17-06-1911
"நாதா!"
"ம்ம்…"
"மணி ஆச்சு..."
"ம்ம்"
"நாதா... அதை எடுத்துக்கொண்டாயா?"
"எடுத்துக் கொண்டேன்."
"பின் ஏன் புறப்பட தாமதம்?"
"இதோ புறப்பட்டு விட்டேன். நான் காளி மற்றும் பாரத மாதவை வணங்க வேண்டும்."
"சரி... நாதா... பயப்படாதே..."
"ம்ம்..."
நாதன் கண்களை மூடிக்கொண்டு காளி தேவியை வணங்கினான். பிறகு 'பாரத மாதா’வை தியானித்தான். தியானதிற்கு பிறகு பாரத மாதாவின் கால்களைத் தொட்டு தன் கண்களில் ஒற்றிக்கொண்டான் .
"தோழர்களே... நான் தயார். நான் உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்."
அங்கு 4 பேர் இருந்தனர். ஒவ்வொருவராக நாதனை கட்டிப்பிடித்து பிரியாவிடை கொடுத்தார்கள்.
"பாரத மாதாவிற்கு ஜெய்" என்று சொல்லி கிளம்பினான் .
மணி ஆச்சு...!
திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் மணியாச்சி ஸ்டேஷன் வந்தது .
நாதன் மிக நிதானமாக நடந்தான்.
ரயில் மணியாச்சியில் 10 நிமிடங்கள் மட்டுமே நிற்கும். நாதன் மிக மிக பொறுமையுடன் முதல் வகுப்பு பெட்டி நோக்கி நடந்தான். கடைசி கோச் முன்பாக முதல் வகுப்பு பெட்டி இருந்தது.
நாதன் வந்துவிட்டான்.
மணி ஆச்சு...!
நாதன் முதல் வகுப்பு பெட்டி கதவைத் திறந்தான். ஒரு ஆங்கில துரை மற்றும் அவன் மனைவி இருந்தனர்.
ஆம். ஆஷ் துரைதான்!
வ.உ.சி மற்றும் சிவாவை சிறையில் அடைத்து பெரும் சித்திரவதைக்குக் காரணமான அதே ஆஷ் துரைதான் .
நாதன் தன் பாக்கெட்-லிருந்து துப்பாக்கியை எடுத்து ஆஷ் துரையை சுட்டான். ஆஷ் துரை இறந்தான் .
உடனே... நாதன் பொது கழிப்பிடம் சென்று துப்பாக்கியால் தன் தலையில் சுட்டான். அவனது மூளை சிதறியது.
ஆம்!
நாதன் வேறு யாரும் அல்ல. வாஞ்சிநாதன்தான் .
பயங்கர வாதம் தீர்வு அல்ல. ஆனால் தான் கொண்ட தேச பற்றின் காரணமாக அந்த வழியைத் தேர்ந்து எடுத்தான்.
அவனிடம் தேச பற்று, தியாகம், அர்ப்பணிப்பு... இவற்றிக்கு வாஞ்சிநாதனிடம் குறைவே இல்லை. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இதுபோல் எங்கும் இந்த மாதிரி நிகழ்வு நடக்கவில்லை.
ஒரு வேளை... இந்த தியாகம், தேச பற்று மற்றும் அர்ப்பணிப்பு இன்றைய மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வருமே ஆனால்... ஒரு எரிமலை வெடிக்கும்.
அது ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளுக்குச் சமம் ...!
அது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளுக்குச் சமம் ...!!
அது ஆயிரக்கணக்கான அணுகுண்டுகளுக்கு சமம் ...!!!
நமக்கு சம தர்ம நாட்டை உருவாக்க பயங்கரம் அற்ற கோடிக்கணக்கான இளைஞர்கள் அவசியம். இதுவே நமது இன்றைய தேவை. பயங்கரவாதம் அல்ல...!
வாஞ்சிநாதனின் தியாகம், அர்ப்பணிப்பு உள்ள மக்களே தேவை...!
வாஞ்சிநாதனுக்கு வீர வணக்கம்!
வாஞ்சிநாதனின் தியாகம் பரவட்டும்!
வாஞ்சிநாதனின் அர்ப்பணிப்பு பரவட்டும்!