மறைந்த ஹாலிவுட் நடிகர் புரூஸ் லீயின் மகள் ஷனான் லீ. இவர் ஒரு அமெரிக்க நடிகை மற்றும் தற்காப்பு கலை வீரர். இவர் எழுதிய புத்தகம், 'தண்ணீரைப் போல இரு என் நண்பனே’ (Be water, My friend). இந்தப் புத்தகம் வாழ்க்கையைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்தை அளிக்கிறது. இதில் தனது தந்தை புரூஸ் லீயின் வாழ்க்கை தத்துவங்கள், கொள்கை மற்றும் கோட்பாடுகளை பற்றி குறிப்பிட்டுள்ளார். அவை எப்படி நடைமுறை வாழ்க்கையில் உதவுகின்றன என்பது பற்றியும் விரிவாக இந்த புத்தகத்தில் விவரித்துள்ளார். இந்தப் புத்தகம் பேசும் முக்கியமான ஒன்பது விதமான பாடங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. இருக்கும் இடத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளுதல்: வேறு எந்த பொருளுக்கும் இல்லாத சிறப்பு தண்ணீருக்கு உண்டு. இதை ஒரு பானை, பாட்டில் அல்லது அண்டா என்று எந்த பாத்திரத்தில் வேண்டுமானாலும் ஊற்றி வைக்கலாம். பாத்திரத்தின் அளவிற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டுவிடும் தண்ணீர். அதுபோல மனிதர்களும் வாழ்க்கையில் வளைந்து கொடுத்து வாழப் பழக வேண்டும். புதிய புதிய கருத்துக்கள், யோசனைகளை ஏற்றுக்கொண்டு மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டால் ஒருவரால் சிறப்பாக வாழ முடியும்.
2. சுய வெறுமையை வளர்த்துக் கொள்ளுதல்: புரூஸ் லீ மனதை வெறுமையாக வைத்துக்கொள்வது பற்றி வலியுறுத்தி சொல்கிறார். நிறைய மனிதர்கள் தங்களுடைய பழைய துயரம் மிகுந்த வாழ்க்கையைப் பற்றிய ஞாபகங்களை நினைவடுக்குகளில் சேமித்து வைத்துக்கொண்டு அவதிப்படுகிறார்கள். அவற்றையெல்லாம் வெளியேற்றி மனதை வெறுமையாக வைத்துக்கொள்வது அவசியம். அப்போதுதான் புதிய அனுபவங்களையும் நடைமுறைகளையும் ஒருவரால் ஏற்றுக்கொள்ள முடியும்.
மூளையை வெறுமையாக வைத்திருப்பது என்றால் எதுவும் செய்யாமல் சோம்பேறித்தனமாக இருப்பது என்று அர்த்தம் அல்ல. ஏதாவது ஒரு புதிய விஷயத்தில் இறங்கும்போது, 'அது இப்படி ஆகிவிடுமோ, அப்படி ஆகிவிடுமோ?’ என்று எண்ணி முன்னதாகவே பயப்படாமல் முன் தீர்மானம் எதுவும் செய்து கொள்ளாமல் மனதை வைக்க வேண்டும் என்கிறார். தவறாக ஏதாவது நடந்து விடுமோ என்று எண்ணி அஞ்சி அதைப் பற்றிய சிந்தனையை மூளையில் ஆக்கிரமிக்க விட வேண்டாம் என்கிறார் புரூஸ் லீ.
3. ஒன்றும் செய்யாமல் இருத்தல்: திரைப்படங்களில் மிக மிக சுறுசுறுப்பாக சண்டைகளில் ஈடுபடும் புரூஸ் லீ வாழ்க்கையில் ஒன்றும் செய்யாமல் இருப்பதை வலியுறுத்தி சொல்கிறார். வாழ்க்கையில் அவ்வப்போது பிரச்னைகளும் சிக்கல்களும் தோன்றும். அப்போது என்ன தோன்றுகிறதோ அதற்கு ஏற்ற மாதிரி நடந்து கொண்டால் போதும். அவற்றை மென்மையாக கையாள்வதே சிறந்தது, கடினமான எதிர் வினைகளை ஆற்றக் கூடாது என்கிறார்.
4. தொடர்ந்து கற்றுக்கொண்டிருத்தல்: புரூஸ் லீ தனது வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருந்தார். இந்த உலகை புரிந்துகொள்ளவும் தனது அறிவை வளர்த்துக்கொள்ளவும் வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொண்டே இருந்தார். பிறரையும் அதேபோல இருக்க வேண்டும் என்று உற்சாகப்படுத்துகிறார். தொடர்ந்து கற்றுக்கொண்டே இருத்தல் ஒருவருக்கு வாழ்க்கையில் வளர்ச்சியை தரும் என்கிறார்.
5. மனதின் உள்முக ஆற்றல்: தண்ணீர் எப்படி எல்லாவிதமான சவால்களையும் ஏற்றுக்கொண்டு அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறதோ, மனிதனும் அதுபோல தன்னுள் இருக்கும் உள்முக ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் தோன்றும் தடைகள், தடங்கல்கள், சிக்கல்கள் போன்றவற்றை எதிர்கொண்டு சமாளித்து மீண்டு வருவதற்கு இந்த உள்முக ஆற்றல் மிகவும் உதவியாக இருக்கும்.
6. தன்னிச்சையாக செயல்படும் வித்தையை கற்றுக்கொள்ளுதல்: புரூஸ் லீ தன்னுடைய தற்காப்பு கலைகளை தண்ணீரின் நடனத்திற்கு ஒப்புமைப்படுத்தி கூறுகிறார். அருவியிலிருந்து கொட்டும் நீர் போல, நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் நீர் அழகாக நடனம் ஆடுவது போல, வளைந்து நெளிந்து ஓடும் நதிநீர் போல வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்கிறார். கட்டுப்பாடான பழைய விதிகளை பின்பற்றாமல் தனது மனதிற்கு தன்னிச்சையாக தோன்றும் எண்ணங்கள் மற்றும் புதிய கருத்துக்கள், யோசனைகள் போன்றவற்றை பயன்படுத்தி அந்தந்த நிமிடத்தில் அனுபவித்து வாழ வேண்டும் என்கிறார்.
7. உடல் வலிமையையும் கருணையையும் சமநிலைப்படுத்துதல்: தற்காப்பு கலையை கற்றுக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உடல் வலிமையும் மன வலிமையும் மிகவும் அவசியம். அதைப்போல நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு நல்ல எண்ணங்கள், கருணை, அனுதாபம், நேர்மறை எண்ணங்கள் மிகவும் அவசியம். உடல் வலிமையோடு மனதின் வலிமையும் சேர்ந்து சம நிலையில் இருக்கும்போது அந்த வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கும் என்கிறார் புரூஸ் லீ.
8. தனித்தன்மையை தழுவுங்கள்: தண்ணீர் எப்படி பலவித வடிவங்களை எடுத்தாலும் தனது சுயம் மாறாமல் இருக்கிறதோ அதுபோல மனிதனும் தனக்கான தனித்தன்மையுடன் இருக்க வேண்டும். உலகின் இயல்புக்கேறப தன்னை மாற்றிக்கொள்ளாமல் தன்னுடைய இயல்புக்கேற்ற மாதிரி வாழ்வது மிகவும் அவசியம் என்கிறார்.
9. உண்மை தன்மையுடன் வாழுங்கள்: தனது வாழ்நாள் முழுக்க ப்ரூஸ் லீ தன்னுடைய எண்ணங்களுக்கேற்ப செயல்பட்டு மனதிற்கு மிகவும் பிடித்ததை செய்து தனக்கான வழியில் வாழ்க்கை நடத்தினார். அதுபோல பிறரும் தனது வழியில் தனக்கு மிகப் பிடித்தவற்றை செய்து தனித்தன்மையுடன் செயல்பட வேண்டும். எந்தவிதமான தயக்கங்களுக்கும் இடம் கொடுக்காமல் வாழ வேண்டும் என்று சொல்கிறார்.