

நாம் தினசரி பயன்படுத்தும் நாணயங்களில் உள்ள தனிச்சிறப்பு தன்மையை அனைவரும் அறிவது இல்லை. அனைத்து நாணயத்திலும் அது அச்சிடப்பட்ட வருடம் குறிப்பிட்டதற்கு கீழ் புள்ளி , நட்சத்திரம் , வைரம் போன்ற குறியீடுகள் ஆச்சிடப்பட்டிருக்கும். பெரும்பாலானவர்கள் இந்த குறியீடுகள் எதற்காக நாணயத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளன? என்பதை அறிந்திருக்கமாட்டார்கள். இந்த குறியீடுகள் எதற்காக குறிப்பிடப்பட்டுள்ளன, அதன் பின்னணி என்ன என்பதை அறிந்துகொள்ளலாம்.
நாணய குறியீடுகள்:
புள்ளி, வைரம், நட்சத்திரம் போன்ற குறியீடுகள் நாணயத்தின் பிறப்பிடத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்த குறியீடுகளை வைத்து ஒரு நாணயம் எந்த நகரத்தில் உள்ள ஆலையில் தயாரிக்கப்பட்டது என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம். இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க உள்ள நாடுகளில் நாணயங்களை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலைகளில் உருவாக்குகின்றனர்.
பொதுவாக ரூபாய் நோட்டுகள் எளிதில் அழியக் கூடியவையாக உள்ளன. ஆனால், நாணயங்களை அவ்வளவு எளிதில் அழித்துவிட முடியாது. அவை மிகவும் உறுதியானவையாகவும் பல நூற்றாண்டுகள் உழைக்கக்கூடியதாகவும் இருக்கின்றன. மேலும் நாணயப் பயன்பாடு என்பது தற்காலத்தில் தோன்றியது அல்ல. அது பல ஆயிரம் ஆண்டுகளாக உலகம் முழுக்க புழக்கத்தில் உள்ளது.
இந்தியாவில் செக்யூரிட்டி பிரின்டிங் அண்ட் மீட்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா(SPMCIL) என்ற அரசு நிறுவனம் நாணயங்களை தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தின் கீழ் நான்கு நாணய தொழிற்சாலைகள் மும்பை, கொல்கத்தா ஹைதராபாத், நொய்டா ஆகிய நகரங்களில் இயங்கி வருகின்றன.
நாணயங்களின் தரம் , அதன் தன்மை மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக , நாணயங்கள் எந்த ஆலையில் அச்சடிக்கப்பட்டது என்பதை எளிதில் கண்டறிய குறியீடுகள் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒரு நாணயத்தில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அது எங்கு உருவானது, என்பதை உடனே கண்டறிய முடியும்.
நாணயத்தின் கீழ் பகுதியில் ஆண்டுக்குக் கீழே வைர (◆) குறியீடு இருந்தால் அது மும்பை நாணய ஆலையில் அச்சிடப்பட்டது என்று அறியலாம். இந்த நாணய ஆலை 1829-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டது. தொடக்க காலத்தில் பம்பாய் என்பதை குறிக்கும் வகையில் (B) என்ற குறியீடு பயன் படுத்தப்பட்டது. பின்னர் அந்த நகரம் மும்பை என்று மாற்றப்பட்டபோது (M) என்று குறிக்கப்பட்டது. தற்போது மும்பை ஆலையின் நிரந்தரக் குறியீடாக (◆) பயன்படுத்தப்படுகிறது.
நாணயத்தில் கீழ் பகுதியில் நட்சத்திரக்(★) குறியீடு இருந்தால் அது ஹைதராபாத் ஆலையில் தயாரிக்கப்பட்டது. இந்த நாணய ஆலை 1903-ஆம் ஆண்டு நிஜாம் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. பின்னர் இந்திய அரசு, இந்த ஆலையைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. முதலில் ஹைதராபாத் ஆலையில் அச்சிடப்பட்ட நாணயங்களில் 'பிளவுபட்ட வைரம்' குறியீடு பயன்படுத்தப்பட்டது.1953-ஆம் ஆண்டு முதல் நட்சத்திரக் குறியீடு அதன் நிரந்தர அடையாளமாக இருக்கிறது.
நாணயத்தில் கீழே ஒரு சிறிய வட்டப் புள்ளி இருந்தால் (●) நொய்டாவில் உள்ள ஆலையில் தயாரிக்கப்பட்டது என்று அறிந்துக் கொள்ளலாம். 1984-ஆம் ஆண்டு நொய்டாவில் நாணய ஆலை தொடங்கியது. பிற்காலங்களில் இங்கு தயாரான நாணயங்களில் புள்ளி குறியீடு பயன்படுத்தப்பட்டது
நாணயத்தில் எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால், அந்த நாணயம் கொல்கத்தா ஆலையில் அச்சிடப்பட்டது என்று அறிந்து கொள்ளலாம். இது ஆசியாவிலேயே மிகப் பழமையான ஆலைகளில் ஒன்று. கொல்கத்தாவில் 1757-ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியால் நிறுவப்பட்டது. ஆரம்பம் முதலே அதில் குறியீடு பயன்படுத்தப்பட்டது இல்லை.
1980-1990 ஆம் ஆண்டு கால வாக்கில், அப்போதைய மத்திய அரசு நாணயங்களை அச்சடிக்கும் ஒப்பந்தங்களை இங்கிலாந்து, கனடா, தென் கொரியா, ரஷ்யா, மெக்சிகோ, ஸ்லோவாக்கியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு வழங்கியது. அந்த நாணயங்களில் C, H, MMD. * போன்ற பல குறியீடுகள் இருந்தன.
பொதுவாக நாணயத்தில் உள்ள குறியீடுகளை வைத்து அவை அசல், போலி என்று கூட கண்டறிய முடியும். போலிகளில் இந்தக் குறியீடுகள் தெளிவாக இருப்பதில்லை. நாணயங்கள் அச்சடிப்பதில் பெரிய லாபம் இல்லாததால் போலிகளும் அரிதாகிவிட்டன