இரிடியம்: கோயில் கலசத்துல சக்தி இருக்கா?... இடி விழுந்தா நடக்கும் மேஜிக்!

Iridium History
Iridium History
Published on

நம்ம ஊர்ல திடீர்னு ஒரு குரூப் கிளம்பி வருவாங்க. "எங்ககிட்ட பழைய காலத்து செம்பு இருக்கு, அதுல இரிடியம் பவர் இருக்கு. அது பக்கத்துல அரிசியைக் கொண்டு போனா காந்தம் மாதிரி இழுக்கும். இதோட விலை 500 கோடி, 1000 கோடி!" அப்படின்னு கதை விடுவாங்க. 

இந்தக் கதையைக் கேட்டுட்டு, பல பேர் லட்சக்கணக்குல பணத்தை இழந்து ஏமாந்திருக்காங்க. உண்மையிலேயே இரிடியம்னா என்ன? அதுக்கு அப்படி ஒரு மந்திர சக்தி இருக்கா? கோயில் கலசங்கள் நிஜமாவே இரிடியமா மாறுமா? இதற்கான விடைகளை வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம்.

கண்டுபிடிப்பும் பெயர்க்காரணமும்!

இரிடியம் என்பது பிளாட்டினம் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தனிமம். இதை 1803-ம் ஆண்டு ஸ்மித்சன் டெனன்ட் (Smithson Tennant) என்பவர் லண்டனில் கண்டுபிடித்தார். பிளாட்டினத்தை உருக்கும்போது மிச்சமிருக்கும் கருப்பு நிறத் துகள்களை ஆராய்ந்தபோதுதான், அதில் இரிடியம் மற்றும் ஆஸ்மியம் என இரண்டு புதிய தனிமங்கள் இருப்பதை அவர் கண்டறிந்தார்.

இந்த இரிடியத்தின் உப்புகள் வானவில் போல பல வண்ணங்களில் இருந்ததால், கிரேக்கத் தொன்மவியலில் வானவில்லின் கடவுளான 'ஐரிஸ்' (Iris) நினைவாக இதற்கு 'இரிடியம்' என்று பெயர் வைத்தார்.

டைனோசரை அழித்த விண்கல்!

இரிடியம் பூமிக்கு அடியில் கிடைப்பதை விட, விண்கற்களில் தான் அதிகம் கிடைக்கிறது. 1970-களில் லூயிஸ் அல்வாரெஸ் மற்றும் வால்டர் அல்வாரெஸ் என்ற ஆய்வாளர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைக் கண்டுபிடித்தார்கள். பூமியின் பாறை அடுக்குகளில், 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு குறிப்பிட்ட அடுக்கில் (K-Pg boundary) மட்டும் இரிடியம் மிக அதிகமாக இருந்தது.

பூமியில் அரிதாக இருக்கும் இரிடியம், அந்த ஒரு காலகட்டத்தில் மட்டும் எப்படி இவ்வளவு அதிகமாக வந்தது? அப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது, ஒரு மிகப்பெரிய விண்கல் பூமியின் மீது மோதியிருக்கிறது என்று. அந்த விண்கல்லில் இருந்த இரிடியம் தான் பூமி முழுவதும் பரவியது. அந்த மோதலில்தான் டைனோசர்கள் உட்பட பூமியின் 70 சதவீத உயிரினங்கள் அழிந்து போயின. அதாவது, டைனோசரை அழித்த எமன் தான் இந்த இரிடியம்.

பேனா நிப் முதல் ராக்கெட் வரை!

இரிடியம் மிகவும் கடினமானது, அதிக வெப்பத்தைத் தாங்கக்கூடியது. 1834-ல் ஜான் ஐசக் ஹாக்கின்ஸ் என்பவர், பேனா முனைகள் தேயாமல் இருக்க இரிடியத்தைப் பயன்படுத்தினார். 1944-ல் வந்த புகழ்பெற்ற Parker 51 பேனாவிலும் இரிடியம் பயன்படுத்தப்பட்டது.

இதையும் படியுங்கள்:
நம் நாட்டில் அமைந்துள்ள ஒரே ஒரு மிதக்கும் தேசிய பூங்கா... எங்கு இருக்கு தெரியுமா?
Iridium History

இன்று நம் பைக் மற்றும் கார்களில் இருக்கும் ஸ்பார்க் பிளக், எல்.இ.டி டிவி பேக்லைட், மற்றும் புற்றுநோய் சிகிச்சை மருந்துகள் வரை பலவற்றில் இரிடியம் பயன்படுகிறது. முக்கியமாக, வெப்பத்தைத் தாங்க வேண்டும் என்பதற்காக சர்வதேச எடைக் கல்லை பிளாட்டினம் மற்றும் இரிடியம் கலந்த கலவையில்தான் செய்திருக்கிறார்கள்.

ரைஸ் புல்லிங் மோசடி!

மோசடிக்காரர்கள் சொல்வது போல, கோயில் கலசத்தில் இடி விழுந்தால் அது இரிடியமா மாறாது. அறிவியல் படி, காப்பர் கலசத்தில் இடி விழுந்தால் அது உருகிப்போகுமே தவிர, தனிம மாற்றம் நடந்து இரிடியமாக மாறாது. இரிடியம் காந்தத்திற்குப் பாதியளவு ஈர்க்கப்படும் தன்மை கொண்டது. 

இதை வைத்துதான் மோசடிக்காரர்கள் ட்ரிக் செய்கிறார்கள். இரும்புத் துகள்கள் கலந்த அரிசியையோ அல்லது இரிடியம் பவுடர் கலந்த அரிசியையோ காந்தம் உள்ள பாத்திரத்தின் அருகே வைத்து, அது இழுப்பது போலக் காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
‘டிரிக் or ட்ரீட்’ என்றால் என்ன?ஹாலோவீனின் மர்மப் பின்னணி!
Iridium History

இரிடியம், ஒரு அரிய வகை உலோகம், அவ்வளவுதான். அதன் விலை அதிகம் என்பது உண்மைதான், ஆனால் அதற்கு எந்த மந்திர சக்தியும் கிடையாது. அரிசியை இழுக்கும் சக்தியோ, பணத்தை மழை போலக் கொட்டும் சக்தியோ இரிடியத்திற்கு இல்லை. அறிவியல் தெரியாத அப்பாவி மக்களின் பேராசையை மூலதனமாக வைத்துதான் இந்த 'ரைஸ் புல்லிங்' மோசடிகள் நடக்கின்றன. 

வரலாறு மற்றும் அறிவியலை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் தப்பிக்கலாம். இரிடியம் என்பது அறிவியலின் அதிசயம் தானே தவிர, அலாவுதீனின் அற்புத விளக்கு அல்ல.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com