Interstellar படத்தின் இறுதிக்காட்சிக்கு நமது புராணக் கதைதான் ஆதாரமா?

interstellar & Ramayanam
interstellar & Ramayanam

நம்முடைய புராணங்களான ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் வியக்கத்தக்க, விளக்கமுடியாத பல கதைகள் உண்டு. அப்படி கூறப்பட்டிருக்கும் வியக்கத்தக்க, வெறும் கற்பனை என்ற ஒற்றை வார்த்தை சொல்லி ஒதுக்கிவிட முடியாது. ஈரேழு லோகங்கள், புஷ்பக விமானம், மிதக்கும் கற்கள், இறந்தவரை உயிர்தெழ வைக்கும் சஞ்சீவினி மூலிகை, நாகாஸ்திரம், பிரம்மாஸ்திரம் இன்னும் பல நம்பமுடியாத விஷயங்கள் இப்புராணக் கதைகளில் பேசப்படுகின்றன.

அதில் என்னை அதிசயிக்க வைத்தது காலப்பயணம் மற்றும் மல்ட்டி யுனிவர்ஸ் பற்றிய கதைகள். ஒருவேளை இது எல்லாம் சாதாரண கற்பனை கதை என்றே வைத்துக்கொண்டாலும், பல ஆண்டுகள் கழித்து இப்போது நாம் விவாதித்து கொண்டிருக்கும் சில விஷயங்களை அப்பொழுதே எப்படி துல்லியமாக அவர்களால் விளக்கியிருக்க முடியும் என்பது வியப்பாகத்தான் உள்ளது.

சரி இப்போது கதைக்குப் போகலாம். ராமாயணத்தில் வரும் கதை இது.

ராமரின் ஆயுள் முடியப்போவதால், எமதர்மர், ராமரின் உயிரை வைக்குண்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு அவரைத் தேடி வருகிறார். ஆனால், எந்நேரமும் ராமருடன் அனுமன் இருப்பதால் எமனால் அவருடைய பணியைச் செய்ய முடியாமலேயே போகிறது. இதைப் புரிந்துகொண்ட ராமர் பூமியில் ஒரு வெடிப்பு ஏற்படுத்தி தன்னுடைய மோதிரத்தை அதனுள் போட்டுவிடுகிறார். பின் அனுமனை அழைத்து, அந்த மோதிரத்தை எடுத்து வரும்படி கூறுகிறார். ஆஞ்சநேயரும் அம்மோதிரத்தை தேடி பாதாளலோகமான நாகலோகத்திற்குச் செல்கிறார். அங்கே வாசுகியைச் சந்திக்கிறார். வாசுகியிடம் வந்த விஷயத்தைக் கூறுகிறார். வாசுகியோ எந்த ராமருடைய மோதிரம் வேண்டும் என்று கேட்கிறது. இதை கேட்டு குழப்பமடைகிறார் அனுமன்.

HANUMAN
HANUMAN

பிறகு வாசுகி அனுமனை ஓர் இடத்திற்கு அழைத்துச் செல்கிறது. அங்கே மலைப்போல மோதிரங்கள் குவிந்துக்கிடக்கின்றன. எல்லாமே ராமரின் மோதிரங்களாகும்.

“ஆஞ்சநேயா! இங்கு இருக்கும் ஒவ்வொரு மோதிரமும் ஒவ்வொரு காலச்சக்கரத்தைக் குறிக்கிறது. ஒவ்வொரு காலச்சக்கரத்திற்கும் நான்கு யுகங்கள் உண்டு. அதில் ராமர் அவதரித்தது திரேதா யுகமாகும். ஒவ்வொரு முறை மோதிரம் வந்து விழும்போதும் அதைத் தேடி ஒரு குரங்கு இங்கே வரும். அப்போது சரியாக ராமர் இறந்துவிடுவார். இதுபோன்று பல காலசக்கரங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு முறையும் ராமரின் இறப்பும், பிறப்பும் நடந்துகொண்டேயிருக்கிறது. அதனால் இந்த காலசக்கரமும் முடிவடையாமல் திரும்ப திரும்ப நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது” என்று வாசுகி விளக்கம் அளிக்கிறது.

மல்ட்டி யுனிவர்ஸ் என்ற அறிவியல் தத்துவமும் பல உலகங்கள் உள்ளதையே கூறுகிறது. நாம் இருக்கும் உலகம் போன்று பல உலகங்கள் இருக்கலாம். இங்கே உயிருடன் இருக்கும் உயிரினம் அங்கு அழிந்து போயிருக்கும் வாய்ப்புகள் உண்டு. அங்கே உயிருடன் இருக்கும் உயிரினம் இங்கே அழிந்து போயிருக்கலாம். இப்படி ஒவ்வொரு யுனிவர்சும் ஒவ்வொரு முடிவுகளைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இவற்றிற்கெல்லாம் ஆதாரம் இல்லை என்றாலும், இதுபோன்ற விஷயங்களை நம் புராணத்தில் அதிகமாக விளக்கி சொல்லியிருப்பதே ஆச்சர்யமான ஒன்றாக உள்ளது.

காகுட்மி அரசன் தனது மகளான ரேவதிக்கு சரியான மணமகனை தேடிக்கொண்டிருந்தார். பிரம்ம தேவரே அனைவரையும் படைத்திருப்பதால் அவரிடமே கேட்கலாம் என்று ரேவதியும், காகுட்மியும் பிரம்மனைக் காண பிரம்மலோகம் செல்கின்றனர். அங்கே பிரம்மன் இசையினை கேட்டுக்கொண்டிருக்க, அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அது முடியும் வரை காத்திருக்கிறார்கள். பிறகு பிரம்மனிடம் தான் வந்த நோக்கத்தைக் கூற பிரம்ம தேவனோ சிரிக்கிறார். நீ எனக்காக இங்கு காத்திருந்த சில நிமிடங்கள் பூமியில் பல யுகங்கள் கழிந்திருக்கும். காகுட்மி பார்த்து வைத்திருந்த இளவரசர்களும், அவர்களுடைய பேரன்கள் கூட இறந்திருப்பார்கள் என்று கூறுகிறார். பின்பு காகுட்மி பூமியை அடையும்போது பூமியில் பலராமருக்கு திருமண வயது வந்திருக்கும், அவரே ரேவதிக்கு ஏற்ற துணை என்று பிரம்மன் கூறுகிறார்.

Brahma
Brahma
இதையும் படியுங்கள்:
உலகெங்கிலும் தேர்தல் எப்படி, எப்போது நடக்கின்றது தெரியுமா?
interstellar & Ramayanam

ஒவ்வொரு கிரகத்திலும் நேரம் வேறுப்படும் என்பது இதில் கூறப்பட்டிருக்கிறது. பிரம்மலோகத்தில் சில நிமிடங்கள் ஆவதற்குள் பூலோகத்தில் பல யுகங்கள் கழிந்துவிடுகின்றன!

Interstellar படத்தின் இறுதிக் காட்சியில் தன் மகளுக்குச் செய்துகொடுத்த சத்தியத்தின்படி அவளைக் காண தந்தை விண்வெளி பயணம் முடித்துவிட்டு வருவார். மகள் முதுமை அடைந்து இறக்கும் தருவாயில் இருப்பார். ஆனால், தந்தைக்கு வயதே ஆகியிருக்காது, இளமையாகவேயிருப்பார். ஏனெனில் விண்வெளியில் காலம் மெதுவாக ஓடும். பூமியில் நேரம் ஓடுவதும் விண்வெளியில் நேரம் ஓடுவதற்கும் வித்தியாசம் உண்டு. அதையே விளக்கியிருப்பார்கள்.

இப்படி சில கதைகளைக் கேட்கும்போது கண்டிப்பாக புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்துமே கற்பனை என்று கூறமுடியாது என்றே தோன்றுகிறது. நம் முன்னோர்களுக்குத் தெரிந்த விஷயங்களில் சிறிது அளவுகூட நமக்கு தெரிந்திருக்காதோ என்றே தோன்றுகிறது. இன்னும் நம் புராணங்களைப் புரட்டி பார்த்தால், எண்ணற்ற ரகசியங்களையும், அதிசயங்களையும் தெரிந்துகொள்ளலாம் என்பதில் ஐயமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com