In history a heroic sport of Tamils Jallikattu
In history a heroic sport of Tamils Jallikattuhttps://www.pinterest.com

வரலாற்றில் தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு!

மிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் மிகவும் முக்கியமானது ஜல்லிக்கட்டு. சமீபத்தில் இதற்கு எதிரான சட்டப் போராட்டங்கள் நடத்தி அதை முடக்கப் பார்த்தார்கள். ஆனாலும், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு அனைத்தையும் முட்டி மோதி மீண்டு வந்தது என கூடச் சொல்லலாம். சிறப்புமிக்க இந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டின் பின்னணி குறித்து சற்றே பார்ப்போமா?

ஏறு தழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளையை குறிக்கும் சொல்லாகும். காளையை ஓடவிட்டு அதை வீரர்கள் ஓடிப்பிடித்து அடக்குவதுதான் ஜல்லிக்காடு, இதில் மிருகவதை இல்லை என்பது விளையாட்டு வீரர்களின் கருத்து. இன்னும் சொல்லப்போனால், காளை முட்டி உயிரிழந்த வீரர்கள்தான் அதிகம்.

கோனார்கள் எனப்படும் ஆயர்கள் அதிகமாக வாழும் இடங்களில்தான் ஜல்லிக்கட்டு விளையாட்டு அதிகமாக நடத்தப்படுகின்றது. மதுரை, பாலமேடு, புதுக்கோட்டை, நார்த்தாமலை, தேனீமலை போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலமாகும்.

‘சல்லி’ என்பது இந்த விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற ஒரு வளையத்தைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் போல் செய்து அதை காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் இப்போதும் வழக்கத்தில் உள்ளது. மேலும், சல்லிக் காசு எனும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்பில் கட்டிவிடும் பழக்கமும் ஐம்பது வருடங்களுக்கு முன்பு வரை இருந்தது. இந்த காரணங்களால்தான் இந்த விளையாட்டுக்கு, ‘சல்லிக்கட்டு’ என்ற பெயர் ஏற்பட்டு, பின்னாட்களில் ஜல்லிக்காட்டு என அது மாறியது.

பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறு தழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வரப்படுகிறது. கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறு தழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
ஜல்லிக்கட்டு தெரியும்; சேவல் கட்டு தெரியுமா?
In history a heroic sport of Tamils Jallikattu

ஏழு காளைகளை அடக்கி, தனது மாமன் மகளான நப்பின்னை என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். அன்று முதல் காளையை அடக்கும் மாவீரனுக்கே, அந்த பெண்ணிற்கு பிடிக்கும் பட்சத்தில் ஆயர் (யாதவ்) குலத்தினர் தங்கள் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். சங்க இலக்கியமான கலித்தொகையில்,

‘கொல்லேற்றுக் கோடுஅஞ்சு வானை

மறுமையும் புல்லாளே ஆய மகள்’

என்றும்,

‘அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை,

நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து

நைவாரா ஆய மகள் தோள்’

என்றும் பாடப்பட்டுள்ளது.

ஸ்பெயின், போர்ச்சுகல், மெக்சிகோ நாடுகளில் காளை போர் முக்கியமான தேசியப் பொழுதுபோக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது. காளைகளை அரங்கத்திற்குள் விரட்டி, ஆத்திரமூட்டிச் சண்டையிட்டுக் கொல்வதே இக்காளை போரின் நோக்கம். காளை போரும் சல்லிக்கட்டும் ஒன்று போலத் தோன்றினாலும், இவை இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை ஆகும்.

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர் போன்ற இடங்களிலும், சிவகங்கை மாவட்டம் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை போன்ற இடங்களிலும், புதுக்கோட்டைமாவட்டம் நார்த்தாமலை போன்ற இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. மேலும், திருச்சி, தேனி போன்ற தென் மாவட்டங்களிலும் இந்த வீர விளையாட்டு நிகழ்கிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com