
இந்தியாவிலுள்ள மதிப்புமிக்க மூன்று பிரபல அருங்காட்சியகங்களுள் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. அரிய பொக்கிஷங்கள், கலை நயங்கள், சிற்பங்கள், நாணயங்கள், ஓவியங்கள், பழங்கால மன்னர்களின் பயன்படுத்திய பொருட்கள், அரியவகை ஓவியங்கள், எண்ணற்ற கை வேலைப்பாடுகள் கொண்ட கலைப் பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள், பீங்கான் பொருட்கள் விதவிதமான கடிகாரங்கள் என அனைத்தும் ஒருங்கே அமைய பெற்ற இந்த இடம்தான் ஹைதராபாத்தில் உள்ள 'சாலர் ஜங்' மியூசியம் ஆகும். இந்த மியூசியத்தை ஒரு முறை பார்வையிட்டால் அடிக்கடி பார்க்கத் தோன்றும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ஏழாவது நிஜாம் அமைச்சரவையில் இடம் பெற்ற சாலர் ஜங் என்பவர் ஒரு சிறந்த கலைஞர். இவரது அரும்பெரும் முயற்சியால் நேபாளம், மியான்மர், பாரிஸ், இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட பொக்கிஷங்கள் சிற்பங்கள் ஓவியங்கள் என இங்கு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இவரது காலம் 1899 ஆண்டு முதல் 1949 ஆம் ஆண்டு வரை ஏழாம் நிஜாம் அமைச்சரவையில் அமைச்சராக பணிபுரிந்தார். பரந்து விரிந்த நிலப்பரப்பில் இரண்டு வளைவு கட்டிடங்களாக முழுவதும் சலவை கற்களால் குவி மாடத்துடன் கட்டப்பட்டுள்ளது. ஒரு முனையில் முசி நதியும், மறுமுனையில் தனலட்சுமி தோட்டத்தையும் காணலாம். இது முழுவதுமாக வடிவமைக்கப்பட்டு 1951 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு இல்லாத கலைப் பொருட்களே இல்லை எனலாம். எங்கு திரும்பினாலும் கலை பொக்கிஷங்கள் நம் கண்ணை கவரும் விதத்தில் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆறு பகுதிகளை கொண்டது. இரண்டு மாடி கட்டடத்துடன் அழகுற கட்டப்பட்டுள்ளது. யானை தந்தங்கள், பீங்கான் ஜாடிகள், கலைநயம் மிக்க பொருட்கள், சிலைகள், கடிகாரங்கள் என 42,000 பொருட்கள் உள்ளது. இந்த மியூசியத்தில் உள்ள லைப்ரவரியில் அறுபதாயிரம் நூல்களும் சுமார் 1000 கையெழுத்து பிரதிகளும் உள்ளன.
ராஜா ரவிவர்மா ஓவியங்கள், ஹைதர் அலி, திப்பு சுல்தான் அவுரங்கசீப் பயன்படுத்திய சிம்மாசனங்கள், தலைப்பாகை உடைவாள் இவை அரங்கம் முழுவதும் நிறைந்து காணப்படுகிறது. மறுபுறம் குர்ஆன் நூல்கள் சிறிதும் பெரிதுமாக எண்ணற்ற வகையில் உள்ளன. உலகிலேயே மிகச் சிறிய குரான் நூல் இங்குஉள்ளது. அடுத்த கேலரியில் விதவிதமான கடிகாரங்கள் காணப்படுகின்றன. இசை கடிகாரம், சூரிய கடிகாரம் இவை கண்ணைக் கவரும் விதத்தில் உள்ளன.
இங்குள்ள இசைக் கடிகாரம் 200 ஆண்டுகளாகியும் இன்னும் நிற்காமல் ஓடிக் கொண்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. அடுத்த கேலரியில் காந்தாரா சிற்பங்கள், பாரசீக மினயேசெர்கள் காணப்படுகின்றன. முக்காடு போட்ட ராபேக்கா சிலை கண்ணை கவரும் விதத்தில் அனைவரின் பாராட்டை பெரும் வகையில் அமைந்துள்ளது. இதனை சுற்றி பார்க்க மூன்று மணி நேரம் ஆகும் என இங்குள்ள பணியாளர் தெரிவித்தார்.
ஆனால் எனக்கு என்னவோ இதனை சுற்றி பார்க்க ஒரு நாள் போதாது என்று தோன்றுகிறது. இங்கு உணவு அருந்தவும், இளைப்பாறவும் சிற்றுண்டியும் அதை ஒட்டி ஒரு பெரிய ஹாலும் உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் ஒரு குவிமாடம் அழகாக கண்ணை கவரும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது.
அரங்கத்தின் உள்ளே 3d, 2d போன்ற காட்சிகள் இடம் பெறுகின்றன. தற்போது இவை அனைத்தும் டிஜிட்டல் மயமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஊனமுற்றவர்களுக்கு சுற்றிப் பார்க்க சக்கர நாற்காலி வசதி செய்து கொடுக்கப்படுகிறது.
தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து இருக்கும் வெள்ளிக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை அன்று அடைக்கப்பட்டு இருக்கும். நான் சென்று பார்க்கும் போது பெரியவர்களுக்கு 50 ரூபாய் கட்டணமும், சிறியவர்களுக்கு இருபது ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்பட்டது. தற்போது கட்டணம் எவ்வளவு என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் வாழ்வில் ஒரு முறையேனும் இந்த இடத்தை பார்வையிட்டு செல்வது மனதுக்கு மகிழ்ச்சி தரும்.