முரண்பாடுகளைத் தாண்டி முன்னேறுமா இந்தியா? மனமிருந்தால் மார்க்கமுண்டுதானே?

India
India
Published on

எத்தனையோ முரண்பாடுகள்! இருந்தும் இந்தியா முன்னேறிக் கொண்டுதான் உள்ளது! அதற்கு முக்கியக் காரணம், நீதி, நேர்மையின் வழி நின்று, சுயநலத்தை விட்டுக்கொடுத்து, மனசாட்சிக்குப் பயந்து, சுய ஒழுக்கத்தைப் பேணும் நல்லோர்களால்தான் என்று சொல்ல வேண்டியதில்லை! மௌனமாகத் தங்கள் வழி நடக்கும் அந்தச் சான்றோர்கள் தங்களை யாரென்று கூடக் காட்டிக் கொள்வதில்லை. அவர்கள் எண்ணம் முழுவதிலும் அமைதியும், சமாதானமுமே.

மக்களுக்குச் சேவை செய்யவே நாங்கள் அரசியல்கட்சிகள் நடத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டு வருபவர்கள், ஓட்டு வங்கி அரசியலுக்காக மக்களை சாதி, இன, மொழி பேதங்களைக் காட்டிப் பிரித்தாளும் சூழ்ச்சியையே மேற்கொள்கிறார்கள். அறியா மக்களும் ஆட்டு மந்தைகளைப் போல் அவர்கள் வார்த்தைகளிலும், அவர்கள் அவ்வப்போது வீசும் சொற்பக் காசுக்காகவும் அவர்கள் வார்த்தைகளை வேதங்களாக மதித்து அல்லற்படும் அவலமே அரங்கேறுகிறது! மாறாக, தீவிரவாதத்தை மட்டுமே தங்கள் ஆயுதங்களாகப் பயன்படுத்தும் தீவிரவாதிகள் மக்களைப் பிரிக்க நினைத்து ஆயுதங்களைக் கையில் எடுக்கையில், சாதி, மத, இன மாற்றங்களை மறந்து அனைவரும் ஒன்றாக இணைகிறார்கள்! சேர்த்து வைக்க வேண்டிய அரசியல்வாதிகள் பிரித்து வைப்பதும், பிரித்து வைக்க நினைப்பவர்கள் சேர்த்து வைப்பதும் முரண்பாடுதானே!

சாலைகளில் ‘ரெட் சிக்னல்கள்’ விழப்போவதை அறிந்தும் அவசர அவசரமாக அசுர கதியில் வாகனத்தை ஓட்டிக் கடப்பவர்களும், சிக்னல் ரிலீசாகும் முன்னே வாகனங்களை இயக்கி வேகம் காட்டுபவர்களும் நம் நாட்டில் மட்டுமே அதிகம்!

ஆனாலும் பெரும்பாலான நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் சரியான நேரத்திற்கு உள் நுழைபவர்கள் பெரும்பாலும் குறைவே!

மல்யுத்த வீராங்கனை ‘மேரி கோம்’ பல பயிற்சிகளை மேற்கொண்டு, உடலை வருத்தி, நாட்டுக்காகப் பதக்கங்களைக் கொண்டுவரப் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல!

ஆனால், இப்பிறவி முழுதும் சேர்த்த அவரின் சொத்து மதிப்பைக் காட்டிலும் பல மடங்கு சொத்தினை மேரி கோமாக நடித்த ப்ரியங்கா சோப்ரா ஈட்டியுள்ளார்!

இதையும் படியுங்கள்:
தவறுகளை தவறுதலாக கூட செய்யாதீர்கள்!
India

பகவத் கீதையே உயர்ந்தது என்றும், இல்லையில்லை குரானே உலக வழி காட்டி என்றும் சண்டை போட்டுக் கொள்ளும் பெரும்பாலானோர், அவற்றை முழுமையாகப் படிக்காதவர்கள் என்பதே நிதர்சனம்! இரண்டையும் முழுதாகப் படித்து விட்டால் அந்தச் சண்டை குணமே மாறி விடுமே!

நமது இந்திய நாட்டில் பெண்களை இளவரசி என்றும், ராணி என்றும், மகாராணி என்றும், அழைப்பதோடு நிறுத்திக் கொள்கிறோம். உண்மையில் அப்படி மதித்தால் ஆணவக் கொலைகள் எப்பொழுதோ விடை பெற்றிருக்குமே!

சரித்திரக் காதலர்களை மதித்து உருகும் நாம், நம் வீட்டுக் காதலைக் கசக்கிக் காலடியில் போட்டு மிதிக்கவே செய்கிறோம்.

அது மட்டுமல்ல! படிக்க ஆசைப்படும் பெண்களின் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி, திருமணத்தை நடத்துகிறோம்; படிப்புக்குச் செலவு செய்வதைக் காட்டிலும் பல மடங்கு பணத்தைக் கல்யாணத்திற்கென்று செலவு செய்கிறோம்! உதைப்பது தெரிந்தும், உணர்ந்துங்கூட, திருந்த மறுக்கிறோம்.

காலில் அணிந்து, கல்லிலும் முள்ளிலும், கடின பாதையிலும் நடக்க உபயோகிக்கும் செருப்புகளை, அழுக்கும் தூசும் படியா வண்ணம், அதோடு உகந்த சீதோஷ்ணமும் கொண்ட ஏ.சி., அறைகளில் வைத்து விற்கிறோம். ஆனால் உணவாக உள்ளுக்குள் சாப்பிடும் காய்கறிகளை, சாலையோர பிளாட்பாரங்களில் குப்பைகளுக்கு அருகில் வைத்து விற்பதையே காலங்காலமாக வாடிக்கை ஆக்கி வைத்துள்ளோம்!

மக்களாட்சி என்று பீற்றிக் கொண்டு, மக்களுக்கே முதலிடம் என்று சொல்லிக் கொண்டாலும், ’மக்களின் நண்பன்’ என்று காவல் துறையினர் எவ்வளவு தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், போலீஸ்காரரைப் பார்த்தால் நம்பிக்கை தோன்றுவதற்குப் பதிலாக நடுக்கமே தோன்றுகிறதே.. அது ஏன்?

நாட்டின் மிக உயர்வான ஐ.ஏ.எஸ்.,பரீட்சையில் வரதட்சணையின் கொடுமைகளைச்சாடி பக்கம் பக்கமாகக் கட்டுரை எழுதிச் சாதித்துத் தேர்வான மாணவர், திருமணத்தின்போது கோடிக் கணக்கில் கேட்பது நம் நாட்டில்தானே! அந்தத் தந்திரம் அறிந்தவர்கள் நம்மவர்கள்தானே!

வாங்கும் ‘செல்போன் ஸ்க்ரீன்’ ஸ்க்ராட்ச் ஆவதைத் தடுக்க ஆயிரங்களைக் கூட அனாயாசமாகச் செலவு செய்யும் நாம், உயிர் காக்கும் ஹெல்மெட்டை உதாசீனப் படுத்துகிறோம். வண்டிக்கு மாட்டி விட்டு வேகம் எடுக்கிறோம். ஃபைன் என்றால் மட்டுமே பயப்படுகிறோம். சுய ஒழுக்கம் குறித்த சிந்தனையே நமக்கு இருப்பதில்லை!

இதையும் படியுங்கள்:
பெருமைக்கும் தற்பெருமைக்கும் உள்ள வித்தியாசம் அறிவோமா?
India

விழாக்களில் விருந்தாளிகளுக்கு ‘வெல்கம் ட்ரிங்’காக செயற்கை எலுமிச்ச எசன்சைச் சேர்த்து அளிக்கின்ற நாம், உண்மையான எலுமிச்சை சாறைக் கை கழுவப் பயன்படுத்தும் கிண்ணங்களில் மட்டுமே பயன்படுத்துகிறோம்!

இப்படி ஏகப்பட்ட முரண்பாடுகளுக்கு மத்தியில்தான் நம் வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது!

ஆனாலும் நாம் மனம் வைத்தால் மாற்றங்களைக் கொண்டு வர முடியும்!

மனமிருந்தால் மார்க்கமுண்டுதானே?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com