உலகம் முழுவதும் கிரீம் பிஸ்கட்டுகள் குழந்தைகளின் விருப்பமான உணவுப் பொருளாக உள்ளது. விளம்பரங்களில் பிஸ்கட்டுகளின் நடுவில் இருக்கும் கிரீம்கள் பாலில் செய்யப்பட்டது போல பிரபலப்படுத்தி இருப்பார்கள். ஆனால், நடைமுறையில் பெரும்பாலான நிறுவனங்கள் கிரீம்களுக்கு பாலை பயன்படுத்துவது இல்லை. அதற்கு பதிலாக எண்ணெய்கள், கொழுப்புகள், ரசாயனங்கள் போன்றவை சேர்க்கப்படுகின்றன.
இந்த செயற்கை வேதிப் பொருட்கள் உடலுக்கு மிகவும் கெடுதல் செய்பவை. இதில் உள்ள தீமைகள் தெரியாமல் குழந்தைகள் கிரீம் பிஸ்கட்டுகளை விரும்பி சுவைக்கின்றனர்.
பெரும்பாலான பிஸ்கட்டுக்களில் உள்ள கிரீம்களில் பால் பொருட்கள் எதுவும் சேர்க்கப்படுவதில்லை. பாமாயில் போன்ற மலிவான, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணெய், செயற்கை வெண்ணெய், தாவர கொழுப்பு பொருட்கள், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை கலந்து கிரீம் கலவை தயார் செய்கின்றனர்.
இதில் கிரீம்களில் நிறத்தை சேர்க்க சில வேதிப் பொருட்களும் சேர்க்கப்படும். அதனுடன் சுவையை அதிகரிக்க சில ரசாயனங்கள் , கிரீம் நீண்ட காலம் கெடாமல் இருக்க , பிரசர்வேடிவ்களும் சேர்க்கப்படுகின்றன. இதனால் கிரீம்கள் ரசாயனம் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளால் நிரம்பி விடுகின்றன. இதில் பயன்படுத்தும் பொருட்கள் ஆரோக்கியமற்றவை, இதில் எந்த ஊட்டச்சத்துக்களும் இருப்பது இல்லை.
ஆரோக்கிய சீர்கேடுகள்:
போலி கிரீம் கலவையில் உள்ள டிரான்ஸ் கொழுப்புகள் உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவை அதிகரித்து, நல்ல கொழுப்புகளின் HDL அளவை குறைக்கின்றன. தொடர்ச்சியாக உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவு அதிகரித்தால் அது இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கு காரணமாக இருக்கிறது. கெட்ட கொழுப்புகள் அளவு உடலில் அதிகரிக்கும் போது, அது கணையத்தின் இன்சுலின் உணர்திறனை குறைக்கும். இதனால் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் டைப்-2 நீரிழிவு போன்ற உடல்நல பாதிப்புகளை உண்டாக்கும்.
குழந்தைகளுக்கு கெட்ட கொழுப்பு மிகவும் ஆபத்தானது. இது அவர்களின் வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் எடையினை கூட்டும். உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்களுடனான தொடர்பு உடையது. இதனால் வளரும் பருவத்திலேயே அவர்கள் சோம்பேறிகளாக மாறக்கூடும். அதிக எடை கல்லீரல் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். செரிமான மண்டலத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவதால், அடிக்கடி சோர்வினையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது போன்ற பாதிப்புகள் அவர்களின் வளர்ச்சியில் தடையினை ஏற்படுத்தும்.
கிரீமில் உள்ள செயற்கை இனிப்பூட்டிகள் இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரித்து, இன்சுலின் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. கிரீம் கலவையில் உள்ள பிரக்டோஸ் கல்லீரலில் கொழுப்பு நோய்க்கு காரணமாகிறது, டயசெட்டில் போன்ற செயற்கை சுவையூட்டிகள் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதன் தொடர்ச்சியாக உடலில் ஒவ்வாமை எதிர்வினைகள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படலாம்.
கிரீமில் சேர்க்கப்படும் செயற்கை வண்ணங்கள் புற்றுநோயின் தோற்றுவாயாக இருக்கிறது. மேலும் இந்த நிறமிகள் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
கிரீம்கள் நீண்ட காலம் கெடாமல் இருக்க கலக்கப்படும் BHA மற்றும் BHT போன்ற வேதிப் பொருட்களும் புற்றுநோயை உண்டாக்கும். சில நேரங்களில் குழந்தைகளின் மனநலனில், நடத்தை மாற்றங்களை காண முடியும். சில குழந்தைகளுக்கு கிரீம் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் போதை பழக்கம் போலவே மாறிவிடுகிறது. இதைப்பற்றி பல முறை சர்வதேச ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சிலருக்கு அதிகப்படியான கிரீம் பிஸ்கட் நுகர்வு ஹார்மோன் கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது.
கிரீம் பிஸ்கட், சாப்பிடும் உணவுப் பொருள் என்றாலும் அதில் உள்ள தீமைகளை அறிந்து கொள்வது நலம். எப்போதாவது ஒரு முறை மட்டும் சாப்பிடுவதால் தீங்கு வராது. அதையே ஆகாரமாக சாப்பிடும் குழந்தைகளுக்கு ஸ்ட்ரிக்டா 'நோ' சொல்லுங்க
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)