
இயற்கையின் படைப்புகளில் அதி அற்புதமான ஒன்று - மனிதன். எத்தனையோ கோடி மக்கள். ஆனால் ஒவ்வொருவரும் தனித்தனியானவர்கள். இது எப்படி சாத்தியம்?
ஒரு ஓவியர் பல கதாபாத்திரங்களை வரைகிறார் என்றால், ஒரு சிற்பி பல சிற்பங்களை வடிக்கிறார் என்றால், அந்த ஓவியங்களிலும், சிற்பங்களிலும் ஆண், பெண் முகச்சாயல் பெரும்பாலும் ஒன்று போலவே இருக்கும்.
ஆனால் இறையருளும், இயற்கையும் வித்தியாசமானவை - ஒவ்வொரு மனிதரையும் தனித்தனியானவராகப் படைப்பதில்!
ஒரு குடும்பத்தில் ஒரே சாயலுள்ள சில உறுப்பினர்கள் இருக்கலாம். ஒரே தோற்றம் கொண்ட இரட்டைப் பிறவிகள் இருக்கலாம். ஆனால் இவர்களும் ஒருவருக்கொருவர் வித்தியாசமானவரே! எப்படி?
அவர்களுடைய கைரேகை, உதட்டு ரேகை, கண் ரேகை எல்லாமே தனித்தனியானதாக அமைந்திருக்கிறதே, அதனால்தான். ஒருவரைப்போல மற்றொருவருக்கு இல்லை – உலகத்து இத்தனை கோடி மக்களுக்கும் இடையே! என்ன அதிசயம் இது!
ஒரு குடும்பத்தில் கொள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா, மகன், பேரன், கொள்ளுப் பேரன் என்ற வம்சாவழியில் ஜீன் அதாவது மரபணு தொடர்பு இருக்கலாம், ஆனால் ரேகைத் தொடர்பு நிச்சயமாக இருப்பதில்லை. ஆமாம் இந்த ஆறு உறவுகளுக்குள் ஒருவருக்கொருவரை வித்தியாசமாகக் காட்டுவது, இந்த ரேகைதான்!
அதாவது, ஒருவரது ரேகைபோல இன்னொருவருக்கு இல்லை என்ற உண்மை, நாம் ஒவ்வொருவரும் தனித்தனியே சிறப்பு கொண்டிருக்கிறோம் என்பதைத்தான் உணர்த்துகிறது. பெருந்தலைவர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள் என்று பிரபலமாக முன்னேற்றம் கண்ட எத்தனையோ பேரைப்போலவே - அவராகவே இன்னொருவர் என்றுமே உருவாகாத உண்மையும் இந்தத் தனித்தன்மைச் சிறப்பை நிரூபிக்கிறது. ஒவ்வொருவரின் திறமையும் தனித்தனிதான். அதாவது ஒரு மஹா பெரியவாதான், ஒரு மகாத்மா காந்திதான், ஒரு விவேகானந்தர்தான், ஒரு மகாகவி பாரதியார்தான், ஒரு அப்துல் கலாம்தான், ஒரு காமராஜர்தான், ஒரு அமிதாப் பச்சன்தான், ஒரு ரஜினிகாந்த்தான், ஒரு சச்சின் டெண்டுல்கர்தான், ஒரு கண்ணதாசன்தான், ஒரு சுஜாதாதான், ஒரு (ஓவியம்) மணியம்தான், ஒரு கல்கிதான்……
அதேபோல தோற்றத்தை வைத்தும், ஒருவர் மேற்கொண்டிருக்கும் பணியை வைத்தும், அவருடையய சிறப்புத் திறமையை எடைபோடவும் இயலாது. இத்தகைய தனிச் சிறப்பு கொண்ட சிலரின் திறமைகள் சென்னை நகரில் பிரகாசிக்கின்றன.
ஆமாம், நகரில் சில பகுதிகளில் சில சுவர்களில் ஓவியங்கள் பளிச்சிடுவதைக் காண்கிறோம். வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில் உள்ள பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச் சுவர்களில் வரையப்பட்டிருக்கும் தேசத் தலைவர்கள் மற்றும் அறிஞர்களின் ஓவியங்கள் அந்தப் பகுதிக்கே புதுப்பொலிவு தருகின்றன.
இந்த ஓவியங்களை வரைந்தவர்கள் காவல்துறையினர் என்பது வியப்பான செய்தி. சென்னையில் பணிபுரியும் காவலர்களின் தனித் திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் ‘புதுமை செய்வோம்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமே இந்த ஓவியங்கள்.
ஓவியம், விழிப்புணர்வு வாசகங்கள் என்று மட்டும் இல்லாமல், கராத்தே தற்காப்பு மற்றும் வேறு கலைகளிலும் காவலர்கள் தம் திறமைகளைப் பிறருக்கு, குறிப்பாக மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கிறார்கள்.
அதோடு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடுதலைக் கற்பித்து, தோட்டக்கலையையும், அதன் மூலமாக ஆரோக்கியமான சுற்றுச் சூழலையும் உருவாக்குகிறார்கள்.
போலீசாரின் இந்த ஆக்கபூர்வமான செயல்பாடு அந்தப் பள்ளி நிர்வாகம் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் உற்சாகமடைந்த காவல்துறை, தன் காவலர்களிடம் உள்ள இதுபோன்ற தனித்திறமைகளை சென்னை முழுவதுமான விரிவுபடுத்துகிறது.
சென்னை அண்ணாசாலையிலுள்ள அரசினர் கலைக்கல்லூரி, மற்றும் நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் கல்லூரி வளாக சுற்றுச் சுவர்களிலும் ஓவியங்களைக் காண முடிகிறது. இவை அந்தந்த கல்லூரி மாணவியரின் கைவண்ணம் என்றும் தெரியவருகிறது.
யாரிடமுமுள்ள தனித் திறமை, பொதுநலனுக்காகப் பயன்படுகிறது என்றால் அது வரவேற்கத்தக்கதுதானே!