அந்தக் காலங்களில் ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் பெரியவர்கள் உடனே சிரட்டைப் பொட்டு தயார் செய்யத் துவங்குவார்கள். பிறந்த குழந்தைக்கு தலைக்கு நீர் ஊற்றியதும் கறுப்பாக உள்ள சிரட்டைப் பொட்டில் துளி நீரிட்டு கரைத்து குழந்தையின் நெற்றியிலும் கன்னத்திலும் பெரிய வட்டப் பொட்டாக வைத்து திருஷ்டி கழிப்பார்கள்.
தற்கால அவசர யுகத்தில் இதுபோன்ற பாரம்பரிய வழக்கங்கள் அழிந்துபோனது போல் ஒரு மாயை மட்டுமே நிலவுகிறது. அனைத்தும் ரெடிமேடாகி விட்ட இக்காலத்தில் இந்த சிரட்டைப் பொட்டும் தற்போது கடைகளில் கிடைக்கிறது. என்றாலும் நாமே வீட்டில் அதைத் தயாரிக்கும்போது இன்னும் சுகாதாரத்துடன் தயாரிக்கலாம். சரி, இயற்கையான சிரட்டைப் பொட்டு தயாரிப்பது எப்படி என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
பெரும்பாலும் பச்சரிசி குருணையில்தான் இந்தப் பொட்டு காய்ச்சுவார்கள். இப்போது ஜவ்வரிசியையும் பயன்படுத்துகிறார்கள். அரிசிக்குருணையை விட ஜவ்வரிசி விலை அதிகம் என்பதால் பெரும்பாலும் அரிசிக்குருணைதான் பொட்டு காய்ச்சப் பயன்படும். ஜவ்வரிசி பொட்டு சற்று அதிக பசைத்தன்மையோடிருக்கும் என்பதால் காசைப் பார்க்காமல் ஜவ்வரியை பயன்படுத்துவோர் உண்டு.
பொட்டு காய்ச்சுவது எப்படி?
ஒரு கைப்பிடி ஜவ்வரிசி அல்லது அரிசிக்குருணையை மண் சட்டியில் (மண் சட்டி கிடைக்காவிட்டால் வாணலியில் காய்ச்சலாம்) போட்டு அடுப்பைப் பற்ற வைத்து மிதமான சூட்டில் வறுக்கும்போது குருணை முதலில் வறுபட்டு நிறம் மாறி வரும். தொடர்ந்து வறுக்க வறுக்க கறுப்பு வண்ணம் ஏறும். நல்ல மைக்கறுப்பாகும்போது அப்படியே திரண்டு ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும் பதத்தில் ஒரு கப் தண்ணீரை விட்டு கொதிக்கும் வரை காய்ச்ச வேண்டும். இதனுடன் சிறிது நறுமண எசன்ஸ் அல்லது வாசனை மலர்கள் சேர்த்தால். பொட்டு வாசனையாக இருக்கும். தேங்காய் எண்ணெய் கொஞ்சம் விட்டு காய்ச்சினால் பொட்டு பளபளவென இருக்கும்.
பொட்டு காய்ச்சுவதற்கு முன், காய்ச்சிய மையை ஊற்ற வசதியாக ஒரு தேங்காய் சிரட்டையை இருபக்கமும் நார்களின்றி வழவழப்பாக பளீச்சென சீவி தயார் செய்து கொள்வது முக்கியம். பொட்டு காய்ச்சியதும் அதை சிறு துணியினால் வடிகட்டி எடுத்தால் கசடுகள் எல்லாம் தனியாகி திக்காக இருக்கும். தயாரான மையை சிரட்டையில் ஊற்றி சுழற்றினால் பரவலாக ஒட்டும். எனினும் சிறிது நேரத்தில் கீழே வடிந்து நடுவில் சேர்ந்துவிடும். அதை அப்படியே ஆற விட வேண்டும். பொட்டு காய்ச்சி ஆறவைத்து பதப்படுத்தும் பணி ஒரு நாளில் முடியாது.
காய்ச்சிய மையை சிரட்டையில் ஊற்றி சுழற்றி ஓரிடத்தில் அசைக்காமல் காய விட வேண்டும். இரண்டாம், மூன்றாம் நாளில் மை சிரட்டையின் நடுவில் தேங்கி மேலே பாலாடை போல் படர்ந்து இருக்கும். அதைக் கலைத்து மீண்டும் சில முறை சிரட்டைக்குள் பரவலாகப் படும்படி மையை சுழற்றி மீண்டும் காய வைக்க வேண்டும். இப்படி முழு மையும், சிரட்டையில் பரவலாக சம நிலைக்கு வரும் வரை சிரட்டையை சுழற்றி காய விட்டால் ஒரு வாரத்தில் மை இறுகி பொட்டுப்பதத்தில் வந்து விடும்.
இந்தக் கருப்பு மையைப் பயன்படுத்தும்போது ஒரு துளி நீர் விட்டு குழைத்தால் பொட்டு தயார். கடைகளில் வாங்கிப் பயன்படுத்தும் பொட்டுக்களில் இரசாயனங்களை சேர்த்து சருமத்துக்கு ஒவ்வாமை ஏற்படலாம். ஆனால், வீட்டில் இவ்வாறு காய்ச்சி பதப்படுத்தி பயன்படுத்தினால் வருடக்கணக்கில் அதைப் பாதுகாக்கலாம். இந்த சிரட்டை பொட்டு குறைந்த செலவில் ஆரோக்கியமும் அழகும் தருவதாகும்.