சூரியகாந்தி செடியை தோட்டத்தில் அல்லது வீட்டில் வளர்த்தால் அந்தப் பகுதியில் உள்ள அசுத்தமான காற்று சுத்தமாகும். அந்தளவிற்கு ஆற்றலைக் கொண்டது. அம்மலரின் விதை எண்ணெய் எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்டது. நல்ல எண்ணெயில் இம்மலர்களைப் போட்டு காய்ச்சி தைலமாகப் பயன்படுத்தி வந்தால் அடிக்கடி சளி பிடிப்பது குணமாகிறது. உடலில் இந்த தைலத்தை தேய்ப்பதால் உடல் வலி, கணுக்கால் வீக்கம், கை கால் குடைச்சல் முதலியன குணமாகும்.
ரஷ்ய டாக்டர் மெத்கராஷ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது ஆயில் புல்லிங் முறை. அதனை தற்போது இந்தியாவில் உள்ள இயற்கை நல மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஆயில் புல்லிங் முறைப்படி புற்றுநோய் முதல் இதயவலி வரை பலவகைப்பட்ட நீண்ட கால நோய்களை குணப்படுத்தலாம் என்கிறார்கள். வாய் பல்வேறு நுண்ணுயிரிகளுக்கு நாற்றங்கால் போல் செயல்படுகிறது. எண்ணெய் கொப்பளித்து வந்தால் அக்கிருமிகள் அழிந்து நம்மை நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. ஆயில் புல்லிங் இரத்த நாளங்களில் பெருகி விட்ட கொழுப்பை அகற்றுகிறது. அதனால் இரத்த ஓட்டம் சீராகி நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
வாயில் ஏற்படுகின்ற துர்நாற்றத்தைத் தவிர்க்க பலவிதமான பற்பசைகள் பயன்படுத்தப்பட்டாலும் சிலருக்கு இது நீங்காத பிரச்னையாகவே இருந்து வருகிறது. ஈறுகளிலும், பற்களின் இடையேயும் காணப்படும் பாக்டீரியாக்களாலும், உணவுத் துகள்களாலும் இந்த துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க, தினமும் அதிகாலையில் ஒரு மேசைக் கரண்டி சூரிய காந்தி எண்ணெயினால் பற்களை 15 முதல் 20 நிமிடம் வரை மூன்று முறை சாப்பிடுவதற்கு முன் கொப்பளித்தால் துர்நாற்றம் அகன்று விடும் என்கிறார் ரஷ்ய மருத்துவர் மெத்கராஷ்.
இந்த எண்ணெய் நமது உடம்பிலுள்ள என்சைம்களையும் ஜீரணிக்கச் செய்துவிடும். மேலும், சுவை நரம்புகள் சுத்தப்படுத்தப்படுவதோடு, புத்துணர்ச்சி ஊட்டப்படுகிறது. இந்த எண்ணெய் மருத்துவம் பலவிதமான நோய்களையும்,உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள், மாதவிடாய் கோளாறுகள் போன்ற பல நோய்களுக்கும் மருந்தாக அமையும். மேலும், காய்ச்சல் போன்ற உடல்நலம் சரியில்லாதபோதும் இதனை தொடரலாம் என்கிறார் மெத்கராஷ்.
சூரியகாந்தி எண்ணெய் நமது இரத்தத்தில் உள்ள தீமை செய்யும் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் உடையது என்பதை ஆய்வில் நிரூபித்துள்ளனர். சூரியகாந்தி எண்ணெயில் வைட்டமின் ‘ஈ‘ அதிகமுள்ளது. இது நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் பிரிரேடிக்கல்ஸ்களை வளரவிடாமல் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுவதுடன் ஆஸ்துமா, ஆர்த்ரைடிஸ் மற்றும் ருமேடிக் ஆர்த்ரைடிஸ் வராமல் தடுக்கும். அல்சைமர் நோயின் வளர்ச்சியைத் தடுக்கும்.
சூரியகாந்தி எண்ணெயில் உள்ள மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி வைக்க உதவும். அதோடு, மைக்ரான் தலைவலி வராமல் தடுக்கும். மேலும், பற்களுக்கும், எலும்புகளுக்கும் பலம் சேர்க்க உதவுகிறது.
சூரியகாந்தி எண்ணெயில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாகவும், ஒமேகா 3, ஒமேகா 6 மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் அதிகமாகவும் இருப்பதால், இந்த எண்ணெய் இரத்தத்தில் எல்டிஎல் (கெட்ட) கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க உதவும் மற்றும் இருதய ஆரோக்கியத்தையும் இது மேம்படுத்துகிறது. இந்த எண்ணெயில் உள்ள டோகோபெரோல் வழுக்கை மற்றும் அதிகப்படியான முடி உதிர்தல் போன்ற முடி பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. ஆனால், இதன் அதிகப்படியான பயன்பாடு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள்.