
எந்த ஒரு நாட்டினுடைய வளர்ச்சியிலும் கலை கலாச்சாரம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. இசை, நடனம், நாட்டுப்புற கலைகள், நிகழ்ச்சிகள் மற்றும் சடங்குகள் கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாக திகழ்கின்றன. இந்தியாவின் கலாச்சார பாரம்பரியமானது, பண்டைய நினைவுச் சின்னங்கள், கண்காட்சிகள், திருவிழாக்கள், கைவினைப் பொருட்கள் மூலம் அவற்றின் செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறது.
கலை (Art) என்பது:
ஓவியம், சிற்பம், இசை, நடனம் போன்ற கலை வடிவங்கள் மூலம் ஒரு நாட்டினுடைய கலாச்சாரத்தை வெளிப்படுத்த முடியும். கலை என்பது மனிதனுடைய படைப்பாற்றலையும், கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தும் ஒரு சிறந்த வடிவமாகும். கலை என்பது மனித உணர்வுகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தவும், சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவும் பயன்படுகிறது. ஆன்மீக வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.
கலாச்சாரம் (Culture):
கலாச்சாரம் என்பது ஒரு சமூகத்தினுடைய பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும், நடத்தை விதிமுறைகளையும், வாழ்க்கையின் முறைகளையும் சிறப்பாக பிரதிபலிக்கக் கூடியது. கலை, கலாச்சாரம் இரண்டுமே ஒரு சமூகத்தின் சிறந்த அடையாளமாகும். இவை அந்த சமூகத்தின் தனித்துவத்தை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்துவமான கலாச்சாரங்கள் உள்ளன. அது அந்த சமூகத்தின் மக்களால் பின்பற்றப்படுகிறது.
கலாச்சாரம் என்பது ஒரு சமூகத்தின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் ஒரு சிறந்த பாலமாக உள்ளது. சமூகத்தின் பழக்கவழக்கங்கள், மொழி, உணவு, உடை மற்றும் பிற சமூக நடத்தைகள் கலாச்சாரத்தினுடைய முக்கிய அம்சங்களாக திகழ்கின்றன. கலை கலாச்சாரம் இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து சமூகத்தின் தனித்துவத்தை நிலை நிறுத்துகின்றன. சமூகத்தின் முக்கிய அடையாளமாகத் திகழும் இவற்றை போற்றி பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையும் கூட.
அவற்றின் முக்கியத்துவம்:
சமூக அடையாளத்தை உருவாக்கவும், படைப்பாற்றலை வளர்க்கவும், சமூக ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு கருவியாக செயல்படுகிறது. சமூகப் பிரச்னைகளை வெளிச்சம் போட்டு காட்டவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவுகிறது.
இந்தியாவின் பாரம்பரிய கலைகள் மிகவும் விரிவானவை. ஒவ்வொரு பிராந்தியமும் அதன் தனித்துவமான கலை வடிவங்களை கொண்டுள்ளது. கலை கலாச்சாரம் என்பது ஒரு நாட்டினுடைய அடையாளமாக கருதப்படுகிறது. இது ஒரு சமூகத்தின் வரலாற்றையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்கிறது.
பல்வேறு சமூகங்களுக்கிடையே புரிதலையும், நல்லுறவையும் வளர்க்கிறது. அத்துடன் சமூகத்தில் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்துவதில் இவற்றிற்கு முக்கிய பங்குள்ளது.
ஒரு நாட்டினுடைய சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் இந்த கலை கலாச்சாரம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.
கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு, பரதநாட்டியம் போன்ற கலை வடிவங்கள் தமிழ்நாட்டினுடைய தனித்துவமான சிறப்பம்சங்களாகும். தமிழக கலாச்சாரத்தை பறைசாற்றும் தமிழர் திருநாள், பொங்கல் திருநாள் போன்ற பண்டிகைகள் தமிழகத்தின் சிறப்பம்சங்களாகும். இங்குள்ள கோவில்களும் கட்டடக்கலைகளும் தமிழகத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை செழுமையான கலை மற்றும் கலாச்சார பாரம்பரியம் உள்ளது.
தமிழ்நாட்டின் பிரபலமான பாரம்பரிய நடன வடிவம் பரதநாட்டியம். இது துல்லியமான அசைவுகளுக்கும், நுட்பங்களுக்கும் பெயர் பெற்றது. கதக் இந்தியாவின் வடக்கு பகுதியின் பாரம்பரிய நடனம். இது கதைகள் மற்றும் பாடல்களை வெளிப்படுத்தும் சுழற்சி அசைவுகள் மற்றும் துடிப்பான இயக்கங்களை கொண்டது. கதகளி கேரளாவின் பாரம்பரியமான நடனம். இது பெரிய முகமூடிகளும், வண்ணமயமான உடைகளும் அணிந்து புராணக் கதைகளை வெளிப்படுத்தும். இப்படியே ஒடிஸி, மணிப்புரி என்று ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ற பாரம்பரிய நடனங்களும், இசையும் உள்ளன.
தஞ்சாவூர் ஓவியங்கள், ராஜஸ்தானி ஓவியங்கள், மகாராஷ்டிராவின் பழங்குடி ஓவியமான வார்லி ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள், கலை கலாச்சாரத்தின் செழிப்பு பெற்றவை. நடனம், நாடகம், சிற்பக்கலை, ஓவியக்கலை என கலை வடிவங்கள் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் முக்கிய பகுதியாகும்.