
ஆலாரே ஹோலி! ஆலாரே!" என்று மகிழ்வுடன் பாடியவாறு, மக்கள் ஒருவர் மீதொருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசிக்கொண்டு ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடு கின்றனர். ஹோலிக்கு முதல் நாளன்று பெரிய நெருப்புகளை மூட்டும் நிகழ்வு, ஹோலிகா தகனம் அல்லது சோட்டி ஹோலி என்று அழைக்கப்படும்.
ஹோலிப் பண்டிகை, குளிர்காலத்தின் இறுதியில் பிப்ரவரி/மார்ச் (பங்குனிப் பௌர்ணமி) மாதத்தின் கடைசி முழு நிலவு நாளில் வரும். இந்த ஆண்டில் ஹோலிப் பண்டிகை (துலாந்தி) மார்ச் 14 ஆம் தேதியன்றும் ஹோலிகா தகனம் மார்ச் 13 ஆம் தேதியன்றும் கொண்டாடப்படுகின்றன.
பஞ்சமிக்கு (முழு நிலவிற்கு பிறகு ஐந்தாவது நாள்) சில நாட்கள் கழித்து வருகின்ற அரங்க பஞ்சமியுடன், ஹோலி வண்ணப் பண்டிகை முடிவடையும்.
ஹோலி கொண்டாட்டத்தின் பின்னணியில் இருக்கும் சுவாரசியமான கதைகள்:
கதை (1) :
வைணவ இறையியலில், இரண்யகசிபு அசுரர்களின் அரசன். இவனுக்கு பிரம்மா தந்த வரத்தால் இவனை யாராலும் கொல்ல முடியவில்லை. அந்த வரம் இரண்யகசிபுவின் பெருந்தவத்தால் கிடைத்தது. இவ்வரத்தின்படி, இவனை சுலபமாக யாராலும் கொல்ல இயலாது. இதனால் இரண்யகசிபு செருக்கு மிகுந்து விண்ணையும், மண்ணையும் போரிட்டு வென்றான். எவரும் கடவுளைத் தொழாமல், தன்னை வழிபடவேண்டும் என ஆணையிட்டான்.
இரண்யகசிபுவின் மகன் பிரகலாதன் திருமாலின் பக்தன். இரண்யகசிபு பல தடவை அச்சுறுத்தியும், பிரகலாதன் திருமாலை வழிபட்டு வந்தான். பிரகலாதனைக் கொல்ல இரண்யகசிபு எடுத்த முயற்சிகள் யாவும் தோற்றன. இறுதியாக, பிரகலாதனை, தனது தங்கை ஹோலிகா மடியில் அமரச்செய்து தீயில் இறுத்த ஆணையிட்டான். ஹோலிகா தீயில் காப்பாக வாழும் துப்பட்டாவை அணிந்தவள். இதை அறிந்த பிரகலாதன் தனக்கு ஒன்றும் நேராவண்ணம் காத்திடுமாறு திருமாலை வழிபட்டு தப்பினான். தீப்பற்றி எரியத் தொடங்கியதும், ஹோலிகாவின் சால்வை பறந்து பிரகலாதனை மூடவே, அவள் தீயில் மடிய, பிரகலாதன் மட்டுமே தப்பிப் பிழைத்த காட்சியைக் கண்டு மக்கள் வியந்தனர். தங்கை ஹோலிகா எரிந்த நிகழ்வே ஹோலியாகக் கொண்டாடப்படுகிறது.
கதை (2):
கண்ணன் பிறந்து வளர்ந்த ப்ருந்தாவனத்திலும், மதுராவிலும் ஹோலித் திருவிழா 16 நாட்களுக்கு, ராதா கண்ணன் தெய்வீகக் காதலைக் கொண்டாடும் வகையில், அதாவது அரங்கபஞ்சமி வரை கொண்டாடப்படுகிறது. கண்ணனே, ஹோலியின் பரவலுக்கு காரணமெனக் கூறப்படுகிறது.
தவிர, கண்ணன் தன் தோலின் நிறம் கருப்பாகவும், ராதா சிவப்பாகவும் அழகாகவும் இருப்பதாகவும் தன் தாயாரிடம் முறையிட, கண்ணனின் தாயார் ராதை முகத்தில் வண்ணம் பூசிட முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
கதை (3):
பார்வதி தேவி சிவபெருமானை மணப்பதற்கு உதவும் பொருட்டு, காதல் கடவுள் சிவபெருமான் மீது தன் பூக்கணையைச் செலுத்தி அவரது தவத்தைக் கலைத்தபோது, சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணைத் திறந்ததால் ஆற்றல் செறிந்த அவரது பார்வையைத் தாங்கமுடியாமல் காமனின் உடல் சாம்பலானது. காமனின் மனைவி ரதியின் வேண்டுதலுக்கு இணங்க சிவபெருமான் அவரை உயிர்ப்பித்தார்.
அண்டத்தில், ஒளியின் திருவிழாவாக ஹோலி கருதப்படுகிறது. ஹோலிப் பண்டிகையின்போது, வேறுபட்ட அலைகளைக் கொண்ட ஒளிக்கதிர்கள் அண்டமெங்கும் பரவுகின்றன. பல்வேறு வண்ணங்கள் தோன்றி சூழ்நிலையில் உள்ள தனிமப் பொருட்களின் செயல்பாட்டிற்கு ஊட்டமும் முழுமையும் அளிக்கின்றன.
வசந்த காலப்பருவ மாற்றத்தின்போது நச்சுயிரி சார்ந்த காய்ச்சலும் சளியும் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. இதனால் இயற்கையான வண்ணம் நிறைந்த தூள்களை விளையாட்டாகத் தூக்கி எறிவதால் உண்டாகும் மருத்துவப் பயன்கள் அதிகம். ஹோலி பண்டிகை வண்ணங்கள் ஆயுர்வேத மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படும் வேப்பிலை, மஞ்சள், குங்குமம், வில்வம், மற்ற மருத்துவ மூலிகைகளினால், பாரம்பரிய பலாஷ் மலர்களால் மரபு முறையில் செய்யப் படுகின்றன.
இப்பண்டிகையின்போது தண்டை என்று அழைக்கப்படும் ஓரு சிறப்பு பானம் செய்து அருந்துவார்கள்.
சமீப காலத்தில், ஹோலி வண்ணப்பொடிகளின் மருத்துவ குணங்கள் மறைந்து கொண்டிருக்கின்றன என்றாலும், "ஆலா ரே ஹோலி! ஆலாரே!', உலகம் முழுவதும் தூம்-தாம்ஸே வண்ணமயமாக கொண்டாடப்படுகிறது என்பது நிதர்சனம்.
வாங்க நாமும் கொண்டாடலாம் "ஹோலி ஆலாரே! "