Slap Stick Comedy சொற்றொடர் எப்படி வந்தது தெரியுமா?

Joker
Joker
Published on

சர்க்கஸ் கோமாளிகள் - "பார்ப்போரை சிரிக்க வைத்து, நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகிறோம்!"

19.10.2024 அன்று அகில உலக சர்க்கஸ் கோமாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. நம் நாட்டில் கொல்கத்தாவில் அத்தகைய கோமாளிகளுக்குப் பாராட்டும், அங்கீகாரமும் அளிக்கப்பட்டன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் சர்க்கஸ் காட்சிகளில், பார்வையாளர்களை, குறிப்பாக குழந்தைகளை மகிழ்விக்க கோமாளிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர். சுமார் நான்கடி உயரமே கொண்ட இவர்கள் துள்ளி குதிப்பதும், கர்ணம் அடிப்பதும், திடீரென்று கத்துவதும், சிரிப்பதும் குழந்தைகளைப் பெரிதும் மகிழ்வித்தன. 

இவர்களை கேலிப் பொருட்களாக்கி சர்க்கஸ் கம்பெனிகள் வருமானம் பெருக்கிக் கொண்டன என்பதைவிட, இவ்வாறு வளர்ச்சி குன்றிய பலருக்கு வாழ்வளித்தன என்றே சொல்லலாம். ஆமாம், இந்தக் குறையுடன் வேறு எந்த வேலைக்குமே இவர்கள் பொருந்த மாட்டார்கள் என்பதோடு, அவ்வாறு வேலை செய்து ஊதியம் பெறும் வாய்ப்பு கிடைத்தாலும், அதில் மகிழ்ச்சியைவிட, பிறருடைய பரிகாசத்துக்கு ஆளாகும் அவலம்தான் அதிகம். இப்படிப்பட்ட பலவீனத்தையே முதலீடாக வைத்து, தானே கேலிப்பொருளாகி, பிறரை மகிழச் செய்தால் என்ன என்று தோன்றிய எண்ணமே சர்க்கஸ் கோமாளி என்ற பாத்திரம் உருவாக அடிப்படைக் காரணம். அதாவது தெருவில் போவோரும் வருவோரும் பரிகசிப்பதைவிட, நுழைவுக் கட்டணம் செலுத்தி அரங்கத்திற்குள் தங்களைப் பார்ப்பதற்கென்றே வருபவர்களை மகிழ்விப்பது என்ற கோட்பாடு! 

அவர்களை வெறும் கோமாளிகள் என்று குறைவாக மதிப்பிட்டுவிட முடியாது. சர்க்கஸ் காட்சியில் பிற வீரர்கள் செய்து காட்டும் சாகசங்களைத் தாங்களும் செய்து காட்டும் திறமையும், பயிற்சியும் பெற்றவர்கள் இவர்கள். உதாரணமாக ட்ரபீஸ் எனப்படும் அந்தரத்து ஊஞ்சலில் தொங்கி அங்குமிங்குமாக சஞ்சரிக்கும் விளையாட்டில் இவர்களும் பங்கேற்பார்கள். ஒரு கட்டத்தில் ஒரு திசையில் ட்ரபீஸில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும் வீரர், எதிர் ட்ரபீஸிலிருந்து பறந்துவரும் கோமாளியின் கால்களைப் பற்ற முயற்சித்து, அவருடைய கீழ் ஆடையின் அடியைப் பற்றிக் கொள்ள, அவர் தன் கால்களையே பற்றிக் கொண்டிருக்கிறார் என்பது போன்ற பிரமையை உருவாக்கி, பிறகு அப்படி இல்லை என்பதாக உருவகித்து, அவருடைய பிடியிலிருந்து நழுவி, கீழே பாதுகாப்பு வலையில் வந்து விழும் அபாயமான காட்சியைச் சொல்லலாம். அவ்வாறு கோமாளி அலறிக் கொண்டே விழுவது பார்வையாளரை திடுக்கிட வைத்தாலும், அந்தக் குரலால் குழந்தைகளை கோமாளி சிரிக்க வைப்பார். 

இதையும் படியுங்கள்:
ஒரு மொழி எப்படி அழிகிறது?
Joker

Slap Stick Comedy என்று ஒரு சொற்றொடர் உண்டு. அது தோன்றியதே சர்க்கஸ் கோமாளிகளின் ஒருவகை விளையாட்டால்தான். அதாவது கிரிக்கெட் பேட் போன்ற பட்டையான ஒரு மரக்கட்டையை நடுவே கைப்பிடிவரை பிளந்து வைத்திருப்பார்கள். இதனை தமிழில் பிளாச்சு என்பார்கள். ஒரு கோமாளி இந்தக் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு முன்னே போய்க்கொண்டிருக்கும் இன்னொரு கோமாளியின் பிட்டத்தில் ஓங்கி அடிக்க, ‘படீர்‘ என்ற சத்தம் கேட்கும். உடனே அடிபட்ட கோமாளி, ‘ஓ‘வென அலறுவார். இதைக் கேட்டு, காமெடியாக ரசிப்பவர்கள் அடக்க மாட்டாமல் சிரிப்பார்கள். அவ்வாறு அடிப்பதால் அந்த பிளாச்சிலிருந்து பெரிய சத்தம்தான் எழுமே தவிர, அடிபட்டவருக்கு கொஞ்சம்கூட வலிக்காது. இப்படி stick ஆல் slap (அடி) வாங்கும் காட்சிதான் ஸ்லாப் ஸ்டிக் காமெடி.

கோமாளிகள் வெறுமே கிச்சு கிச்சு மூட்டுபவர்கள் அல்ல, அவர்களுக்கும் சராசரி மனிதரைப் போல உணர்வுகள் உண்டு என்பதை ராஜ்கபூர் நடித்த மேரா நாம் ஜோக்கர் (ஹிந்தி) மற்றும் கமலஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் (தமிழ்) திரைப்படங்கள் உணர்த்தின. 

இவ்வளவு ஏன், கோமாளி என்ற ஜோக்கர்கள் சீட்டு விளையாட்டில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்களே! ஆமாம், இவர்கள் எந்தக் கைக்குப் போய்ச் சேருகிறார்களோ அந்தக் கை வெற்றி பெறும் வாய்ப்பையும் தருகிறார்களே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com