சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது வெள்ளை மாளிகை. இந்த வெள்ளை மாளிகை உருவான வரலாற்றைத் தேடிப்போனால் அது 1688ல் போய் நிற்கிறது. அப்போதுதான் இந்தியாவின் முதல் மாநகராட்சியாக மெட்ராஸ் மாநகராட்சி உதயமானது. கிழக்கிந்திய கம்பெனியின் தலைவராக இருந்த சர்.ஜோசய்யா சைல்ட் என்பவரின் மூளையில் உதித்த யோசனைதான் இது. உள்ளாட்சி நிர்வாகத்தை கவனிப்பதற்கென்றே ஒரு தனி அமைப்பு தேவை என்று அவர் கருதினார்.
இது குறித்து அப்போது இங்கிலாந்தை ஆட்சி செய்த மன்னர் இரண்டாம் ஜேம்சிடம் அவர் எடுத்துக் கூற, மன்னரும் உடனடியாக அதற்கு ஒப்புதல் அளித்து விட்டார். இதனையடுத்து, 1688ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மெட்ராஸ் மாநகராட்சி தொடங்கப்பட்டது.
நதானியேல் ஹிக்கின்சன் என்பவர் முதல் மேயராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உதவி செய்வதற்காக ஆங்கிலேயர்கள், போர்த்துகீசியர்கள், யூதர்கள், இந்துக்கள் என பலதரப்பு பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது.
இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் அதே செப்டம்பர் 29ம் தேதி புதிய மேயர் தேர்வு செய்யப்பட்டார். இப்படித்தான் இந்தியாவின் முதல் மாநகராட்சி தனது பணியைத் தொடங்கியது. அப்போது ரிப்பன் மாளிகை கட்டப்படவில்லை. கோட்டைக்குள் இருந்த டவுன் ஹாலில்தான் முதல் மாநகராட்சி செயல்பட்டது.
ஆறே மாதத்தில் முதல் மேயர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அடுத்ததாக, லிட்டில்டன் என்பவர் மேயரானார். மாநகராட்சி தனது பணிகளை மேற்கொள்ள போதுமான நிதி இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போதைய மெட்ராஸ் ஆளுநராக இருந்த சர்.எலிஹூ யேலுக்கும் மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் இடையே அதிகார மோதல்கள் ஏற்பட்டன. அப்படியே சண்டை சச்சரவுகளுடன் போய்க்கொண்டிருந்த மாநகராட்சி நிர்வாகம் 1727ல் மறுசீரமைக்கப்பட்டது. நகரம் வளர வளர மாநகராட்சியின் பணிகளும் அதிகரித்துக் கொண்டே சென்றன.
இந்நிலையில் டவுன் ஹால் பகுதியை அரசு எடுத்துக்கொண்டதால் அங்கிருந்த மாநகராட்சி அலுவலகம், ஜார்ஜ் டவுன் பகுதியின் எர்ரபாலு செட்டி தெருவுக்கு மாற்றப்பட்டது. பின்னர் சில ஆண்டுகளில் அந்த இடம் போதவில்லை எனக் கருதப்பட்டதால் புதிய இடம் தேடும் படலம் தொடங்கியது. அப்போதுதான் பீப்பிள்ஸ் பார்க் பகுதியில் ஓர் இடத்தை ஒதுக்கி மாநகராட்சிக்கென புதிய கட்டடம் கட்டுவதென முடிவு செய்யப்பட்டது.
அப்படித்தான் அந்தக் காலத்திலேயே 7.5 லட்ச ரூபாய் செலவு செய்து தற்போதுள்ள ரிப்பன் மாளிகை கட்டப்பட்டது. நான்கு ஆண்டுகளாக இதைப் பார்த்துப் பார்த்து இந்தோ - சராசனிக் பாணியில் பிரம்மாண்டமாகக் கட்டித் தந்தவர் லோகநாத முதலியார்.
1913ல் இந்தக் கட்டடம் திறந்துவைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் மூவாயிரத்திற்கும் அதிகமான முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மாநகராட்சி கட்டடம் என்பதால் உள்ளாட்சி நிர்வாகத்தில் பல்வேறு சீரமைப்புகளைச் செய்த லார்ட் ரிப்பனின் பெயரையே இதற்கும் வைத்துவிட்டனர். அவரை நினைவு கூறும் வகையில் அவரது சிலை ஒன்றும் இங்கு நிறுவப்பட்டது.
252 அடி நீளமும், 126 அடி அகலமும் கொண்ட இந்தக் கட்டடத்தின் முக்கியமான அம்சம், அதன் நடுவில் இருக்கும் கோபுரம். 132 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தின் நடுவில் எட்டு அடி விட்டத்தில் ஒரு பிரம்மாண்ட கடிகாரமும் அமைக்கப்பட்டது. இதற்கு தினமும் சாவி கொடுப்பார்கள். அந்தக் காலத்தில் மெட்ராஸ்க்கு வரும் நிறைய பேர், சுமார் நூறு அடி உயரத்தில் இருந்த இந்த மெகா சைஸ் கடிகாரத்தைப் பார்த்து வியந்து போனார்கள்.
இன்றைக்கும் சென்னைக்கு வருபவர்கள் இந்த வெள்ளை மாளிகையை பார்த்தால் வியப்பாகத்தான் பார்ப்பார்கள்.