
உலகின் அதிசயமான ராக்ஷஸ தரைப்பாலம் (IRELAND’S GIANT’S CAUSEWAY) அயர்லாந்தில் கடல் ஓரத்தில் அமைந்திருப்பதைப் பார்த்தால் மட்டுமே நம்ப முடியும்!
இதைப் பற்றிய கதை ஒன்று உண்டு. ராக்ஷஸனான ஃபின் மக் கூல் (GIANT FINN MAC COOL) என்பவன் ஸ்காட்லாந்தில் ஸ்டாஃபா தீவில் (Isle of Staffa) வாழ்ந்து வந்த தனது எதிரியான ஃபின் காலை (FINN GALL) வீழ்த்த விரும்பி கடல் அலைகளின் மீது ஒரு பாலத்தைக் கற்களினால் அமைத்தான்.
பிரம்மாண்டமான கற்களை கடலின் ஆழத்தில் ஆழ அடித்து ஒவ்வொன்றாக நிறுவினான். நீளமான கடல் தரைப்பாலத்தில் அவன் பயன்படுத்தி நிறுத்திய கற்களின் எண்ணிக்கை நம்ப முடியாத 40000 கற்கள் என்ற எண்ணிக்கை!
தனது எதிரியைச் சந்திப்பதற்கு முன்னர் ஓய்வெடுக்கத் தனது இருப்பிடம் திரும்பினான் ஃபின் மக் கூல். எதிரி என்ன செய்திருக்கிறான் என்று பார்க்க விரும்பிய ஃபின் கால் நேராக அயர்லாந்து சென்றான். அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஃபின் மக்கூலைப் பார்த்து அவனை மக்கூலின் மகன் என்று நினைத்துத் திகைத்துப் போனான். திரும்பி ஓடும் போது மக்கூல் அமைத்த பாலத்தை அழித்தவாறே அவன் சென்றான். இது தான் பாலம் எப்படி வந்தது என்பது பற்றிய பழைய கதை!
இதை ஒரு கட்டுக்கதை என்று சொல்லும் பெரும்பாலானோர் இது மனிதனால் அமைக்கப்பட்ட ஒன்றே தான் என்று கருதுகின்றனர். கடலுக்குள் 500 அடி வரை செல்லும் இந்தப் பாலத்தில் உள்ள கற்களின் உயரம் 20 அடியிலிருந்து 39 அடி வரை இருக்கிறது!
பாலத்தில் பெரும்பாலான கற்கள் ஒவ்வொன்றும் அருமையாக பாலிகன் எனப்படும் ஐங்கோண வடிவில் செதுக்கப்பட்டிருக்கிறது. சில கற்கள் சதுரமாகவும் சில கற்கள் அறுகோண வடிவிலும் சில பத்துப் பக்கங்களை உடையதாகவும் உள்ளன.
ஆகாயத்திலிருந்து பார்த்தால் வியப்பைத் தரும் இந்தக் கற்கள் மிக நெருக்கமாக ஒன்றுடன் ஒன்று பிணைந்து அமைக்கப்பட்டிருக்கின்றன. இரு கற்களின் இடையில் ஒரு பிளேடைக் கூடச் செருக முடியாது!
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் உலகில் உள்ள அனைவரின் கவனத்தையும் இது கவர்ந்தது. “இது இயற்கை அமைத்த கோவிலின் பலிபீடம்” என்று பெரும் நிபுணர்கள் வர்ணித்தனர். சிலர் இது பெரிய ஒரு எரிமலையின் வெடிப்பு காரணமாக அமைந்த ஒரு பாலம் என்றனர். இன்னும் சிலரோ கடல்நீரிலிருந்து அடித்து வரப்பட்ட தாதுக்களினால் இந்தக் கற்கள் உருவாகி இருக்கலாம் என்றனர்.
ஆனால், எரிமலை பற்றிய கொள்கையே வென்றது. ஐந்து கோடி வருடங்களுக்கு முன்னர் வெடித்த பெரிய எரிமலை வெடிப்பானது காலப்போக்கில் குளிர்ந்து இந்தப் பாறைகளை அமைத்தன என்பதை பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்டனர்.
இந்தப் பாலத்திலிருந்து வடக்கில் 120 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஸ்டாஃபா தீவிலும் அறுகோண வடிவிலான கற்கள் காணப்படுகின்றன. இங்கு 200 அடி நீளமுள்ள ஒரு குகை இருக்கிறது. ராக்ஷஸனான ஃபின் காலின் நினைவாக இதை ஃபிங்கால் குகை (Fingal’s cave) என்று பெயரிட்டார் சர் ஜோஸப் பேங்க்ஸ் என்ற அறிஞர். கடல் மட்டத்திலிருந்து குகை அறுபது அடி உயரத்தில் இருக்கிறது.
புயல் அடிக்கும் போது அலைகள் அங்குமிங்கும் அலைந்து ஒரு அருமையான இசையை இங்கு உருவாக்குகிறது. மயக்கும் இந்த இசையைக் கேட்ட ஃபெலிக்ஸ் மெண்டல்ஷோன் (1809-1847)என்ற ஜெர்மானிய இசைக் கலைஞர் இதைப் பற்றிய பாடல் ஒன்றை 1829ம் வருடம் இயற்றி இசை அமைத்துப் பாடினார். அயர்லாந்தின் பிரம்மாண்டமான இந்த கடல் மீதுள்ள தரைப்பாலத்தைப் பார்க்க ஏராளமான பயணிகள் வருகை புரிகின்றனர்!