

ஒரு கட்டிடக் கலை ஒரே நேரத்தில் லட்சியமாகவும், அழகாகவும், பிரபலமாகவும் இருக்க முடியும் என்பதற்கு சான்றாக இருப்பது தான் ஸ்பெயின் நாட்டின் பில்பாவோ கக்கன் ஹெய்ம் (Guggenheim Museum Bilbao) அருங்காட்சியகம். தொழில்துறை வீழ்ச்சியில் இருந்த ஸ்பெயின் பில்பாவோ நகரத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, கக்கன் ஹெய்ம் அருங்காட்சியகம் கட்டப்பட்டது. அருங்காட்சியகம் உருவானதன் சுவாரஸ்யமான பின்னணி.
கனடாவில் பிறந்த அமெரிக்க கட்டிடக் கலைஞர் ஃபிராங்க் ஓ கெஹ்ரி வடிவமைத்த இந்த அருங்காட்சியகம், அதன் புதுமையான மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்பால் உலகப் புகழ் பெற்றது. பில்பாவோவின் கக்கன்ஹெய்ம் அருங்காட்சியகம், ஸ்பெயினின் பிஸ்கேயில் பில்பாவோவில் உள்ள நவீன மற்றும் சமகால கலைகளின் அருங்காட்சியகமாகும். இது சாலமன் ஆர்.கக்கன்ஹெய்ம் அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்ட பல அருங்காட்சியகங்களில் ஒன்றாகும்.
ஸ்பானிஷ் மற்றும் சர்வதேச கலைஞர்களின் படைப்புகளின் நிரந்தர கண்காட்சியான இது 211 மில்லியன் ஸ்பெயின் கரன்சி (240 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) மதிப்பில் பாஸ்க் நகரின் அருகில் நெர்வியன் நதிக்கரையில் கட்டப்பட்டது.
இது 1997ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி ஸ்பெயினின் மன்னர் ஜுவான் கார்லோஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதில் 250 சமகால கலைப் படைப்புகளின் கண்காட்சி இடம்பெற்றுள்ளது. இது ஸ்பெயினின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். இதன் திறப்புவிழா அன்றே ஒரு மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்தது. இந்த அருங்காட்சியகம், மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து, நகரத்தின் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரித்தது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியது.
இந்த வெற்றியைக் கண்ட பிற நகரங்களும், இதுபோன்ற பெரிய கலாச்சார திட்டங்களின் மூலம் தங்கள் நகரங்களை மாற்றியமைக்க முயன்றதால், இந்த நிகழ்வு 'பில்பாவ் விளைவு' என்று அழைக்கப்படுகிறது.
ஸ்பெயின் நாட்டின் கரடுமுரடான பாஸ்க் பகுதியில் அமைந்துள்ளது பில்பாவோ துறைமுக நகரம். ஒரு காலத்தில் இங்கு எஃகு மற்றும் கப்பல் கட்டும் தொழிலும் கொடி கட்டிப் பறந்தது. ஒரு தீவிரவாத தாக்குதல்களுக்கு பின்னர் அத்தொழில் வீழ்ச்சி அடைந்தது.
சிதைந்த துறைமுக பகுதியில் அதன் வருமானத்தை ஈடுகட்ட சிட்னி ஓபரா ஹவுஸ் போன்ற ஒரு சுற்றுலா மையமாக உருவானது தான் கக்கன் ஹெய்ம் அருங்காட்சியகம்.
இதற்காக பாஸ்க் அரசாங்கம் 100 மில்லியன் டாலர்களை கக்கன் ஹெய்ம் அறக்கட்டளை இயக்குநர் தாமஸ் கிரென்ஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது. அருங்காட்சியகம் வடிவமைப்பு போட்டியில் வென்ற கனடா கட்டிட வல்லுநர் ஃபிராங்க் கெஹ்ரி வசம் கட்டுமானப்பணி ஒப்படைக்கப்பட்டது. அவரின் 5 வருட உழைப்பில் (1972-1979) உருவானது தான் கக்கன் ஹெய்ம் அருங்காட்சியகம்.
ஃபிராங்க் கெஹ்ரி (Frank Gehry) ஒரு புகழ்பெற்ற கனடிய-அமெரிக்க கட்டிடக் கலைஞர் மற்றும் வடிவமைப்பாளர் ஆவார், இவர் தனது சிற்பம் போன்ற, துணிச்சலான மற்றும் எதிர்பாராத வடிவமைப்புகளுக்குப் பெயர் பெற்றவர். கம்ப்யூட்டர் மூலம் கட்டிடங்கள் வடிவமைப்பதில் இவர் முன்னோடி. முக்கியமாக பில்பாவோவில் உள்ள குகன்ஹெய்ம் அருங்காட்சியகம் (Guggenheim Museum Bilbao) மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வால்ட் டிஸ்னி கச்சேரி அரங்கம் (Walt Disney Concert Hall) போன்ற கட்டிடங்கள் மூலம் உலகப் புகழ் பெற்றார், மேலும் அன்றாடப் பொருட்களைக் கொண்டு கட்டிடங்கள் மற்றும் மரச்சாமான்களை வடிவமைத்ததன் மூலம் கட்டிடக்கலையின் போக்கையே மாற்றியமைத்தவர்.
பாஸ்க் நகரத்தில் உள்ள பில்பாவோ நகரின் வழியாக பாயும் நெர்வியன் நதியின் மேற்கு கரையில் கார்டா ப்ரியன் கடலை அடையும் முன் உள்ள கழிமுகப்பகுதியில் கக்கன் ஹெய்ம் அருங்காட்சியகம் 24,000 சதுர மீட்டர்கள் உள்பரப்பு இடத்தில், 50 மீட்டர் உயரத்தில் பிரமாண்டமான எட்ரியத்தை மையமாகவும் 19 காட்சியகங்கள் மரக்கிளைகள் போல அமைந்துள்ள அமைப்பில் கட்டப்பட்டது.
வெளிப்புறம் பளபளப்பாக இருக்கும் பொருட்டு 33,000 டைட்டானியம் தகடுகள் எஃகு பிரேம்களில் சுண்ணாம்பு கலவை மூலம் இணைக்கப்பட்டது. ஆற்றுப் பகுதியில் இருந்து பார்த்தால் ஒரு கப்பல் நிற்பது போலவும், மேலிருந்து பார்க்கும்போது ஒரு பூ விரிந்து இருப்பது போலவும் தெரிகிறது இதன் அமைப்பு. இதனை கட்டும் போது ஃபிராங்க் கெஹ்ரி வயது 60, இதன் கட்டுமானத்திற்கு அவர் பெற்றது 89 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது உலகின் அதிக பார்வையாளர்களை கொண்ட அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்று. வருடம் ஒன்றுக்கு 20 மில்லியன் மக்கள் இதனை பார்க்க வருகிறார்கள். அதன் மூலம் வருடம் தோறும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு அது 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கி வருகின்றது.