விநாயகர் சிலையை விசர்ஜனம் செய்வது என்பது, கடற்கரை பகுதி மற்றும் நீர் நிலைகளில் சிலையை கரைப்பதாகும். விசர்ஜன், கணேஷ் சதுர்த்தி பண்டிகையின் மிக முக்கியமான அம்சமாகும். அதுவும் பத்தாம் நாளன்று, பெரிய பிள்ளையார் சிலைகள் விசர்ஜனுக்காக எடுத்துச் செல்லப்படுவதைப் பார்க்க, லட்சக் கணக்கான மக்கள் கூடுவார்கள். மும்பை கணபதி விசர்ஜன் பிரபலமானது.
மும்பை மற்றும் மகாராஷ்டிராவில் கணேஷ் சதுர்த்தியின் பத்து நாட்கள் திருவிழாவில், மக்கள் 5 நாட்கள், 7 நாட்கள் மற்றும் 10 நாட்கள் பிள்ளையாருக்கு வழிபாடு செய்த பிறகு விசர்ஜனம் செய்கிறார்கள். விசர்ஜனுக்கு மும்பையில் உள்ள பிரபலமான மற்றும் பொருத்தமான இடங்களின் விபரங்கள்.
கிர்காவ் சௌபாத்தி, தெற்கு மும்பையில் உள்ள மிகவும் பழமையான மற்றும் பிரபலமான கடற்கரையாகும். கொலாபா, பைகுல்லா, சின்ச்போக்லி, டார்டியோ, வால்கேஷ்வர், கோட்டை, ஜவேரி பஜார், மரைன் லைன்ஸ் போன்ற பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் விசர்ஜனத்திற்காக வருகிறார்கள். உலகப் புகழ்பெற்ற லால்பாக்சா ராஜா மற்றும் கணேஷ் கலியில் இருக்கும் கணேஷ் சிலைகளும் இங்கே விசர்ஜனம் செய்யப்படுகின்றன.
தாதர் சிவாஜி பார்க் கடற்கரை மத்திய மும்பையில் அமைந்துள்ளது. முக்கிய ரயில் நிலையங்களாகிய, தாதர், பிரபா தேவி மற்றும் லோயர் பரேல் ஆகியவற்றுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தாதர், ஒர்லி, லோயர் பரேல், மாதுங்கா போன்ற இடங்களிலிருந்து, விசர்ஜனுக்கான மக்கள் வருகிறார்கள்.
ஜூஹு கடற்கரை பக்தர்களிடையே மிகவும் பிரபலமானது. பாலிவுட் பிரபலங்களுக்கு விருப்பமான விசர்ஜன் இடமாகும். நகரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் பிரம்மாண்டமான கணேஷ் சிலைகளைக் காண வருகிறார்கள். சாண்டாக்ரூஸ், ஜூஹு, கலினா, வில்லிபார்லே, வகோலா ஆகிய இடங்களிலிருந்து அதிக மக்கள் விசர்ஜனைக் காண வருகிறார்கள்.
வெர்சோவா சௌபாத்தி, அந்தேரி மேற்கில் அமைந்துள்ள கடற்கரை. தூய்மை மற்றும் அழகிய காட்சிக்கு மிகவும் பிரபலமானது. வெர்சோவா யாரி சாலை, அந்தேரி லோகண்ட்வாலா, ஓஷிவாரா, டிஎன் நகர், ஜோகேஷ்வரி, சுவாமி சாம்ராட் நகர், ஆசாத் நகர், நான்கு பங்களாக்கள் போன்ற இடங்களிலிருந்து பிரம்மாண்டமான கணேஷ் சிலைகள் வெர்சோவா சௌபாத்திக்கு வரும். தொலைக்காட்சி கலைஞர்களும் தங்கள் கணேஷ் சிலைகளின் விசர்ஜனத்திற்காக, வெர்சோவா வருகிறார்கள்.
மார்வே சௌபாத்தி, மலாட் மேற்கு புறநகர்ப் பகுதியிலுள்ளது. கணேஷ் விசர்ஜனுக்கு மார்வே கடற்கரை மிகவும் பிரபலமானது. மலாட் புறநகரில் அமைந்துள்ள மார்வே கடற்கரையில், மலாட் மால்வானி, கோரேகான், காந்திவிலி, மகாவீர் நகர், மிட் சௌகி போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் பிரம்மாண்டமான கணேஷ் சிலையை கண்டு விசர்ஜன் அன்று வணங்க வருகிறார்கள்.
கோராய் கடற்கரை அதன் நல்ல காலநிலை மற்றும் அழகான அறிக்கைகளுக்கு பிரபலமானது. போரிவிலியில் அமைந்துள்ளது. அநேக பக்தர்கள் காந்திவிலி, சார்கோப், சம்தா நகர், தேவி பாட்டா போன்ற இடங்களிலிருந்து விநாயகர் சிலையை வணங்க வருகிறார்கள். கோராய் கடற்கரை அநேகருக்கு மிகவும் பிடித்தமானது மற்றும் பிரபலமானதும் கூட.
பவாய் லேக், மும்பையின் மத்திய புறநகரில் அமைந்துள்ளது. பவாய் லேக், விசர்ஜனத்திற்கான முக்கிய மையமாக, குறிப்பாக காட்கோபர், சாந்திவிலி, சாகிநாகா, விக்ரோலி மற்றும் அந்தேரி(கிழக்கு) பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகிறார்கள். பவாய் லேக், செயற்கை ஏரி மற்றும் பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.
மேற்கூறிய முக்கியமான விசர்ஜன் இடங்களைத் தவிர, அநேக செயற்கை குளங்களும் விசர்ஜனுக்காக ஏற்பாடு செய்யப்படும். விசர்ஜனுக்காக கணபதி சிலைகளை எடுத்துச் செல்கையில், ஆட்டம்-பாட்டம் அமர்க்களப்படும். பல பெரிய கணபதி சிலைகளுக்கு பத்து மணி நேரங்கள் எடுக்கும்.
விசர்ஜன் செய்யும் பகுதிக்கு சென்றபின், கணபதி சிலையை மெதுவாக இறக்கி பூஜை செய்து, ஆர்த்தி காட்டி மெதுவாக நீரினுள் கணபதி சிலை இறக்கப்படும். அப்போது "கணபதி பப்பா மோர்யா ! புட்ச்சா வர்ஷ் லௌகர் யா!" என பக்தர்கள் ஒன்று சேர கைகளைக் கூப்பி, கோஷம் போடுகையில் மெய் சிலிர்க்கும்.