இந்தியா கேட் - கேட்வே ஆஃப் இந்தியா! ஓர் ஒப்பீடு

India Gate
India Gate

இந்தியாவின் நுழைவுவாயில்களாக இருக்கும் இந்தியா கேட் மற்றும் கேட்வே ஆஃப் இந்தியா ஆகிய இரண்டு நினைவுச் சின்னங்களையும் ஒப்பிடுகிறது இந்தப் பதிவு!

இந்தியாவின் நுழைவாயில் என்றவுடன் நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது டெல்லியில் இருக்கும் இந்தியா கேட் தான். ஏனெனில் இதனைப் பற்றி நாம் அதிகளவில் கேள்விப்பட்டிருப்போம் அல்லது திரைப்படங்களில் கூட பார்த்திருப்போம். இருப்பினும் இந்தியாவின் மற்றுமொரு நுழைவாயில் மும்பையில் இருப்பது பலருக்கும் தெரியாது. டெல்லியில் இருக்கும் இந்தியா கேட், மும்பையில் இருக்கும் கேட்வே ஆஃப் இந்தியா ஆகிய இரண்டும் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக இருந்தாலும், இரண்டும் உருவாக்கப்பட்டதன் காரணங்கள் வேறாக இருக்கிறது.

தலைநகர் டெல்லியில் உள்ள ராஜ்நாத் சாலையில் 42மீ உயரத்தில் பிரம்மாண்டமாய் காட்சியளிக்கிறது இந்தியா கேட். முதல் உலகப்போர் மற்றும் ஆப்கானிஸ்தான் போரில் உயிரிழந்த சுமார் 70,000 இந்திய வீரர்களின் நினைவாகக் கட்டப்பட்டது தான் இந்தியா கேட்.

தெற்கு மும்பையில் அரபிக்கடல் ஓரத்தில் பந்தர் எனும் சிறுதுறைப் பகுதியில் 26மீ உயரத்தில் காண்போரை கவர்ந்திழுக்கிறது கேட்வே ஆஃப் இந்தியா. 1911 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த பிரிட்டிஷ் மன்னர் ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் மற்றும் அரசி மேரி அப்போலோ ஆகியோர் பந்தர் துறைமுகத்தில் வந்திறங்கியதன் நினைவாக கட்டப்பட்டது தான் கேட்வே ஆஃப் இந்தியா.

இந்தியா கேட் இந்தியாவின் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக இருப்பதால், இது நாள் முழுவதும் திறந்திருக்கும். இதனால் சுற்றுலா பயணிகள் எப்போது வந்தாலும் இந்த நினைவுச்சின்னத்தைப் பார்த்து ரசிக்கலாம்.

மும்பையில் படகுகள் மூலம் வரும் பயணிகளின் கண்ணில் படும் முதல் இடமே கேட்வே ஆஃப் இந்தியா தான். துறைமுகத்திலேயே இருப்பதால், இதுவும் எப்போதும் திறந்தே இருக்கும்.

மணற்கற்களால் உருவான இந்தியா கேட்டை கட்டியவர் எட்வின் லுடியன்ஸ். மேலும் இதன் முழுவளைவையும் உருவாக்க மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு பாரத்பூர் கற்கள் பயன்படுத்தப்பட்டன.

பசாற்றுக் கற்களால் கட்டப்பட்ட கேட்வே ஆஃப் இந்தியா நினைவுச் சின்னத்தைக் கட்டியவர் ஜார்ஜ் விட்டர். இது மும்பையின் தாஜ்மகால் எனச் செல்லமாக அழைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
எழுத்துக்கள் மூலம் இளைஞர் வரைந்த தாஜ்மஹால் நினைவுச்சின்னம்!
India Gate

பாரிஸில் இருக்கும் ஆர்க் டி ட்ரையம்பை போன்று இந்தியா கேட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 1921 ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கி 1931 இல் கட்டி முடிக்கப்பட்டது.

இந்தோ - சாராசெனிக் கட்டிடக்கலை முறையைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட கேட்வே ஆஃப் இந்தியா, 1911 ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கி 1924 இல் கட்டி முடிக்கப்பட்டது. இங்கு மட்டும் 3 முறை தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. 2003 ஆம் ஆண்டில் இருமுறையும், 2008 ஆம் ஆண்டில் ஒருமுறையும் நடந்துள்ளது.

இந்தியா கேட் மற்றும் கேட்வே ஆஃப் இந்தியா ஆகிய இரண்டுமே இந்திய வரலாற்றையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றும் நினைவுச் சின்னங்களாக கம்பீரமாக காட்சியளிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com