
எப்பொழுதும் எல்லோர் மனதிலும் நீங்காது நிலைத்து நிலை பெற்று இருப்பவை கடிதங்கள் தான். அப்பொழுதெல்லாம் வெளியூர், வெளிநாடு, வெளி மாநிலம், ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவ, மாணவியர் பெற்றோருக்கு தான் சென்று சேர்ந்துவிட்ட செய்தியை கடிதம் மூலம் தான் தெரிவிப்பார்கள். அப்பொழுது அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரையும் கேட்டு விசாரித்த பின்பு தான் முக்கியமான செய்தியை பகிர ஆரம்பிப்பார்கள்.
ஒரு வீட்டிற்கு போஸ்ட்மேன் வருகிறார் என்றால், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் வந்து என்னை விசாரித்து எழுதி இருக்கிறதா? என்று கேட்டு சந்தோஷம் அடைவார்கள். நல்லா இருக்க வேண்டும் என்று வாழ்த்தி விட்டு செல்வார்கள். அவ்வளவு உன்னதம் உடையதாக இருந்தது கடிதம்.
இப்பொழுதும் நமக்கு வந்திருந்த கடிதங்களை எடுத்து படிக்கும் பொழுது அந்தக் காலகட்டத்திற்கே சென்று விடுவோம். கண்களில் நீர் துளிர்க்கும். இப்பொழுது அப்படி எழுதாமல் விட்டு விட்டோமே என்ற வருத்தம் கூட ஏற்படுவது உண்டு.
வெற்றி சாமரத்தை, துக்கம், தோல்வியை தழுவினால் வருடி கொடுக்கும் ஓர் உபகரணமாக அதன் வாசம் வீசும் வார்த்தைகளைத் தான் கடிதம் சுமந்து வந்தது. ஒரு கடிதத்தால் பல உள்ளங்கள், குடும்பங்கள், தேசங்கள் ஒன்றுபட்ட சம்பவமும் உண்டு. துண்டுபட்ட சம்பவமும் இருக்கத்தான் செய்கிறது. கடிதம் எழுதி அந்த கடிதத்தின் மூலமாக எழுத்தாளர்களான சம்பவமும் உண்டு.
முதன் முதலில் மரப்பட்டைகளில் தான் கடிதங்கள் எழுதப்பட்டன. அதன் பின் அறிவு வளர வளர, விஞ்ஞான வெளிச்சம் வெளிப்பட தோல்களிலும், செம்புகளிலும், ஓலைகளிலும் கடிதங்கள் எழுதிவந்த மனிதன், காகிதம் கண்டுபிடிக்கப்பட்டதும் அதில் எழுதத் தொடங்கினான்.
போர் முனையில் பணியாற்றும் வீரனுக்கு அவனது கிராமத்தில் இருந்து வரும் கடிதங்களும், கிராமத்தில் இருக்கும் பெற்றோருக்கு போர்முனையில் இருந்து மகன் எழுதும் கடிதங்களும், காதலர்கள் கடிதங்களும் உள்ளங்களை உரசி பார்க்கும் ஆற்றல் பெற்றவை.
சிறையில் வாழ்ந்த பொழுது பண்டித ஜவஹர்லால் நேரு மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் உலக வரலாற்றை புரிந்து கொள்ள விரும்புவர்களுக்கு என்றும் பொக்கிஷமாக கருதப்படுகின்றன.
தமிழறிஞர் வெ. சாமிநாத சர்மாவின் 'வரலாறு கண்ட கடிதங்கள்' இன்றும் கடித இலக்கியத்திற்கு கையேடாக திகழ்கிறது. மனைவி மறைவை ஒட்டி 'அவள் பிரிவு' என்ற தலைப்பில் சாமிநாத சர்மா எழுதிய கடிதங்கள் இன்றும் பிரிவாற்றாமையை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றன.
டாக்டர்.மு.வரதராசனாரின் தம்பிக்கு, தங்கைக்கு எழுதிய கடிதங்கள் வளரும் சந்ததிக்கு என்றும் வழிகாட்டிகளாகும். இலக்கிய பேராசான் ஜீவா 'புதுமைப் பெண்ணுக்கு' எழுதிய கடிதங்கள் புதுமையை விரும்பும் இன்றைய பெண்களுக்கும் பேராயுதமாக திகழ்கிறது.
அறிஞர் அண்ணா இயக்கத் தோழர்களுக்கு 'தம்பி' என்று தலைப்பிட்டு எழுதிய கடிதங்கள் அவரது இயக்கத் தோழர்களை எழுச்சிக் கொள்ளச் செய்தன. இதுபோன்று கப்பலோட்டிய தமிழன், புதுமைப்பித்தன் கடிதங்களுக்கும் தனிச் சிறப்புகள் உண்டு.
எல்லாவற்றுக்கும் மேலாக பிரிதொரு தேசத்தில் வாழ்ந்த காரல் மார்க்ஸின் நண்பர் ஒருவருக்கு ஜென்னி எழுதிய கடிதம் வரலாற்றில் பதிவு செய்யப்படாமல் போயிருந்தால், காரல் மார்க்ஸும் அவரது மனைவி ஜென்னியும் உலக தொழிலாளர்களுக்காகப் பட்ட பாடுகள் மனித குலத்திற்குத் தெரியாமலேயே போயிருந்திருக்கும். இது போன்ற கடித இலக்கியங்கள் ஏராளம் உண்டு.
கடிதங்கள் எழுதுபவரின் இதயத்தை சுமந்து செல்லும் வாகனம் என்று கூறலாம் . இன்றும் உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ நேரில் சொல்ல முடியாத, சொல்ல இயலாத, சொல்ல தயங்குகின்ற செய்திகளை கடிதங்கள் மூலம் பகிர்ந்து கொள்வதும், அதற்கு விடை காண்பதும் எளிமையான வழி என்று கூறலாம்.
இன்பங்களையும் துன்பங்களையும் சுமந்து வரும் இந்த கடிதங்கள் நம் வாழ்நாள் முழுவதும் ஜீவன் உள்ள தொடர்புகளை வளர்த்து வரும் என்பது உண்மை. ஆனால், அந்தத் தொடர்ச்சியை நாம் தான் கையாள வேண்டும். ஆதலால் நாமும் கடிதம் எழுதுவோம்; அது ஒரு கலையாக மிளிரட்டும்!