‘டிரிக் or ட்ரீட்’ என்றால் என்ன?ஹாலோவீனின் மர்மப் பின்னணி!
காலிங் மணி ஒலியோ, அல்லது கதவைத் தட்டும் சத்தமோ கேட்கும். கதவைத் திறந்தால், “ட்ரிக் ஆர் ட்ரீட்,” என்றபடி சிறுவர் தத்தம் பெற்றோருடன் நின்று கொண்டு இருப்பர். சிறார் விதம் விதமாக மாறுவேஷம் அணிந்திருப்பர் – அரசன், அரசி, அரக்கன், ஆவி, கொலையாளி, ஆடு, மாடு, இன்னும் கற்பனைக்கு எட்டிய வேடங்கள். கையில் ஒரு பை இருக்கும்.
புன்னகையுடன் இதை எதிர்பார்த்து வீட்டில் ஒரு முக்காலி அல்லது ஸ்டூலில் வைத்திருக்கும் பையிலிருந்து மிட்டாய்/சாக்லெட்டை எடுத்து ஒவ்வொரு சிறுவருடைய பையிலும் இடுவோம்.
“நன்றி!” என்றவாறு சிறார்களும், அவர்களுடைய பெற்றோரும் அங்கிருந்து அகல்வர்.
கதிரவன் மறைந்து, இரவு 7 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்வு கிட்டத்தட்ட 9 மணி வரை நடந்து கொண்டே இருக்கும்.
ஏன் இப்படிச் சிறார்கள் பலவித திகைப்பூட்டும் வேடம் அணிந்து, ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி, “ட்ரிக் ஆர் ட்ரீட்" (தந்திரம் அல்லது உபசரிப்பு) என்று கேட்கிறார்கள்? ஏன் அவர்களுக்குத் தின்பண்டம் முகமலர்ச்சியுடன் தரப்படுகிறது?
அவர்களுடன் சென்று பார்க்க வேண்டுமென்றால், நாம் நான்கைந்து தெருக்கள் செல்லவேண்டும். போவோமா?
இந்த வைபவத்துக்கு, ‘ஹாலோவீன்’ என்று பெயர். இது அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31ல் கொண்டாடப் படுகிறது.
பெரும்பாலான வீடுகளில் பலவிதமான அலங்காரப் பொம்மைகள் தென்படுகின்றன. தலையாயது ஒரு பரங்கிக்காய். அதில் கண்களும் வாயும் செதுக்கப்பட்டு, உள்ளே விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. வீட்டில் வெளி விளக்குகளும் எரிகின்றன. இந்தப் பரங்கிக்காய் இல்லாவிட்டால், எவரும் அந்த வீட்டுக் கதவைத் தட்டமாட்டார்கள்; கடந்து சென்றுவிடுவர்.
வீடுகளில் பலவித அலங்காரம் என்று சொன்னோம் அல்லவா! சில இடத்தில் பெரிதாகச் சிலந்திவலை அதில் பூதாகாரமான சிலந்தியுடன் இருக்கும். வேறிடத்தில் மனித எலும்புக்கூடுகள்-பயப்படவேண்டாம், பிளாஸ்டிக்தான்! – அமர்ந்திருக்கும்; மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும். சில எலும்புக் கூடுகள் எழு, எட்டடி உயரம்கூட இருக்கும். காற்றடைத்த பூதங்கள், பேய்கள், கல்லறைகள், ஜகஜோதியாக ஒளி பரப்பும். அச்சமூட்டக்கூடிய விதமாக ஒலிகளும், ஒளிக் கற்றைகளும் சுழன்று சுழன்று வரும்.
இதென்ன பண்டிகை? எதற்காகச் சிறுவர்கள் இப்படி உடையணிந்து ஒவ்வொரு வீடாகச் சென்று தின்பண்டம் வேண்டுகின்றனர்? வீடுகளில் ஏன் பயமுறுத்தும் வண்ணம் அலங்காரம் நடக்கிறது? இதன் மூலகாரணம் என்ன? இப்படிப்பட்ட கேள்விகள் எழுவது வியப்பல்ல. அது ஏன் என்று பார்ப்போம்.
முற்காலத்தில், அயர்லாந்தைச் சேர்ந்த கெல்ட் பழங்குடியினரின் சாம்ஹைன் பண்டிகையுடன் ஹாலோவீன் தொடர்புள்ளது என்று எண்ணுகின்றனர். அங்கு நவம்பர் முதல் தேதி புத்தாண்டு பிறக்கிறது; பனிக்காலத்துடன் தொடங்குகிறது என்று அவர்கள் நம்பினர். அச்சமயத்தில் உயிருடன் இருப்பவருக்கும் இறந்தவரும் உள்ள உலகங்களில் எல்லை மங்கி, ஆவிகள் உலவும் என்றும், அவை தங்களுடைய வீடுகளுக்கு வரும் என்றும் மரபு இருந்தது.
அந்த ஆவிகளைப் பயமுறுத்த அக்கால மக்கள் முகமூடிகளோ, மற்ற மாறுவேடங்களோ அணிந்து குன்று உச்சிகளில் சொக்கப்பனை ஏற்றி தீய ஆவிகளைப் அச்சுறுத்தி அனுப்ப முயன்றனர்.
அங்கெல்லாம் கிறித்தவம் பரவியதும், பழங்குடிப் பேகன் (Pagen) பழக்கவழக்கத்தை மாற்றி, கிறித்தவப் பண்டிகையாக மாற்றவேண்டி, எட்டாம் நூற்றாண்டில் போப் மூன்றாம் கிரிகோரி அதை அனைத்துப் புனிதர்கள் விழாவாகக் கொண்டாடவேண்டும் என்ற ஆணை பிறப்பித்தார்.
எனவே, ஆவிகளுக்கு வழிகாட்டுவதற்காகச் சில இடங்களில் மக்கள் கல்லறைகளில் மெழுகுவர்த்திகளையோ, ஜன்னலருகே லாந்தர் விளக்குகளையோ ஏற்றி வைத்தனர்.
இதுவே, அமெரிக்காவுக்கு அண்டை நாடான மெக்சிகோவில் 'டியா டி லாஸ் மியூர்டோஸ் (இறந்தோர் நாள்)' என்று அனுசரிக்கப்படுகிறது.
இறந்துபோன அன்புக்குரியவர்களின் ஆவிகளைப் தம் வீட்டைப் பார்வையிட அழைப்பதற்காக, பூக்கள், மெழுகுவர்த்திகள், உணவு மற்றும் புகைப்படங்களால் அலங்கரிக்கப்பட்ட பலிபீடங்களை குடும்பத்தினர் கட்டுகின்றனர். ஹாலோவீனிலிருந்து வேறுபட்டாலும், ‘டியா டி லாஸ் மியூர்டோஸ்’ இறந்தவர்களை விருந்து மற்றும் மெழுகுவர்த்திகளால் கௌரவிப்பதைப் பிரதிபலிக்கிறது.
ஹாலோவீன் சமயப் பண்டியாகத் தொடங்கினாலும், இடைக்காலத்தின் முடிவில் (Middle ages) மதச்சார்பற்ற ஆல் ஹாலோஸ் ஈவ் பண்டிகையும், புனித நாளான ஆல் செயிண்ட்ஸ் தினம் இரண்டும் இணைந்தன.
இப்பொழுது ஹாலோவீன் பிரிட்டனில் மதச்சார்பற்ற கொண்டாட்டமாக அனுசரிக்கப்படுகிறது. 1800களில் அமெரிக்கவில் அது தடைசெய்யப்பட்டாலும், அயர்லாந்து நாட்டிலிருந்து வந்த ஏராளமான குடியேறிகள் தங்கள் பழக்கவழக்கப்படி அதைக் கொண்டாடத் தொடங்கினர்.
ஹாலோவீன் இருபதாம் நூற்றாண்டிலிருந்து மதச்சார்பற்ற, சிறுவர் விரும்பும் சிறந்த திருநாள் ஆகி எல்லா இடத்திலும் கொண்டாடப்படுகிறது.
சிலசமயம் பெரியவர்களும் மாறுவேடம் அணிந்து அவர்களுக்கே உரித்தான முறையில் ‘ஹாலோவீன்’ பார்ட்டி கொண்டாடுகிறார்கள்.
அடேடே! நம் வீட்டுச் சிறுவர்களுடன் சென்று நாம் எடுத்துச் சென்ற பையும் நிரம்பிவிட்டது. வீட்டுக்கு வந்ததும் அவர்கள் ஒரேயடியாக இனிப்பைத் தின்று வயிற்றுவலிக்கு உள்ளாகாமலும், பங்கு பிரிப்பதில் அவர்களுக்குள் சண்டை வராமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அது போகட்டும், 'ட்ரிக் ஆர் ட்ரீட்' என்று ஏன் சொல்கிறார்கள் என்று கேட்கிறீர்கள்.
நம் வீட்டுக் கதவைத் தட்டுபவர்களைத் தந்திரமாகப் பயமுறுத்த வேண்டும் அல்லது தின்பண்டம் கொடுத்து அவர்களை உபசரிக்க வேண்டும். இப்பொழுது சிறுவர்கள் எதைக் கண்டும் பயப்படுவது கிடையாது. அப்படி நாம் பயமுறுத்தினாலும், கூட வரும் பெற்றோர் நம்மைச் சும்மா விடமாட்டார்கள். ஆகவே, யாரையும் பயமுறுத்துவதில்லை; உபசரித்து அனுப்பிவிடுகிறோம்.
அலுவலகங்களிலும் சிலர் ஹாலோவீன் தினத்தில் மாறுவேடம் அணிந்துகொண்டு வருவர். சிறந்த மாறுவேடத்துக்குப் பரிசளிப்பதும் உண்டு.
இந்த ஹாலோவீன் பெயரை வைத்து நான்கு திகில் திரைப்படங்களும் எடுக்கப்பட்டன. அவை நன்றாகவும் ஓடின.

