
உலகெங்கிலும், வருடம் தோறும் எத்தனையோ தினங்களின் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. ஆனால் சிறந்த சங்கீத கலைஞர் ஒருவரைக் கௌரவிக்கும் விதத்தில், ஒரு தினத்தை - அதாவது மே மாதம் 18 ஆம் தேதியை - கொண்டாட வேண்டுமென சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது பெருமைக்குரிய விஷயமாகும். இது கர்நாடக இசைக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்.
எங்கே? எதற்காக? எந்த சங்கீதக் கலைஞருக்கு? யாரால்? இதன் விபரங்களை காணலாமா?
டெம்பே நகரம், அரிஸோனாவின் (அமெரிக்கா) மதிப்பிற்குரிய மேயர் திரு COREY WOODS, 'Spark Global Club Project - Geetha Sangeetha Yatra' வை டெம்பேயிலுள்ள திரு வெங்கடகிருஷ்ண ஷேத்ரா கோவிலில் வைத்து, புதிய வெளியீட்டாக அறிவிப்பு செய்தார்.
அந்த வெளியீட்டு சமயம், சங்கீதம் மற்றும் வயலின் கலைஞராகிய டெல்லி பி. சுந்தர் ராஜன் அவர்களது சிறந்த இசை சேவையைப் பாராட்டும் வகையில், மே மாதம் 18 ஆம் தேதியை 'டெல்லி P.சுந்தர் ராஜன் தினமாக' அறிவித்துள்ளார்.
மிகச்சிறந்த Scholar ஆகிய திரு கேசவராவ் தடிபத்ரி, இதை உறுதி செய்யும் வகையில் டெல்லி பி. சுந்தர் ராஜனுக்கு PROCLAMATION பத்திரத்தை அளித்து கௌரவித்தார்.
"கீதா சங்கீதா யாத்ரா" குறித்து டெல்லி பி. சுந்தர் ராஜன் சாரிடம், கல்கி க்ரூப்காக விபரம் கேட்கையில், அவர் கூறியது :-
இந்த ப்ரொஜக்ட் மூலமாக, இசை நிகழ்வுகளை நடத்துவது;
மிகச்சிறந்த கர்நாடக சங்கீத இசையமைப்பாளர்களின் பாடல்கள் வழியே பகவத் கீதையின் சாராம்சத்தை உணர்த்துவது;
முதலில் பொருத்தமான கீதா ஸ்லோகத்தைக் கூறி அதனை விளக்கி, பின்னர் அந்த ஸ்லோகம் எவ்வாறு குறிப்பிட்ட கர்நாடக பாடலுடன் இணைகிறது போன்றவைகளை 'கீதா சங்கீத யாத்ரா' மூலம் அமெரிக்கா மற்றும் இந்தியாவிலுள்ள பல நகரங்களுக்கு எடுத்துச் செல்வதே நோக்கம்.
பகவத் கீதையை, கர்நாடக சங்கீதம் வழியாக உலகளவில் பரப்ப ஒரு அங்கீகாரம் அடியேனுக்கு கிடைத்துள்ளது என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.
அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மாணவ- மாணவியர்களுக்கு பகவத் கீதையிலுள்ள அத்தியாயங்களை இணைக்கும் கர்நாடக சங்கீத பாடல்களைக் கற்பித்து, பயிற்சியளித்து பாடவைப்பேன். மே 18, என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத ஒரு பொன்னாள்.
சுவாரசியமான மினி நேர்காணல் :
தங்களுக்கு டெல்லி சுந்தர் ராஜன் என்ற பெயர் எப்படி வந்தது?
டெல்லியில் பிறந்து வளர்ந்த நான் கச்சேரிகளுக்காக அடிக்கடி சென்னை வருவதுண்டு. எல்லோரும் டெல்லியிலிருந்து வந்திருக்கிற சுந்தர் ராஜன் எனக் கூறுவார்கள். நாளடைவில் டெல்லி அடைமொழி ஆகிவிட்டது. சாதாரணமாக, சுந்தர் ராஜன் பேசறேன் என்றால் தெரியாது. "டெல்லி" சொல்ல வேண்டும்.
பிரம்ம ஸ்ரீ ஷரபா சாஸ்திரிகள் பரம்பரையில் வந்த குடும்பம் எங்களுடையது. மேடையில் முதன் முதலாக புல்லாங்குழல் வாசிப்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் அவர் என்பது பெருமைக்குரிய விஷயம்.
வயலின் கற்க தூண்டியது எது ? குரு விபரம்..?
டெல்லி வீதிகளில் "ஏக்தார்" (ஒரு தந்தி) வைத்து பாடல்களை வாசிப்பவர்களைப் பார்த்தது, வயலின் கற்க தூண்டியது எனலாம்.
கர்நாடக சங்கீதம் மற்றும் வயலின் இரண்டிற்கும் சங்கீத பூஷணம் புதுக்கோட்டை திரு. வி. ஜானகிராமன் சார்தான் குரு. தனித்துவமான வித்தையை கற்பிக்கும் நுட்பங்கள் பல அறிந்தவர். வயலின் வாசிக்கையில், அதே பாட்டை, பாடவும் வேண்டும்.
வேறு ஏதாவது பகிர விரும்புகிறீர்களா..?
பாரம்பரிய கர்நாடக இசையை பிரபலப் படுத்தவும், இளைய சமுதாயத்தினரை ஊக்குவிக்கவும், "மார்கா" எனும் அமைப்பை இந்தியா மற்றும் USA - இல் ஏற்படுத்தியுள்ளேன்.
அநேக விருதுகள் பெற்றுள்ளேன். பிரபல சங்கீத வித்வான்களுக்கு வயலின் வாசித்திருக்கிறேன். பாராட்டுக்களைப் பெற்றுள்ளேன்.
எல்லாவற்றிற்கும் குருவருள், இறையருள், குடும்பத்தினர் ஆதரவு, ரசிகப்பெருமக்களின் அன்பு பாராட்டுக்களே காரணம்.