் அழிக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம் இருந்த இடத்திலுள்ள அதன் இடிபாடுகள். இன்று உலகின் புகழ் பெற்ற பல பல்கலைக்கழகங்கள் இருந்தாலும் 1,700 வருடங்கள் முன்னரே 10,000 மாணவர்களும், 2,000 ஆசிரியர்களும் கொண்டு கி.பி. 12ம் நூற்றாண்டு வரை இப்பல்கலைக்கழகம் இயங்கியிருப்பது மாபெரும் சிறப்பு.
கி.மு. 5ம் நூற்றாண்டிலேயே வானியல், சோதிடம், மருத்துவம், இலக்கணம், மதவியல், கணிதம் போன்றவற்றைக் கற்பிக்கத் தனித்தனி துறைகளுடன் மாணவர்கள் தங்கிப் படிக்கும் வசதியுடன் இயங்கியிருக்கிறது. மேலும், உலகிலேயே அனைத்துக் கல்விகளையும் ஒரே இடத்தில் பயிலும் பல்கலைக்கழகமாக இதுதான் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது இந்தியாவின் பெருமைகளுள் ஒன்று.
இன்று இதே பல்கலைக்கழகத்தை மீண்டும் உருவாக்க முடியாது என்றாலும், பீஹார் அரசு இந்தப் பகுதி முழுவதிலும் அத்தனை விதமான உயர்கல்வி நிலையங்களையும் நிறுவி, நாளந்தாவை ஒரு கல்வி நகரமாக்க வேண்டும், அனைத்து கல்வி நிலையங்களையும் இணைத்து ஒரு புது மாதிரியான பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என்ற முனைப்புடன் திட்டங்கள் தீட்டி செயலுக்குக் கொண்டு வந்துள்ளது பாராட்டுக்குரிய விஷயம். இதன் பின்னணியில் மறைந்த அப்துல்கலாமின் தொலைநோக்குப் பார்வை உள்ளது. ஆம் அவரது முயற்சியால் பழைமையான நாளந்தா பல்கலைக்கழகத்தை புதுப்பிக்க, நாளந்தா பல்கலைக்கழக மசோதா, ஆகஸ்ட் 12, 2010 அன்று ராஜ்ய சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஆகஸ்ட் 21, 2010 அன்று மாநிலங்களவையிலும் ஆகஸ்ட் 2010ல் மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதா செப்டம்பர் 21, 2010 அன்று ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது புதுப்பிக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தில் 40 வகுப்பறைகள் கொண்ட இரண்டு கல்வி வளாகங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 1,900 இருக்கைகள் உள்ளன. தலா 300 இருக்கைகள் கொண்ட இரண்டு கலையரங்கங்கள், சுமார் 550 மாணவர்கள் தங்கக்கூடிய ஒரு மாணவர் விடுதி மற்றும் ஒரு சர்வதேச மையம், 2000 நபர்கள் வரை பங்கேற்கக் கூடிய ஒரு அரங்கம், ஒரு ஆசிரியர் மன்றம் மற்றும் ஒரு விளையாட்டு வளாகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
குறிப்பாக எந்தவிதமான ஒதுக்கீடு முறைகளும் இல்லாமல், தகுதியின் அடிப்படையில் மட்டுமே உலகின் எந்தப் பகுதியிலிருக்கும் மாணவர்களும் இந்தப் புதிய நாளந்தா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயன்பெறப் போகிறார்கள் என்ற செய்தி மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.