குதிரை வண்டி பயணம்!

குதிரை வண்டி பயணம்
குதிரை வண்டி பயணம்https://envaseprimario.full-mark.com

ற்காலத்தில் நம்மில் பலரிடம் மோட்டார் சைக்கிள் இருக்கிறது, கார் இருக்கிறது. தேவைப்படும்போது ஆட்டோ, டாக்ஸிக்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், அக்காலத்தில் பொதுமக்கள் பெரிதும் நம்பியிருந்த வாடகை வாகனம் குதிரை வண்டி.

மாட்டு வண்டிச் சக்கரத்தைப் போல இரண்டு பெரிய சக்கரங்கள், அதில் மரத்தினால் ஆன 14 ஸ்போக்ஸ்கள், உள்ளே நான்கு பேர் உட்காரும் அளவிற்கு இடம். அதன் மேல் கவிழ்த்துப் போட்ட ‘ப’ வடிவத்தில் ஒரு கூடு. முன்புறத்தின் இரு பக்கங்களிலும் ஐந்து அடி அளவிற்கு நீட்டிக் கொண்டிருக்கும் மரத்தினால் ஆன இரண்டு தடினமான கட்டையின் இடையில் குதிரை, தோலினால் ஆன வார்கள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். குதிரையின் இரண்டு கண்களின் பக்கவாட்டிலும் ஓடும்போது அவற்றின் பார்வை திசை திரும்பாமல் இருக்க தோலில் ஒரு அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும். பின்புறம் வண்டியில் பயணிகள் ஏறி உட்கார ஒரு படிக்கட்டு அமைந்திருக்கும். வண்டியின் கீழ்ப்பகுதியில் ஒரு பெரிய கோணிப்பை தொங்கிக் கொண்டிருக்கும். வண்டியின் பின்புறம் வலது புறத்தில் ஒரு தடிமனான கம்பி தொங்கிக் கொண்டிருக்கும்.

வண்டிக்குள் சுமார் அரை அடி தடிமனுக்கு பசும்புற்கள் பரப்பப்பட்டிருக்கும். இதுதான் குதிரைக்கான முக்கிய உணவு. அதன் மீது ஒரு கோரைப்பாய் போடப்பட்டிருக்கும். ஏறி அமர்ந்தால் மெத்தையில் அமர்வது போன்ற உணர்வு ஏற்படும். வண்டிக்காரர் வண்டியின் வலது பக்கத்தில் அமர்ந்திருப்பார். கையில் ஒரு பிரம்பில் இணைக்கப்பட்ட மெல்லிய சாட்டை வைத்திருப்பார்.

இதையும் படியுங்கள்:
7 வித ஊட்டச்சத்து குறைபாடுகளும் அவற்றுக்கான தீர்வுகளும்!
குதிரை வண்டி பயணம்

அனைவரும் ஏறி அமர்ந்ததும் அவரே பின்புறக் கம்பியைத் தாளிட்டு வண்டியில் ஏறி அமர்ந்து வண்டியை ஓட்டத் தொடங்குவார். குதிரையின் மூக்கில் இணைக்கப்பட்டுள்ள கடிவாளப் பட்டையானது அவருடைய இடது கையில் இருக்கும். மற்றொரு கையில் சாட்டை இருக்கும். குதிரையின் வலது பக்கக் கடிவாளத்தை சற்றே இழுத்தால் வண்டி வலது புறம் திரும்பும். இடது பக்கக் கடிவாளத்தை இழுத்தால் வண்டி இடது புறம் திரும்பும். இரண்டையும் சமமாகப் பிடித்துச் சற்று லேசாக இழுத்தால் வண்டி நேராக ஓடும். வண்டி வேகமாகச் செல்ல வேண்டும் என்றால் சாட்டையால் பட்டும் படாமலும் குதிரையின் மீது அடிப்பார். பின்னர் சாட்டையில் இணைக்கப்பட்டுள்ள மூங்கில் பிரம்பை வண்டிச்சக்கரத்தின் ஸ்போக்ஸ் பட்டைகளில் நுழைக்க அதிலிருந்து படபடவென ஒரு தொடர் சத்தம் எழும்பும். அந்த சத்தத்தைக் கேட்டதும் குதிரை பிய்த்துக் கொண்டு ஓடும். குதிரைகள் அப்படிப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கும்.

குதிரை வண்டியில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவு பயணிக்க அந்நாட்களில் 25 காசுகள் வசூலிப்பார்கள். ஒரு முறையில் இரண்டு பேர், மூன்று பேர், நான்கு பேர் என ஏறிக் கொள்ளலாம். பயணம் முடிந்ததும் ஒவ்வொருவராக மெல்ல வண்டியிலிருந்து இறங்க வேண்டும். அப்படி இறங்கும்போது வண்டி முன்பக்கம் சற்று தூக்கும். குதிரை வண்டிக்காரர் அப்போது குதிரையுடன் இணைக்கப்பட்டுள்ள நீளக்கட்டையை கீழ்ப்பக்கமாக அழுத்திப்பிடித்துக் கொண்டு நிற்பார். அனைவரும் இறங்கிய பின்னர் அதிலிருந்து கையை எடுப்பார். பின்னர் குதிரையை வண்டியிலிருந்து அவிழ்த்து விட்டு வண்டிக்குள் இருக்கும் புற்களைச் சற்று பிய்த்து அவை சாப்பிடத் தருவார். குதிரை மெதுவாக அந்தப் புற்களை அரைத்துச் சாப்பிடும்.

ஆட்டோக்களின் ஆதிக்கத்திற்குப் பின்னர் குதிரை வண்டிகளின் பயன்பாடு முற்றிலுமாக நின்றுபோனது. குதிரை வண்டியில் பயணிக்கும் அனுபவம் அலாதியானது, அற்புதமானது. மனதிற்கு மகிழ்ச்சியை தரக்கூடிய ஒரு பயணமாக அது இருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com