

கலைக்களஞ்சியம் என்பது உலகில் எந்த ஒரு விஷயம் குறித்தும் முக்கிய செய்திகளைத் தரும் குறிப்பு புத்தகமாகும். ஆங்கிலத்தில் இதை 'என்சைக்ளோபிடியா' என்கிறார்கள். இச்சொல் 'என்கிக்லியோஸ் பேடியா' (enkúklios paideia) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது, இதற்கு "பொதுக் கல்வி" என்று பொருள்.
உலக வரலாற்றில் முதல் கலைக்களஞ்சியம் தோன்றிய சுவாரசிய பின்னணி;
உலகில் முதன்முதலாக தோன்றிய கலைக்களஞ்சியம் ரோமானிய அறிஞர் பிளினி எழுதிய 'இயற்கை வரலாறு '(Natural History) எனும் புத்தக தொகுப்பாகும். நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதிய 2000 க்கும் அதிகமான புத்தகங்களில் இருந்து 20,000 விஷயங்களை அவர் அதில் எழுதி வைத்தார்.முதல் நூற்றாண்டில் பிளினி இதை 37 தொகுதிகளாக பிரித்து எழுதினார்.1600 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் ஒரே கலைக்களஞ்சியம் அது தான்.இதில் விவசாயம், தாவரவியல், புவியியல், மருத்துவம், விலங்கியல், ஜோதிடம், வைரக்கற்கள் போன்ற பல விஷயங்களை எழுதி வைத்தார்.
1721 ம் ஆண்டு சீனா ஒரு கலைக்களஞ்சியத்தை 5020 தொகுதிகளாக வெளியிடப்பட்டது. தற்போது புகழ் பெற்று விளங்கும் 'என்சைக்கோளோபிடியா பிரிட்டானிகா' 1768 ம் ஆண்டு வெளிவந்தது அப்போது அதில் 3 தொகுதிகள் மட்டுமே இருந்தது. அதன் பின்னர் அது 32 தொகுதிகளாக மாறியது. ஆங்கில மொழியில் வெளிவந்த மிகப்பெரிய கலைக்களஞ்சியம் இதுதான் பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிட்ட இதன் பதிப்புரிமையை பின்னர் அமெரிக்கா வாங்கியது.
தற்போது இந்த கலைக்களஞ்சியம் லண்டனிலும், சிக்காக்கோ நகரிலும் உருவாக்கப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்த 32 தொகுதிகளில் மொத்தமாக 32,330 பக்கங்கள் இருந்தது.4000 அறிஞர்கள் எழுதிய விஷயங்கள் இதில் இருந்தன. அதில் 4 கோடியே 40 லட்சம் சொற்கள் இருந்தன. ஆரம்பத்தில் இதன் விலை 1100 ஸ்டெர்லிங் பவுண்டுகள். இதிலும் சாதாரண பதிப்பு மற்றும் ஸ்பெசல் பதிப்புகள் இருந்தன. அதன் பின்னர் புதிய புதிய விஷயங்களை இணைத்து கலைக்களஞ்சியம் வெளிவந்தது. அதில் அகர வரிசையில் விஷயங்கள் இடம் பெற்றது. அதனால் தேவையான விஷயங்களை உடனேயே பார்க்க முடிந்தது.
ஸ்பெயின் நாட்டில் வெளியிடப்பட்ட ஸ்பானிஷ் மொழி கலைக்களஞ்சியம் தான் உலகிலேயே மிக பெரியது இது 104 தொகுதிகளாக வெளியிடப்பட்டது.1983 ம் ஆண்டு வெளிவந்த இதன் அப்போதைய விலை 2325 பவுண்ட்கள் 1,05,000 பக்கங்கள் இருந்தன.
தற்போதைய காலகட்டத்தில், அச்சு வடிவிலான கலைக்களஞ்சியங்களுக்குப் பதிலாக விக்கிப்பீடியா (Wikipedia) போன்ற டிஜிட்டல் மற்றும் இணைய வழித் தகவல் கலைக்களஞ்சியங்கள் முதன்மையாக உள்ளன. தமிழில், தமிழ் விக்கிப்பீடியா பல துறை சார்ந்த தகவல்களை வழங்குகிறது, அதே நேரத்தில் உலக அளவில் பிரிட்டானிகா (Britannica) மற்றும் வேர்ல்ட் புக் (World Book) ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை இரண்டும் அச்சு வடிவிலும் மற்றும் டிஜிட்டல் வழியிலும் தகவல்களை வழங்குகின்றன.
டிஜிட்டல் யுகத்தில் சிங்கப்பூர் தமிழ் கலைக்களஞ்சியம் உருவாக்கியுள்ள புதிய புரட்சி;
சிங்கப்பூர் தமிழ் கலைக்களஞ்சியம் (Encyclopedia of Singapore Tamils - EST) என்பது சிங்கப்பூர் தமிழர்களின் 200 ஆண்டுகால வரலாறு, பங்களிப்பு மற்றும் கலாச்சாரத்தை ஆவணப்படுத்தும் முதல் இணையவழித் தகவல் கலைக்களஞ்சியமாகும். இது தேசிய நூலக வாரியம் (NLB) மற்றும் சிங்கப்பூர் தமிழ் கலாச்சார மையம் (CSTC) இணைந்து உருவாக்கிய, 2025 ஆகஸ்டில் தொடங்கப்பட்ட ஒரு “வாழும் ஆவணம்” (Living Record) ஆகும்.
சிங்கப்பூருக்கு 1819 ல் முதன்முதலாக வந்த நாராயண பிள்ளை முதல் எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் சிங்கப்பூர் தமிழர் குமரன் ராசப்பன் வரை சிங்கப்பூர் தமிழ் சமூகத்தின் கடந்த 200 ஆண்டுகளில் அவர்களின் வாழ்க்கை, பங்களிப்புகள் மற்றும் காலங்களை ஆவணப்படுத்தும் முதல் வகையான ஆன்லைன் வாயிலான சிங்கப்பூர் தமிழர்களின் கலைக் களஞ்சியத்தை (EST) சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் 2 ஆகஸ்ட் 2025 அன்று தொடங்கினார். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் கிடைக்கிறது.
இந்திய கலைகள், கலாச்சாரம் மற்றும் மரபுகள் பற்றி மேலும் அறிய ஆர்வமுள்ளவர்களுக்கு ஆங்கிலம், சீனம் மற்றும் மலாய் மொழிகளில் சுமார் 1,000 க்கும் மேற்பட்ட சிறப்பாகத் தொகுக்கப்பட்ட படைப்புகளும் உள்ளன.இது வாழும் ஆவணமாக இருப்பதால் புதுப்பிப்புகள் மற்றும் புதிய உள்ளீடுகளை இணைக்கவும் அனுமதிக்கிறது. தமிழ் கலைக் களஞ்சியத்திற்க்கு பங்களிக்க பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள். ஒரு கருத்து படிவம் மூலம் கூடுதல் தகவல்கள் அல்லது திருத்தங்களை சமர்ப்பிக்கலாம்.
இதன் மூலன் உலகளாவிய அறிவின் பரிணாம வளர்ச்சியை மிக எளிதாகப் புரிந்துகொண்டு, வரலாற்றுத் தரவுகளைத் துல்லியமாகத் தெரிந்துகொள்வதன் மூலம் உங்களின் பொது அறிவை மேம்படுத்தி, எந்தவொரு விவாதத்திலும் தனித்துவமான வரலாற்று ஆதாரங்களுடன் பேசும் திறனைப் பெறலாம்.