முகலாய சக்கரவர்த்தி தன் குடும்பத்தாருடன் ஏரியில் உல்லாசப் படகில் பயணம் செய்து கொண்டிருந்தார். எல்லோரும் உற்சாகமாக காணப்பட, அக்பர் முகத்தில் மட்டும் ஏதோ சிந்தனை வலை. முந்தின நாள் அரசவை கூட்டத்தில் அவர் பிறரிடம் கேட்ட சந்தேகம்தான் அது - ‘இறைவன் எல்லாம் வல்லவன் என்றால், தன் பக்தர்களின் துயர் துடைக்க அவன் ஏன் அவதாரம் எடுத்து வரவேண்டும்? தன் ஊழியர்களில் யாரையாவது அனுப்பி மக்கள் பிரச்னையைத் தீர்க்கலாமே…..?‘
திடீரென்று அவருடைய கவனம் சிதறியது. ஆமாம், அவருடைய அன்பு மகன் சலீம் படகிலிருந்து தவறி, நீரில் விழுந்து விட்டான். எல்லோரும் பதைபதைப்புடன் திகைத்து நிற்க, அக்பர் உடனே நீருக்குள் பாய்ந்தார். ஆழத்திற்குச் சென்று மகன் உடலைப் பற்றினார், நீந்தியபடி மேலெழுந்து மகனைப் படகில் கிடத்தினார். ஆனால் அது அவருடைய மகன் அல்ல, அவனைப் போன்ற ஒரு பொம்மை.
இதைக் கண்டு கடுங்கோபம் கொண்டார் அக்பர். ‘‘யார் செய்த விபரீதம் இது?‘‘ என்று கேட்டார்.
அப்போது அருகிலிருந்த அமைச்சர் பீர்பால், ‘‘மன்னரே, தங்கள் மகன் உயிர் பிரியும் ஆபத்தில் சிக்கிக் கொண்டான் என்று தெரிந்ததும் அப்படியே பதறிப்போய் நீருக்குள் பாய்ந்தீர்களே, அவனைக் காப்பாற்றச் சொல்லி உங்கள் வீரர்களில் ஒருவனை அனுப்பியிருக்கலாமே? ஆனால் நீங்களேதானே நேரடி நடவடிக்கையில் இறங்கினீர்கள்? உங்களைப் போலத்தான் இறைவனும். பக்தன் துயர்ப்படும்போது, தன் ஊழியர் யாரையாவது அனுப்பிவிட்டு அவர் சும்மா ஓய்வெடுப்பதில்லை; தானே நேரடியாக அவதாரம் எடுத்து வருகிறான்.‘‘ என்று விளக்கம் தந்தார்.
அக்பர் அந்த மதியூக மந்திரியை அரவணைத்துக் கொண்டு பாராட்டினார். அவர்தான் பீர்பால்.
1528ம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் கோக்ஹரா ஊரில் பிறந்தவர் பீர்பால். இவருடைய இயற்பெயர் மஹேஷ்தாஸ். இள வயதிலேயே இந்திய மொழிகள் மட்டுமன்றி, பாரசீக மொழியிலும் தேர்ந்து விளங்கினார். அந்த மொழிகளில் கவிதைகளும், கட்டுரைகளும் எழுதி சிறந்த கவிஞர்/எழுத்தாளர் என்று புகழ் பெற்றிருந்தார்.
இவருடைய கூர்மதி, விவேகம், திட்டமிடுதலில் நேர்த்தி ஆகிய நற்குணங்களைக் கேள்விப்பட்ட அக்பர், தன் அமைச்சரவையில் அவரை இணைத்துக் கொண்டார். அது. ‘வஸீர் ஏ ஆஸாம்‘ என்ற முக்கிய மந்திரி பதவியாகும். பாராட்டத்தக்க ராஜதந்திரியாகவும், நிர்வாகியாகவும் திகழ்ந்த பீர்பால், அக்பரின் ஆத்மார்த்த நண்பராகவும், வழிகாட்டியாகவும் விளங்கினார்.
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரக நடந்த ஒரு போரில் அக்பரின் படைகள் பின்னடைவு கண்டன. அப்போது பகைவர்களை விரட்ட பீர்பாலை அக்பர் போர்க்களத்துக்கு அனுப்பினார்.
ஆபத்து நிறைந்த மலைப்பிரதேசத்தில் பீர்பாலும் படையை நடத்திச் சென்று, வீராவேசமாகப் போரிட்டார். ஆனால் அக்பரின் படையிலேயே இருந்த, பீர்பால் மீது பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும் கொண்ட சில வீரர்களின் துரோகத்தால் ஆஃப்கான் வீரர்களால் 1583, பிப்ரவரி 16ம் நாள் பீர்பால் கொல்லப்பட்டார்.
பீர்பால் வீரமரணம் அடைந்த செய்தியைக் கேட்ட அக்பர் பெருந்துயருற்றார். பல நாட்களுக்கு உணவை, ஏன் நீரைக்கூட அருந்தவில்லை அவர். பீர்பால் தன்னுடன் வாழ்ந்த நாட்களில் நிகழ்ந்த அநேக சம்பவங்களை மனசுக்குள் எண்ணி, எண்ணி மகிழ்ந்தார். பீர்பாலின் புத்திசாலித்தனமும், நகைச்சுவையும் பொலிந்த, நூற்றுக்கணக்கான அந்த உண்மைக் கதைகள் இன்றும் நமக்குப் படிக்கக் கிடைக்கின்றன.