

உலக அளவில் இந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முட்டாள்கள் தினமாகவும் நகைச்சுவைகளுக்கும் தந்திரங்களுக்கும் உரிய ஒரு சிறப்பு நாளாகவும் கொண்டாடப்படுகிறது. காலை தூங்கி எழுந்தவுடனேயே சில பேர் ஞாபகம் இல்லாமல் அடுத்தவர்கள் செய்யும் தந்திரத்தில் மாட்டிக்கொண்டு முட்டாளாகி விடுகிறார்கள்.
சரி, உலகளிவில் மக்கள் இந்த நாளை எப்படி எல்லாம் கொண்டாடுகிறார்கள். மற்றும். அதன் பின்னணி என்ன என்று இப்பதிவில் பார்க்கலாமா?
ஐக்கிய இராச்சியத்தில், ஏப்ரல் 1 ஆம் தேதி நண்பகல் வரை தான் நகைச்சுவைகளையும் தந்திரங்களையும் செய்து அடுத்தவர்களை ஏமாற்ற முடியும். நண்பகலுக்குப் பிறகு இதை செய்தால் அது துரதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. அவர்களின் கருத்துப்படி, இதை மறந்து பிற்பகலில் நகைச்சுவை செய்ய முயற்சிப்பவர், அவரே 'ஏப்ரல் முட்டாள்' ஆகிவிடுவாராம்.
1563-ஆம் ஆண்டு டிரென்ட் பேரவையின் வேண்டு கோளுக்கு இணங்க, பிரான்ஸ் 1582-ஆம் ஆண்டில் ஜூலியன் நாட்காட்டியிலிருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியபோது, ஏப்ரல் முட்டாள்கள் தினம் தோன்றியிருக்கலாம் என பல ஆராய்ச்சியாளர்கள் ஊகிக்கிறார்கள். இந்து நாட்காட்டியைப் போலவே ஜூலியன் நாட்காட்டியிலும், புத்தாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியை ஒட்டிய வசந்தகால சம இரவுப் பகல் நாளில் தொடங்கியது .
புத்தாண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு மாறிவிட்டது என்கிற செய்தியைத் தாமதமாகப் புரிந்துகொண்டவர்கள் அல்லது அதை உணராமல், மார்ச் மாதத்தின் கடைசி வாரம் முதல் ஏப்ரல் 1 வரை தொடர்ந்து கொண்டாடியவர்கள், கேலிகளுக்கும் கிண்டல்களுக்கும் உள்ளானார்கள், மேலும் அவர்களை மக்கள் “ஏப்ரல் முட்டாள்கள்” என்றும் அழைத்தார்கள். அவர்களை கேலி செய்யும் விதமாக அவர்களின் முதுகில் காகித மீன்களை வைத்து, அவர்களை “poisson d'avril” (ஏப்ரல் மீன்) என்றும் அழைத்தார்கள்.
ஆகவேதான் இன்றளவும், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, இத்தாலி மற்றும் கனடா மற்றும் சுவிட்சர்லாந்தில் பிரெஞ்சு மொழி பேசும் பகுதிகளில் இந்த ஏப்ரல் 1 ஆம் தேதி பாரம்பரியமாக 'ஏப்ரல் மீன்' என்று அழைக்கப்படுகிறது. யாருக்கும் தெரியாமல் ஒருவரின் முதுகில் காகித மீனை ஒட்ட முயற்சிப்பதுதான் இந்த நாளில் செய்யப்படும் ஒரு பொதுவான நகைச்சுவை நிகழ்ச்சியாகும்.
சில நேரங்களில் ஊடகங்களே எதாவது ஒரு செய்தியை போட்டு மக்களை ஏமாற்றியதாகவும் கருத்துக்கள் இருக்கின்றன. அதற்கான ஆதாரமும் இருக்கின்றன.
1998 ஆம் ஆண்டு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தன்று, அமெரிக்க ஹாம்பர்கர் சங்கிலித் தொடரான பர்கர் கிங், இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கான ஹாம்பர்கரை உருவாக்கியுள்ளதாக அறிவித்தது. அந்த 'புதிய தயாரிப்பு'க்கான விளம்பரத்தில், இடது கை பழக்கம் உள்ளவர்கள் எளிதாக எடுத்து உண்பதற்காக, அனைத்துப் பொருட்களும் 180 டிகிரி சுழற்றப்பட்டிருப்பதாக விளக்கப்பட்டது. அடுத்த நாள், இந்த விளம்பரம் ஒரு புரளி என்பதை பர்கர் கிங் ஒப்புக்கொண்டது.
ஆனால் அந்த விளம்பரத்தை நம்பி அமெரிக்காவிலுள்ள அனைத்து உணவகங்களிலும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் இடது கை பழக்கம் உள்ளவர் களுக்கான பர்கரை ஆர்டர் செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள், அவர்களுக்கு அடுத்த நாள்தான் உண்மை புரிய வந்தது.
எது எப்படியோ இந்த நாளில் செய்யும் நகைச் சுவையானது மன அழுத்தத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதேசமயத்தில் குழப்பம், கவலை, தேவையற்ற டென்ஷன், நேரத்த்தை வீணாக்குதல் போன்ற எதிர்மறையான விளைவுகளையும் இந்த நாள் ஏற்படுத்துகிறதாக ஒரு சில மக்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.