கண்டங்களின் பெயர்கள் எப்படி வந்தன?

How the continents got their names?
How the continents got their names?https://www.worldatlas.com
Published on

ண்டங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன? யாராவது பிரபல மனிதர் இவற்றுக்குப் பெயர் சூட்டினாரா? இவை பற்றி பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும், சில தகவல்கள் பரவலாகப் பேசப்படுகின்றன. அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

‘ஆசியா’ என்பது கிரேக்க வார்த்தைதான். ‘ஏஜியா’ என்பதிலிருந்து கொஞ்சம் மாறிப்போன வார்த்தை இது. கி.மு. 440லிருந்தே இந்தக் கண்டம் ஆசியா என்று அழைக்கப்படுகிறது. ஏஜியன் கடலின் கிழக்குக் கரையில் இருந்த பகுதிகளை முன்பு ஆசியா என்று குறிப்பிட்டார்கள். பிறகு மொத்த கண்டத்திற்கும் அந்தப் பெயர் வந்து விட்டது.

ஐரோப்பாவைக் குறிக்கும், ‘யுரோப்’ என்ற வார்த்தை யுரோபா என்பதிலிருந்து வந்தது. கிரேக்கப் புராணத்தின்படி ஜியஸ் என்பவர் பிற கடவுளருக்கும், மனிதர்களுக்கும் தந்தையாகக் கருதப்படுகிறார். கிரீஸில் உள்ள மவுண்ட் ஒலிம்பஸ் என்ற மலையிலிருந்து இவர் ஆட்சி செய்கிறார். இவரின் காதலிகளில் ஒருத்தியின் பெயர் யுரோப்பா. ஜியஸ் யுரோப்பாவை ஒரு வெள்ளை எருதின் வடிவத்தில் வந்து கவர்ந்து சென்றாராம். கிரேக்க ஓவியங்களில் வெள்ளை எருதின்மீது அமர்ந்திருக்கும் யுரோபாவின் உருவம் மிகப் பிரபலம்.

அண்டார்டிகா என்பதும் கிரேக்க வார்த்தைதான். இதற்குப் பொருள் ‘வடக்கிற்கு எதிரானது’ என்பதாகும். பூமியின் தெற்குப் பகுதி நுனியில்தானே அண்டார்டிக்கா இருக்கிறது? எனவே, இது பொருத்தமானதுதான். (வட துருவத்தில் உள்ளது ஆர்க்டிக் என்பது நினைவிருக்கலாம்.)

ஆஃப்ரிக்காவிற்கு எதனால் அந்தப் பெயர்? ஆஃப்ரி என்ற பழங்குடியினர் அங்கே தொடக்கத்தில் வசித்தனர். ‘ஆஃப்ரிக்கரின் நிலம்’ என்ற அர்த்தத்தில் ஆஃப்ரிக்கா என்று இதற்குப் பெயரிடப்பட்டது. ஆஃப்ரிக்காவுக்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டதற்கு வேறொரு காரணமும் சொல்கிறார்கள். அஃபர் என்றால் ஃபோனிஷியன் மொழியில் (மத்திய தரைக்கடல் தீவுகளில் பேசப்பட்ட மொழி இது). இதற்கு, ‘தூசி’ என்று அர்த்தம். ‘தூசிகளின் நிலம்’ என்று இதற்கு அர்த்தம். ஆஃப்ரிக்காவின் வடக்குப் பகுதியில் வெப்பமான, பாலைவனம் போன்ற சூழல் நிலவுவது ஞாபகம் இருக்கிறதா?

ஆஸ்திரேலியா - ஆஸ்திரேலிஸ் என்றால் லத்தீன் மொழியில் ‘தெற்கில் உள்ள தெரியப்படாத பகுதி’ என்று அர்த்தம். அக்கால ரோமானியர்களுக்கு ஆஸ்திரேலியாவை அடைவதற்கான கடல் வழி தொழில் நுட்பம் இல்லை. எனவே, இந்தப் பகுதியைப் பின்னர்தான் அடைந்தார்கள். ஆஸ்திரேலியா என்று போகிறபோக்கில் இதற்குப் பெயர் சூட்டப்பட்டது. அதுவே நிலைத்துவிட்டது.

இதையும் படியுங்கள்:
புரூஸ் லீ மகள் ஷேனான் லீ சொல்லும் 9 முக்கிய வாழ்க்கைப் பாடங்கள்!
How the continents got their names?

அமெரிக்கா என்ற பெயர் எப்படி வந்தது? அமெரிக்கோ வெஸ்புகி என்பவரின் பெயர் கொண்டுதான் அமெரிக்கா என்று பெயரிடப்பட்டது என்று பள்ளிப் பாடங்களில் படித்திருக்கிறோம். 1499ல் இந்தப் பகுதியை அடைந்தவர் வெஸ்புகி. இது ஆசியாவின் ஒரு பகுதி இல்லை என்பதையும், இது ஒரு மிகவும் புதிய பகுதி என்பதையும் வெஸ்புகி கண்டறிந்து புத்தகமாக வெளியிட்டார். அந்தப் புத்தகம் எல்லா ஐரோப்பிய மொழிகளிலும் வெளியானது. 1507ல் ஜெர்மனியைச் சேர்ந்த மார்ட்டின் வல்ட்ஸீமுல்வர் என்பவர் உலக வரைபடத்தை உருவாக்கியபோது அமெரிக்காவையும் அதில் இணைத்தார். கொலம்பஸின் பயணங்கள் பற்றி அவருக்குத் தெரியாததால், வெஸ்புகியின் முதல் பெயரை ஒட்டி அமெரிக்கா என்று அதற்குப் பெயரிட்டார்

இப்போது புரிகிறதா கண்டங்களுக்கு ஏன் அந்தந்தப் பெயர்கள் வந்தன என்று?

கண்டங்கள் குறித்து வேறு ஒரு சுவாரசியத்தை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அவற்றின் தொடக்க மற்றும் இறுதி ஆங்கில எழுத்துகள் ஒன்றாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக Asia என்பதின் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் A என்பதுதான். பிற கண்டங்களுக்கும் இது பொருந்துகிறது. Europe, Africa, America, Australia, Antarctica. என்ன ஒரு பொருத்தம் பார்த்தீர்களா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com