

மால்குடி என்ற ஊரை நாம் பல சமயங்களில் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆர்.கே.நாராயண் என்ற புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் தனது நாவல்கள் மற்றும் சிறுகதைகளில் இந்த ஊரைத் தவறாமல் குறிப்பிட்டுள்ளார். இவர் மூலமே இந்த ஊர் மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்த மால்குடி நகரம் எங்கே இருக்கிறது என்று தெரிந்துகொள்வோமா ?
நீங்கள் நினைப்பதுபோல மால்குடி என்பது நிஜமான ஒரு ஊர் அல்ல. இது புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஆர்கே.நாராயண் கற்பனையாக உருவாக்கிய ஒரு ஊராகும். கர்நாடகாவில் ஷிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள ஆகும்பே என்ற இடத்தில் அமைந்துள்ளதாக கற்பனையாக சித்தரிக்கப்படும் இந்த ஊரானது ஆர்.கே.நாராயணின் பெரும்பாலான கதைகளில் கதை நடக்கும் ஊராக சித்தரிக்கப்படுகிறது.
இந்த ஊரின் அருகில் மெம்பி காடுகளும், சரயூ ஆறும் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஆர்.கே.நாராயண் எழுதிய “ஸ்வாமி அண்ட் பிரண்ட்ஸ்” மற்றும் “மால்குடி டேஸ்” ஆகிய நூல்கள் தொடங்கி அவர் எழுதிய பல நூல்களில் மால்குடி தவறாமல் இடம் பெறுகிறது.
ஆர்.கே.நாராயண் மைசூரில் 10 அக்டோபர் 1906 அன்று பிறந்தார். Swami and Friends, The Bachelor of Arts, The English Teacher, The Financial Expert, The Guide உள்ளிட்ட ஏராளமான நாவல்களை எழுதியுள்ளார். மேலும் Malgudi Days, A Horse and Two Goats முதலான சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். பெரியவர்களுக்காக மட்டுமின்றி சிறுவர்களுக்காகவும் இவர் எழுதி முத்திரை படைத்துள்ளார்.
இவர் எழுதிய “சுவாமி அண்ட் பிரண்ட்ஸ்” என்ற நாவலில் சுவாமிநாதன் என்ற சிறுவனும் அவனுடைய நண்பர்களும் மால்குடியில் செய்யும் சேட்டைகள், பள்ளி வாழ்க்கை, நட்பு முதலான சம்பவங்களை விவரிக்கிறது. மிகச்சிறந்த சிறுவர் நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நூலானது பின்னர் 'Malgudi Schooldays' என்ற பெயரிலும் வெளிவந்துள்ளது. இந்த நூலானது சுவாமியும் சிநேகிதர்களும் என்ற தலைப்பில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு தமிழில் வெளியாகியுள்ளது.
ஆர்.கே.நாராயணன் எழுதிய மற்றொரு சிறார்களுக்கான படைப்பு “மால்குடி அட்வென்ச்சர்ஸ்” (Malgudi Adventures). சிறார்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் அடங்கிய ஒரு தொகுதி. இதில் மால்குடியைச் சேர்ந்த சிறார்களின் சாகசங்கள் இடம் பெற்றுள்ளன.
சிறிய நகரமான மால்குடியில் சிறுவர்கள் செய்யும் குறும்புத்தனங்கள் மற்றும் சாகசங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவை இப்புத்தகத்திலுள்ள கதைகள்.
மேலும் சிறார்களுக்காக ஆர்.கே.நாராயணன் எழுதிய புத்தகம் காட்ஸ், டீமன்ஸ் அண்டு அதர்ஸ் (Gods, Demons and Others) என்ற புராணக் கதைகள் அடங்கிய புத்தகம். இப்புத்தகம் சுவாரஸ்யமான எளிய நடையில் சிறார்கள் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வண்ணம் எழுதியுள்ளார். இவருடைய இளைய சகோதரர் ஆர்.கே.லக்ஷ்மன் ஒரு பிரபலமான கார்ட்டூனிஸ்ட் ஆவார்.
“தி கைடு” (The Guide) என்ற நாவலை 1958 ல் வெளியிட்டார். இந்த நாவலுக்கு 1960 ஆம் ஆண்டு சிறந்த ஆங்கில நூல் என்ற அங்கீகாரம் அளித்து சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. சாகித்ய அகாதமி விருது பெற்ற முதல் ஆங்கில நூல் என்ற பெருமையும் இந்த நூலுக்கு உண்டு.
ஆர்.கே.நாராயண் அவர்களின் இலக்கியப் பங்களிப்பைப் பாராட்டி 1964 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. லீட்ஸ் பல்கலைக்கழகம் (1967), மைசூர் பல்கலைக்கழகம் (1976) மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் (1973) முதலான பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தன.
இவருடைய இலக்கியப் பணிகளை கௌரவிக்கும் விதமாக 1986 முதல் 1992 வரை ராஜ்ய சபாவில் (Rajya Sabha) எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். இந்திய அரசு 2001 ஆம் ஆண்டில் இவருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கி கௌரவித்தது. இவர் 13 மே 2001 அன்று சென்னையில் காலமானார்.
இந்த பதிவைப் படிப்பதன் மூலம் இலக்கிய உலகின் மிகச் சிறந்த கற்பனை நகரமான மால்குடியின் உண்மை பின்னணி, ஆர்.கே.நாராயணனின் வாழ்வியல் சாதனைகள் மற்றும் இந்திய இலக்கிய வரலாறு குறித்த தெளிவான பார்வையையும் ஆழமான அறிவையும் பெறலாம்.