
உலகில் உயிரினங்கள் தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. பூச்சி இனங்கள் தோன்றி கிட்டத்தட்ட 32 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. இவை நீரிலும் நிலத்திலும் வாழ்கின்றன.
பூச்சிகள் இனத்தைச் சேர்ந்த வண்டுகளில் பெரியது கோலியாத் வண்டு தான். இதன் நீளம் 12 செ.மீ, எடை 100 கிராம்.
மயிர் இறக்கை வண்டுகள் தான் மிகச்சிறியது.
பூச்சிகளில் நீளமானது குச்சிப்பூச்சி தான். இதன் நீளம் 33 செ.மீ.
உலகிலுள்ள உயிரினங்களில் துல்லியமான காது கேட்கும் திறன் கொண்டது விட்டில் பூச்சி எனும் அந்துப்பூச்சி தான்.
பூச்சிகளின் உடலில் மூன்று பாகங்கள் உண்டு. பூச்சிகள் வாயின் மூலம் சத்தம் எழுப்புவதில்லை. அவைகளின் இறக்கைகள் உடலின் பகுதிகளில் ஒன்றோடு ஒன்று உராய்வதன் மூலம் ஒலியை எழுப்புகின்றன. பொதுவாக ஆண் இனமே ஒலியலையை எழுப்புகின்றன.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது ஒரு 3 டி மியூசியம் . இங்கு வனங்களில், மலைகளில் மற்றும் சமவெளித் தளங்களில் சேகரிக்கப்பட்ட 90,000க்கும் மேற்பட்ட பூச்சி இன படிவங்களும், 2500க்கும் மேற்பட்ட வண்டு மற்றும் எறும்புகளின் படிமங்களும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகமானது கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் பூச்சி இயல் துறையால் ஆறாயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் இந்தியா மட்டுமின்றி, வங்கதேசம், இலங்கை, தாய்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான பூச்சி இனங்களும், ஒட்டுண்ணிகளும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு கண்ணாடிக் கூண்டில் பூச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பூச்சிகளுக்கு அருகே அதன் மேல்புறம் உள்ள எல்.இ.டி. திரையில், அந்தப் பூச்சிகளின் வகை, அவற்றின் நன்மை - தீமைகள், அவற்றை எந்தெந்த நாட்டில் பார்க்கலாம் உள்ளிட்ட விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காட்டப்பட்டுள்ளன.
மேலும் பூச்சிகளுக்காக வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள், நாணயங்கள், அதை வெளியிட்ட நாடுகள், பூச்சிகள் குறித்து உலக அளவில் வெளிவந்திருக்கும் நூல்கள், தோண்டி எடுக்கப்பட்ட இரண்டு பெரிய கரையான் புற்றுகள் போன்றவை இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வெளிவாயிலில் தேனீக்கள் வளர்க்கும் பண்ணையும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மியூசியம் 2018ம் ஆண்டு ஆடியோ விசுவல் காட்சி அமைப்புடன் தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே முதல் முறையாக பூச்சிகளுக்கு என சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள மியூசியம் இது. இதற்காக தமிழக அரசு ரூ.2.69 கோடி வழங்கியது. தற்போது 3D விர்ச்சுவல் அமைப்பில் இயங்குகிறது. 6,691 சதுர அடி நிலப்பரப்பில் உள்ள இந்த மியூசியத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பூச்சிகள் பற்றிய விளக்கம் அளிக்கப்படுகிறது.
பொதுவாக பட்டாம்பூச்சிகளுக்கு என்று ஒரு மியூசியம், பூச்சிகளுக்கு என்று ஒரு மியூசியம் இயங்கும். இந்தியாவில் இங்கு மட்டுமே எல்லா வகையான பூச்சிகளும் இருக்கிறது. இந்தியாவில் மட்டுமே 75,000 பட்டாம்பூச்சி வகைகள் உள்ளன. அருங்காட்சியகத்தின் நுழைவுவாயிலில், பார்ப்பவர்களைக் கவரும் வண்ணம் பிரமாண்டமான 'வயலின் மாண்டிஸ்' பூச்சியின் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இது கால்களை ஊன்றி முன்னும் பின்னும் அசையும் பூச்சி.
குழந்தைகளைக் கவரும் வண்ணம் வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் வண்ணத்துப்பூச்சிகள் அடுக்கப்பட்டுள்ளன.