பேசுங்க… ஆனால், பேசாதீங்க!

மற்றவரிடம் பேசும் தேவையற்ற பேச்சு
மற்றவரிடம் பேசும் தேவையற்ற பேச்சு

ம் வாழ்க்கையில் தினமும் பலவிதமான பிரச்னைகளை சந்திக்கிறோம். அன்றாட வாழ்க்கையில் நாம் பேசும் அவசியமில்லாத. அர்த்தமில்லாத பேச்சுக்களே நம்முடைய பல பிரச்னைகளுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது.

சிலர் எப்போதும் எதையாவது பேசிக்கொண்டே இருக்கிறார்கள். சிலர் தேவையில்லாமல் பிறரிடம் பேச மாட்டார்கள். சிலர் தேவைப்படும் சமயங்களில் கூட பேச மாட்டார்கள். பலர் அடுத்தவருடைய சொந்த விஷயங்களை கற்பனை கலந்து பிறரிடம் பேசுவார்கள். சிலர் மற்றவர்களை குறைவாக எடைபோட்டு அவர்களை உதாசீனப்படுத்தி பேசுபவர்களாக இருக்கிறார்கள். சிலர் தான் மட்டுமே இந்த உலகில் புத்திசாலி என்று தனக்குத்தானே கற்பனை செய்து கொண்டு பிறரைத் தாழ்த்தி. தன்னை உயர்த்தி பேசிக்கொண்டே இருப்பார்கள். சொல்லப்போனால் இவை எல்லாம் தவறான பேச்சுக்களே.

நாம் எப்படிப் பேசினால் அனைவரும் நம்மை மதித்துப் போற்றும்படி வாழலாம் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இனிமையான பேச்சு, அன்பான பேச்சு, அவசியமான பேச்சு, அடக்கமான பேச்சு, அளவான பேச்சு, பிறரை குறை கூறாத பேச்சு. பிறருக்கு நன்மை மட்டுமே தரும் பேச்சு. இத்தகைய பேச்சுக்கள் நமக்கு எப்போதும் நன்மையை மட்டுமே பரிசாகத் தரும்.

ஒன்றுமில்லாத விஷயத்தை பேசிப் பேசி பெரிதாக்கி பின்னர் அதனால் அவதிக்குள்ளாகும் பலரை நாம் அன்றாடம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். பேருந்தில் பயணம் செய்யும்போது, கூட்ட நெரிசலில் சகபயணி காலை மிதிப்பது இயல்பு. உடனே மிதித்தவர் அனிச்சையாக மன்னிப்பும் கேட்டு விடுவார். இது பேருந்துப் பயணங்களில் சகஜமாக நடக்கும் ஒரு விஷயம். இதோடு விட்டுவிட்டால் பிரச்னை முடிந்தது. ஆனால், மிதிபட்டவர் விடமாட்டார். “உனக்குக் கண்ணு தெரியாதா?” என்று கோபமாக ஒரு கேள்வியைக் கேட்பார். மன்னிப்பு கேட்டும் இப்படிப் பேசுகிறாரே என்று மிதித்தவர் இதற்கு கோபமாக பதில் சொல்லுவார். இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறிப் பேச கடைசியில் கைகலப்பு நடக்கும். இதனால் இருவருக்குமே மிஞ்சுவது அவமானம் மட்டுமே.

அளவிற்கு அதிகமாகப் பேசுவதைக் குறைப்பதும், குறைவாகப் பேசுவதும் மிகவும் சுலபமான ஒரு விஷயம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது உண்மையல்ல. உண்மையில் சொல்லப்போனால் அது ஒரு மிக அபூர்வமான கலை என்றே சொல்லலாம்.

நாம் சம்பாதிக்கும் பணத்தை எவ்வாறு யோசித்து யோசித்து செலவழிக்கிறோமோ அதுபோலவே பேச்சையும் யோசித்து யோசித்துப் பேசப் பழக வேண்டும். பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு ரூபாயை செலவழிப்பதற்குச் சமம் என்று நாம் கருதப் பழக வேண்டும். சம்பாதிக்கும் பணத்தை நம் விருப்பம் போல செலவழித்துக் கொண்டிருந்தால் பிற்காலத்தில் நாம் அனைத்தையும் இழந்து துன்பத்தைச் சந்திக்க நேரிடும். அதுபோலவே, எப்போதும் எந்த சூழ்நிலையிலும் யோசிக்காமல் வார்த்தைகளைக் கொட்டுபவர்களும் நிம்மதியை இழந்து சிக்கல்களை சந்திக்க நேருகிறது.

அதிகமாகப் பேசினாலும் ஆபத்து, பேசாமல் இருந்தாலும் ஆபத்து. பேசாமல் இருந்துவிட்டால் சில பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அச்சமயங்களில் நீங்கள் மௌனச் சாமியாராக மாறப் பழக வேண்டும். பேசித் தீர்க்க வேண்டிய பிரச்னைகள் இருக்கின்றன. அச்சமயங்களில் நான் ஒரு மௌனச் சாமியார் என்று நீங்கள் பேசாமல் இருந்தால் பிரச்னை இன்னும் பெரிதாகிவிடக் கூடும்.

இதையும் படியுங்கள்:
கடினமான வேலைகளைக் கூட சுலபமாக செய்ய உதவும் 6 உத்திகள்!
மற்றவரிடம் பேசும் தேவையற்ற பேச்சு

தினந்தோறும் காலை முதல் மாலை வரை உங்களுக்கு சௌகரியப்படும் நேரத்தில் ஒரு மணி நேரத்தை ஒதுக்குங்கள். அந்த ஒரு மணி நேரம் முழுக்க கண்களை மூடிக்கொண்டு அமர்ந்து மௌனமாக இருந்து பழகுங்கள். இப்படியே ஒரு மாதம் பயிற்சி செய்யுங்கள். இப்படியே நீங்கள் தொடர்ந்து செய்வதன் மூலம் தேவையின்றி பேசும் வழக்கம் உங்களை விட்டு மெல்ல மெல்ல அகலும். மாதத்தில் ஏதாவது ஒரு நாளைத் தேர்வு செய்து அன்று முழுவதும் யாராவது உங்களிடம் பேச முற்பட்டால் அதற்கு பதில் மட்டுமே பேசும் வழக்கத்தைக் கடைபிடியுங்கள்.

எந்த மனத்தாங்கலாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவரை நேரடியாக அணுகி அவரிடம் பேசுங்கள். ஆனால், மூன்றாம் நபரிடம் மற்றவரைப் பற்றிய குறைகளைக் கூறாதீர்கள். ஏனெனில், மூன்றாவது நபர் சம்பந்தப்பட்டவரிடம் சென்று நீங்கள் கூறிய குறைகளை கண், மூக்கு, காது வைத்து அழகுபடுத்திச் சொல்ல வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் பிரச்னைகள் தீர்வதற்கு பதிலாக இன்னும் பெரிதாகும்.

தேவையில்லாத பேச்சுக்களால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. அளவிற்கு அதிகமாகப் பேசுவதால் நமது சக்தி நம்மையறியாமல் வீணாகிறது. நமது கவனம் சிதறிப்போய் விடுகிறது. ஒரு பிடி சோறு நோய்கள் நம்மை நாடி வராமல் பாதுகாக்கும். ஒரு பிடி பேச்சு வீண் சண்டை சச்சரவுகள் நம்மை நாடி வராமல் பாதுகாக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com