
நமது இந்திய பாரம்பரிய கலாச்சாரங்களில் பெண்கள் அணியும் அணிகலன்களில் முதன்மையான இடத்தில் இருப்பது வளையல்கள். ஆதிகாலத்தில் மண்ணினால் செய்த வளையல்கள் அதன் பின் வந்த நாகரிகங்களில் பொன்னினால் செய்த வளையல்கள் தற்போது வைர வளையல்கள் என அணி வகுத்தாலும், அந்தஸ்து பேதம் இன்றி அணியும் வளையல்களாக அன்று முதல் இன்று வரை பெண்களுக்கு அழகு தருவது கண்ணாடி வளையல்கள் தான் என்றால் மிகையல்ல..
நாகரிகம் பெருகி பல கைத்தொழில்கள் அழிந்துவிட்ட நிலையிலும் இன்னும் நகரங்களிலும் கிராமங்களிலும் வளையல்கள் விற்பவர்கள் வலம் வருவதை காணலாம்.
குறிப்பாக பெண்களுக்கு நடத்தப்படும் விழாக்களில் முக்கியமானதான சீமந்தம் அல்லது வளைகாப்பு நிகழ்வில் பெண்களுக்கு அணிவிக்கப்படும் கண்ணாடி வளையல்கள் கொண்டு வரும் பெண்மணி தெய்வத்தின் அம்சமாகவே பார்க்கப்படுகிறார். ஏனெனில் கண்ணாடி வளையல்கள் தெய்வீக அம்சங்களில் ஒன்றாக மகிழ்ச்சியான மனநிலை மற்றும் வளமான வாழ்வைக் காட்டுவதற்கு ஒரு குறியீடாக அமைகின்றன. இதன் காரணமாகவே அம்மன் பூஜைகளில் இந்த வளையல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
வயது பாகுபாடின்றி பெண்கள் அனைவரையும் மகிழ்விக்கும் வண்ணமிகு கண்ணாடி வளையல்கள் உருவாக்கப்படும் வழிமுறைகளை இங்கு காண்போம்.
கண்ணாடி வளையல் செய்யும் கலை சிறப்பு மிக்கது. காரணம் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தைய ஒரு வளமான வரலாற்றைக் கொண்டுள்ள கலையாக இது இருப்பதுதான். காலத்தால் அழியாத பாரம்பரியமான கண்ணாடி வளையல்கள் பல நூற்றாண்டுகளாக இந்திய நகைகளில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகின்றன. கண்ணாடி வளையல் செய்யும் கலை, தலைமுறைகள் வழியாகக் கடத்தப்பட்டு வருகிறது. திறமையான கைவினைஞர்கள் பாரம்பரிய நுட்பங்களைப் பயன்படுத்தி அழகான மற்றும் நுணுக்கமான வடிவமைப்புகளை உருவாக்குகிறார்கள்.
சமீபத்தில் வளையல் தயாரிக்கும் கண்ணாடி தொழிற்சாலையின் மையமாக திகழும் உத்தரபிரதேசத்தின் ஃபிரோசாபாத்தில் எடுக்கப்பட்ட வளையல்கள் தயாரிக்கும் வீடியோ வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த காணொளியில் முதலில் கண்ணாடி கழிவுகள் அச்சுவார்க்கப்பட்டு ஒரு வடிவத்திற்கு கொண்டு வந்து அழகாக செதுக்குகிறார்கள். இறுதியில் தனித்தனியாக பிரிக்கப்பட்டு நேர்த்தியான வளையல்களாக மாற்றம் அடைவது ரசிக்கும்படி உள்ளது.
இனி இங்கு கண்ணாடி வளையல்களை உருவாக்கும் செயல்முறை கண்ணாடி கம்பிகள் அல்லது கூண்டுகள் சேகரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு தயார் செய்யப்பட்டு கண்ணாடி கம்பிகள் உருகி நெகிழ்வாகும் வரை உலையில் சூடேற்றப்படுகிறது. உருகிய கண்ணாடி பின்னர் ஒரு உலோக கம்பி அல்லது மர அச்சைப் பயன்படுத்தி ஒரு உருளை வடிவத்தில் வடிவமைக்கப்படுகிறது. வளையலாக எடுத்தபின் கண்ணாடி மற்றும் ஜிகினா, மணிகளால் அலங்கரிக்கும் நுட்பங்களைப் பயன்படுத்தி பல வடிவங்கள் மற்றும் அளவுகளில் அலங்கரிக்கப்படுகிறது.
வளையல் பின்னர் விரிசல் அல்லது உடைவதைத் தடுக்க அனீலிங் (Annealing) முறையில் அதாவது காய்ச்சி மெதுவாக குளிர்விக்கப்படுகிறது. இறுதியாக வளையல் மென்மையான, பளபளப்பான தோற்றத்தை அளிக்க மெருகூட்டப்பட்டு, முடிக்கப்படுகிறது. தரத்திற்கு ஏற்ப பெட்டிகளில் அடுக்கப்பட்டு விற்பனைக்கு தயாராகிறது.
கண்ணாடி வளையல் தயாரிப்பதற்கு மிகுந்த திறமை மற்றும் கைவினைத்திறன் தேவை. ஏனெனில், கைவினைஞர் விரும்பிய வடிவம் மற்றும் வடிவமைப்பை உருவாக்க உருகிய கண்ணாடியை கவனமாக பொறுமையாக கையாள வேண்டும். இந்த செயல்முறை பாரம்பரிய நுட்பங்கள் மற்றும் கலை படைப்பாற்றல் ஆகியவற்றின் கலவையை உள்ளடக்கி ஒவ்வொரு வளையலையும் ஒரு தனித்துவமான கலைப் படைப்பாக மாற்றுகிறது.
இருப்பினும் கண்ணாடி தயாரிக்கும் பணியில் உள்ளவர்கள் கட்டாயம் முகமூடி, கிளாஸ், கையுறை போன்ற உபகரணங்கள் அணிந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் கடுமையான வெப்பம் கண்களை பாதிக்கும் வாய்ப்புள்ளது என்றும், நச்சு புகை உடல்நலத்தை பாதிக்கும் என்றும் சிறு, சிறு கண்ணாடி துகள்கள் நுரையீரலில் பாதிப்பு தரும் எனவும் அறிவுறுத்தப்படுகிகிறது.
கண்ணாடி வளையல்கள் அழகான நகைகள் மட்டுமல்ல, பல இந்திய மரபுகளில் கலாச்சார மற்றும் குறியீட்டு முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளதால் பல கைவினைஞர்கள் பாரம்பரிய நுட்பங்களைப் பாதுகாத்து புதிய வடிவமைப்புகள் மற்றும் பாணிகளை பின்பற்றி புதுமைகளை படைப்பது வரவேற்கத்தக்கது.