உலகின் மிகப்பெரிய அரசு நிறுவனங்களில் இந்தியன் ரயில்வே முதன்மையானது. நாட்டின் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தில் ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்திய ரயில்வே நிறுவனம் தினமும் சுமார் 23,000 ரயில்களை இயக்குகிறது; அவற்றில் 13,000 பயணிகள் ரயில்கள் மூலம், தினசரி 7,000-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களுக்குச் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 30 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை இந்தியன் ரயில்வே கையாளுகிறது. இந்தியா முழுக்க ரயில் நிலையங்கள் இருந்தாலும் ஒரு மாநிலத்தில் மட்டும் ஒரு ரயில் நிலையம் கூட இல்லை. அந்த மாநிலம் தான் சிக்கிம்.
சிக்கிம் வரலாற்று ரீதியில் இந்திய விடுதலையின் போது இணையவில்லை.
அது 1975 ஆம் ஆண்டில், ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இந்தியாவின் இருபத்தி இரண்டாவது மாநிலமாக இணைக்கப்பட்டது. அதன் பின்னர், இந்த மாநிலத்தில் ரயில் பாதைகளோ, ரயில் நிலையங்களோ அமைக்கப்படவில்லை.
சிக்கிம் மாநிலம் முழுவதும் மேடு பள்ளம் நிறைந்த செங்குத்தான மலைப்பாங்கான பகுதியாக இருந்ததால் இங்கு ரயில் பாதை அமைப்பது கடினமாக இருந்தது. அதே வேளையில் ஊட்டி மற்றும் டார்ஜிலிங் போன்ற மலைப்பகுதிகளில் உள்ள ரயில் பாதைகள் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது. ஊட்டி மற்றும் டார்ஜிலிங் பகுதிகள் மக்கள் தொகை நிறைந்த பகுதிகளாகவும், சுற்றுலா வளர்ச்சியில் அதிகம் முன்னேறியதும் ரயில்பாதை அமைக்க முக்கிய காரணமாக இருந்தது.
சிக்கிமின் குறைந்த மக்கள் தொகை, ரயில்வே செலவுகளை ஈடுகட்டும் வகையில் பயணிகள் எண்ணிக்கை இல்லாதது ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரயில் பாதைகள் அமைப்பது பற்றி அரசாங்கம் யோசிக்க வில்லை. சிக்கிம் மக்கள் தங்கள் மாநிலத்தை விட்டு அண்டை மாநிலத்திற்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ளாதவர்களாக இருந்தனர். அவர்கள் தங்கள் தேவைகளுக்கு மற்ற மாநிலங்களை சாராமல் அதிக சுயசார்புடன் இருந்ததும் போக்குவரத்து மேம்படாததற்கு ஒரு காரணம்.
இந்திய ரயில்வே அமைச்சகம் 2009 இல் சிக்கிமிற்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை ஆராய்ந்தது. அதன் பின்னர், இந்த ஆண்டு 2024 பிப்ரவரியில்தான், அதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. சிக்கிமின் ராங்போவில் அதன் முதல் ரயில் நிலையம் அமைகிறது. வழக்கமாக சிக்கிம் செல்ல, மே.வங்கத்தின் சிலிகுரி அல்லது நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் இறங்கி சாலை வழியாக செல்ல வேண்டும். ரயில் நிலையம் வந்து விட்டால் அது பயணத்தை எளிதாக்கும்.
தற்போது, இந்திய ரயில்வே அமைச்சகம் மேற்கு வங்கத்தின் சிவோக் மற்றும் சிக்கிமின் ரங்போ நகரை இணைக்கும் ரயில் பாதையை உருவாக்குகிறது. இத்திட்டம் 2029-க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. செங்குத்தான மலைகளைக் குடைந்து, பள்ளங்களில் உயரமான பாலங்கள் அமைப்பது, சுரங்கம் தோண்டுவது என சவால்கள் அதிகம் நிறைந்த திட்டமாக இது உள்ளது.
சிக்கிமில் ரங்போ ரயில் நிலையம் முதலில் தொடங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும்; பின்னர், அது தலைநகர் காங்டாக் வரையிலும் செல்லும் வகையில் நீட்டிக்கப்படும்; இறுதியாக, சீன எல்லையான நாதுலா கணவாய் வரையில் ரயில்வே சேவைகள் முழுப் பயன்பாட்டிற்கு வரும். இதன் மூலம் சிக்கிம் மக்களின் போக்குவரத்து எளிதாக மாற்றப்படுவதோடு அதன் பொருளாதாரமும் மேம்படும். எல்லையோர பகுதிகளுக்கு ரயில்கள் மூலம் அதிக தளவாடங்களை எளிதில் கொண்டு செல்ல முடியும் என்பதால் நாட்டின் பாதுகாப்பும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.