

தம் நாட்டின் மீது அன்பும் பற்றுணர்வும் தோன்றும்படியும், நினைவூட்டும்படியும் அமைந்த நாட்டுணர்ச்சி மிக்க ஓர் இசைப்பாடலை நாட்டுப்பண் என்கின்றனர். ஒவ்வொரு நாட்டுக்கும் என்று நாட்டுப்பண் இருக்கிறது. இப்பாடலைப் பாடும் பொழுது, தம் நாட்டின் பழக்க வழக்கங்கள், வரலாறு, உயர்வாகத் தாம் கொள்ளும் கொள்கைகள், நாட்டிற்காக உயிரிழந்த, உழைத்த பெருமக்களின் நினைவு என்று, பொதுவாக நாட்டைப்பற்றிய ஆழமான உணர்வுகள் மேலெழுந்து பாடப்படுகிறது. இதனை நாட்டு வணக்கப் பாடல், தேசிய கீதம் என்றும் சொல்கின்றனர்.
இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாக இருந்த ‘ஜன கண மன...’ எனத் தொடங்கும் வங்காள மொழிப் பாடல் இந்திய நாட்டுப்பண்ணாக இருப்பது நாம் அனைவரும் அறிந்ததுதான்.
இந்த நாட்டுப்பண் அல்லது நாட்டு வணக்கப் பாடல் என்பது மரபு வழியாகவோ அல்லது ஒரு நாடு தன் அரசின் ஏற்பு பெற்ற வடிவம் என்றோ அறிவித்து அதனைப் பயன்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கின்றன.
நாட்டுப்பண் சரி, திருத்தந்தைப்பண் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா...?
இத்தாலி நாட்டின் உரோம் நகரிலுள்ள ஒரு தன்னாட்சியுடைய சுதந்திர நாடாக இருந்து வரும் வாடிகன் நகரின் அரசியல் தலைவரும் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவருமான திருத்தந்தை எனும் போப்பாண்டவரைப் போற்றிப் பாடப்படும் பாடலை, ‘திருத்தந்தைப்பண்’ என்கின்றனர்.
திருப்பீடத்தூதுவர், கர்தினால்கள் போன்ற திருத்தந்தையின் அதிகாரப்பூர்வ பணிகளிலிருப்பவர்கள் பங்கேற்கும் விழா அல்லது கூட்டங்களில் திருத்தந்தையைப் போற்றிப்பாடப்படும் இந்தப்பண், வத்திக்கானின் அதிகாரப்பூர்வ ஏடுகளில் இது நாட்டுப்பண் அல்ல என வெளிப்படையாகக் குறிக்கப்பட்டாலும், வத்திக்கான் நகரின் தேசியக் கொடி ஏற்றப்படும் போது, இப்பாடல் பாடப்படுவது வழக்கமாக இருக்கிறது. இந்தப் பாடலை, வத்திக்கானின் நாட்டுப்பண் போன்று கருதி, பல நாடுகளில் நாட்டுப்பண் பாட வேண்டிய இடங்களிலும் இதனைப் பயன்படுத்துகின்றனர்.
“வாழ்க உரோமை , புனிதர்களின் நித்திய தாயகம்;
ஓ நித்திய உரோமை, புகழின் நித்திய உறைவிடம் :
உன்னதத்தில் இறைவனுக்கு மாட்சியும் புகழ்ச்சியும்,
கிறிஸ்துவை நேசிப்போருக் கமைதியும் உரித்தாகுவதாகவே !
அதிஉன்னத ஆயரே,உம்மில் யாம் சரணடை கின்றோம் ,
உம்மிலே, மெய்மீட்பரை யாம் உணர்கின்றோம்!!
தூய மெய் மார்க்கத்தின் மெய் வாரிசு நீரே என்றும் ;
விசுவாசிகளின் ஊட்டமும், ஆறுதலும் நீரே!!
பகையும், தீவினையும் மறைந்து ஒழிந்து போம் !
அன்பும் கருணையும் என்றென்றும் ஆட்சி ஆளும்!
வாழ்க, வாழ்க உரோமை , நினைவுகளின் நித்திய தாயகம்;
உந்தன் மகிமை பாக்கள் எங்கெங்கும் ஒலிக்கின்றன!!
அப்போஸ்தலர்களின் உரோமை, மீட்பின் வழிகாட்டியாவாய் நீ
உரோமை, மனிதத்தின் ஒளியாவாய் , உலகின் நம்பிக்கை நீ !!
வாழ்க, வாழ்க உரோமை, உன் மாட்சி என்றும் நிலைக்கும்
வெறுப்பும் பகைமையும் உன் அழகில் அழிவுறும்!!
அப்போஸ்தலர்களின் உரோமை, மீட்பின் அடித்தளம் நீ
உரோமை, மனிதத்தின் ஒளியாவாய் , உலகின் எதிர்காலம் நீ !”
என்று தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும், திருத்தந்தைப்பண்ணைத் தமிழ்நாட்டில் அப்படியே பயன்படுத்துவதில்லை.
“ரோமை ராஜ பூபனே நமோ நமோ
திருச்சபையின் தலைவராக செனித்த மாதவா
உம்மை நாடி தேடி நமஸ்க்கரிக்கின்றோம் (2)
உலக பாசம் ஒழிந்த சற்பிறசாதனே (2)
இறைவன் அருளால் உலகை ஆண்ட மாதவா (2)
உம்மை நாடி தேடி நமஸ்கரிக்கின்றோம்”
என்று பாடிக் கொண்டிருக்கின்றனர்.