

மதுரை மாநகரில் தவறவிடக் கூடாத சுற்றுலா இடங்களில் ஒன்றான காந்தி நினைவு அருங்காட்சியகமானது (Gandhi museum) ராணி மங்கம்மாளுக்கு சொந்தமான பேரெழில் கொண்ட பழைய அரண்மனையில் அமைந்துள்ளது. காந்தியை கௌரவிக்க கட்டப்பட்ட ஐந்து அருங்காட்சியகங்களில் இதுவே முதலாவதாகும்.
மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகம், இந்திய சுதந்திரப் போராட்ட தியாகங்களின் பிரதிபலிப்பாகவும், காந்திய இயக்கத்தை பற்றி நமக்கு அறிமுகம் செய்யும் ஒரு சாளரமாகவும், பண்டைய கால பொருட்களின் களஞ்சியமாகவும் திகழ்கிறது.
தற்போது, இந்த பாரம்பரிய தளத்தை அதன் முந்தைய பெருமைக்கு மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காந்தி மற்றும் இந்தியாவின் சுதந்திரப் போராட்ட நினைவிடம் அமையவிருக்கும் இரண்டு பிரிவுகளிலும் `10 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளன. இவ்விடம் மே முதல் வாரத்தில் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2022-ஆம் ஆண்டு தனது சுதந்திர தின உரையின்போது இந்தப் புனரமைப்புப் பணிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். பொதுப்பணித்துறையின் பாரம்பரியப் பிரிவிடம் இந்தத் திட்டப்பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
1959 ம் ஆண்டு ஏப்ரல் 15 ம் தேதி அன்றைய பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் இந்தியாவில் தொடங்கப்பட்ட 5 காந்தி நினைவு அருங்காட்சிய கங்களில் ஒன்றாக மதுரை காந்தி மியூசியம் முதன் முதலாக திறக்கப்பட்டது.இது மதுரையின் முக்கிய சுற்றுலாத் தளமாகவும், ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட அமைதிக்கான அருங்காட்சிய கமாகவும் விளங்குகிறது. இது ஐ.நா சபையால் அங்கீகரிக்கப்பட்ட மியூசியம் ஆன பிறகு இங்குள்ள பூங்கா "சமாதான பூங்கா 'என பெயரிடப்பட்டது.
மியூசியத்தில் முதல் பகுதியில் "இந்தியா சுதந்திரத்திற்காக போராடுகிறது" என்ற பகுதியில், சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் ஆணி வேர்களை சில அழகான படங்கள் மற்றும் ஓவியங்கள் விவரிக்கின்றன.3 00 க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட நினைவு ஆவணங்கள் இங்கு உள்ளது.
இரண்டாவது பகுதியில் காந்தியின் வாழ்க்கையை அவரது குழந்தை பருவத்தில் இருந்து பிரதிபலிக்கும் பல்வேறு அரிய புகைப்படங்களைக் கொண்ட ஒரு புகைப்பட சுயசரிதையும் இங்கு இடம் பெற்றுள்ளது . காந்தியின் வாழ்க்கையை விளக்கும் 124 புகைப்படங்கள் (Visual Biography). இங்கு உள்ளது.. சேவா கிராமத்தில் உள்ள ஒரு குடிசையின் மாதிரி இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய கட்டிடத்தின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தின் மூன்றாவது பகுதியில், காந்தி தனது வாழ்நாளில் பயன்படுத்திய பல அன்றாட சாதனங்களை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளில் அவர் அணிந்திருந்த இரத்தக்கறை படிந்த ஆடை ,காந்திஜி அடால்ஃப் ஹிட்லருக்கு எழுதிய கடிதம்.,சுப்பிரமணிய பாரதியாருக்கு காந்தி அனுப்பிய வாழ்த்துச் செய்தி.என்று காந்திஜியின் உடமைகள்14 இங்கு காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. காந்தியை குறித்த எழுத்துக்கள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்களும் இங்கு பார்வையாளர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
காந்தி நினைவிடத்தை அமைப்பதற்காக, அரண்மனையின் இருபுறமும் உள்ள இரண்டு பிரிவுகளும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இது 4 வது பகுதியாக உருவாக்கப்படுகிறது.அவற்றில் இரண்டு தனித்தனி ஒலி-ஒளி அறைகளும், நான்கு காட்சிக்கூடங்களும் இடம்பெறும். மேலும், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் பின்னணியில் உள்ள வரலாற்றை விளக்குவதற்காக, ஒரு சுற்றுலா வழிகாட்டியுடன் ஊடாடும் டிஜிட்டல் திரைகளும் இருக்கும். இதில் “மதுரையில் காந்தி” என்ற காணொளியும் அடங்கும்.
மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகம் அமைந்துள்ள கட்டிடம், நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த ராணி மங்கம்மாளுக்குச் சொந்தமான, கி.பி. 1670-ஆம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தமுக்கம் அரண்மனையாகும்.இது ராணி மங்கம்மாள் கோடை காலத்தில் தங்குவதற்காக கட்டப்பட்டது.பின்னர், இது கர்நாடக நவாப், கிழக்கிந்திய கம்பெனி மற்றும் சிலரின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தது. 1764 ம் ஆண்டு வரை இது பிரிட்டிஷ் ஆட்சியின்போது மதுரை எல்லை அலுவலகமாக 'அவுட் போஸ்ட் 'டாக செயல்பட்டது.
இறுதியாக, 1864 ம் ஆண்டு வரை இந்த அரண்மனை பல ஆண்டுகளாக மதுரையின் பிரிட்டிஷ் மாவட்ட ஆட்சியரின் உத்தியோகபூர்வ இல்லமாக இருந்து வந்தது. பின்னர் மதுரை மாவட்ட நீதிமன்றமும், நீதிபதிகள் தங்கும் இடமாக செயல்பட்டது. தற்போதுள்ள தெற்கு பகுதி 1877 ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது.
1955-ஆம் ஆண்டு ஜனவரி 30 ம் தேதி காந்தி நினைவு அருங்காட்சியகத்தை அமைக்கும் நோக்கத்திற்காக, சுமார் 13 ஏக்கர் நிலத்துடன் கூடிய இந்த அரண்மனை, தமிழ்நாடு மாநில அரசால் அகில இந்திய காந்தி ஸ்மராக் நிதிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அதன் பின்னர் அசல் கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரிய புனரமைப்புப் பணிகளுக்கு மேலாக, நூலகம், திறந்தவெளி அரங்கம் மற்றும் பல இதர கட்டிடங்களுக்காக அதன் வடக்குப் பகுதியில் ஒரு முற்றிலும் புதிய பிரிவு கட்டப்பட்டது.