இந்திய கலாச்சாரத்தில் வளையல்கள் மிகவும் பழமையானவை. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மொகஞ்சதாரோவில் 4500 ஆண்டுகளுக்கும் மேலான வளையல் போன்ற ஆபரணங்களை கண்டறிந்துள்ளனர். அப்போது அவர்கள் இந்த மணிக்கட்டு பட்டைகளை டெரகோட்டா, தாமிரம் மற்றும் ஓடுகளால் செய்து அணிந்தார்கள். இன்றுவரை ஒவ்வொரு விழாக்களிலும் குறிப்பாக திருமணத்திலும் வளையல்கள் அணிவது என்பது தொடர்ந்து வருகிறது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஃபிரோசாபாத் இந்தியாவில் கண்ணாடி வளையல்களுக்கு மிகவும் பிரபலமான இடமாகும். 'வளையல்களின் நகரம்' என்று அழைக்கப் படும் இங்கு கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நகரத்தில் உள்ள கைவினைஞர்கள் பாரம்பரிய உலைகளில் கண்ணாடியை உருக்கி பல்வேறு வண்ணமயமான கண்ணாடி வளையல்களை வடிவமைத்து வருகின்றனர். கண்ணாடி தயாரிப்புத் தொழிலின் மையமாக விளங்கும் இங்கு உற்பத்தி செய்யப்படும் வளையல்கள் மற்றும் கண்ணாடி பொருட்கள் தரத்திற்கு பெயர் பெற்றவை. உலகிலேயே கண்ணாடி வளையல்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நகரமாகும். இங்கு தயாரிக்கப்படும் வளையல்கள் அழகியல் மற்றும் சிக்கலான வடிவமைப்புக்காக இந்திய கலாச்சாரத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
ஜெய்ப்பூரில் பாரம்பரிய ராஜஸ்தானி பாணியிலான கண்ணாடி வளையல்கள் பெயர் பெற்றவை. இங்கு பல கடைகளில் பதிக்கப்பட்ட வளையல்கள் மற்றும் வண்ணமயமான வளையல்களைக் காண முடியும். ஜோஹரி பஜாரில் ஏராளமான கடைகள் மற்றும் சந்தைகள் உள்ளன. இங்கு எளிய கண்ணாடி வளையல்கள் முதல் நேர்த்தியான அரக்கு வளையல்கள் வரை அனைத்து பாணிகளிலும் வளையல்கள் கிடைக்கின்றன.
டெல்லி ஹாட் என்பது டெல்லியில் நகைகள் மற்றும் துணிகளுக்கு பிரபலமான சந்தையாகும். நகரத்திற்குள் அமைந்துள்ள இது எளிதில் அணுகக்கூடிய இடமாகும். டெல்லியில் உள்ள பிரபலமான இந்த சந்தை வளையல்கள் உட்பட பலவகையான நகைகளை விற்பனை செய்கிறது. இங்கு பலவிதமான டிசைன்களில், அழகிய வேலைப் பாடுகளுடன் கண்ணாடி வளையல்கள் கிடைக்கின்றன. அதேபோல் டெல்லியில் உள்ள லஜ்பத் நகர் மற்றும் சரோஜினி சந்தைகள் பாரம்பரிய மற்றும் பிரபலமான பல்வேறு வகையான வளையல் மற்றும் திருமண ஷாப்பிங் வளையலுக்காக பெயர் பெற்றது.
ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான மற்றும் பழமையான சந்தைகளில் ஒன்றான லாட் பஜாரில் பளபளக்கும் கல் துண்டுகளால் பதிக்கப்பட்ட அரக்கு வளையல்கள் மிகவும் பிரபலமானவை. ஹைதராபாத்தின் வரலாற்று நினைவுச் சின்னமான சார்மினாரைச் சுற்றியுள்ள பாதைகளில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான, வரலாற்று சிறப்புமிக்க லாட் பஜார் சந்தை அதன் வளையல் கடைகளுக்கு குறிப்பாக கண்ணாடி வளையல்களை விற்கும் கடைகளுக்கு மிகவும் பிரபலமானது. இங்கு அரக்கு வளையல்கள் மற்றும் பதிக்கப்பட்ட வளையல்கள் மிகவும் பிரபலமானவை.
ராஜ் மஹாலைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்ணாடி வளையல்கள் பிரபலமாக உள்ளன. இப்பகுதியில் கிடைக்கும் கண்ணாடி வளையல்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன. பீகாரில் கண்ணாடி வளையல்கள் தயாரிப்பது ஒரு பிரபலமான கைவினைப் பொருளாகும். அதிலும் குறிப்பாக ராஜ் மஹால் பகுதியில் கண்ணாடி வளையல்கள் விற்கும் கடைகள் மற்றும் சந்தைகள் உள்ளன. இங்கு பீகார் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக கருதப்படும் வளையல்கள் பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் கிடைக்கின்றன.